Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

தென்னிந்திய குலங்களும் குடிகளும்
ந.சி. கந்தையா




1. தென்னிந்திய குலங்களும் குடிகளும்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. தென்னிந்திய குலங்களும் குடிகளும்


தென்னிந்திய குலங்களும் குடிகளும்

 

ந.சி. கந்தையா

 

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : தென்னிந்திய குலங்களும் குடிகளும்
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

தென்னிந்திய குலங்களும் குடிகளும்


முன்னுரை
மக்களினம் சம்பந்தமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் இந் நூல் அரை நூற்றாண்டுக்கு முன் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல்களைத் தழுவிச் சுருக்கி எழுதப்பட்டதாகும். தென்னிந்திய மக்கள் எல்லோருக்கும் பொதுவான சில பழக்கவழக் கங்கள் உள்ளன. அவ் வகை வழக்கங்களை விரித்துக் கூறாது ஒவ்வொரு கூட்டத்தினரிடையும் சிறப் பாகக் காணப்படுகின்றவற்றையே விரித்துக் கூறி யுள்ளோம். மேல் நாட்டுக் கல்வி, நாகரிகம் என்ப வற்றின் நுழைவால் விரைந்து மறைந்து கொண்டு வரும் தென்னாட்டு மக்களின் பழைய பழக்கவழக் கங்களை அறிந்து கொள்வதற்கு இந் நூல் வாய்ப் பளிக்கும். அரை நூற்றாண்டுக்குள் இந் நூலிற் கூறப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள் பல மறைந்து விட்டன; சில மறைந்துகொண்டு வருகின்றன.

ந.சி. கந்தையா

தென்னிந்திய குலங்களும் குடிகளும்
தோற்றுவாய்
ஹெக்கல் படைப்பின் வரலாறு (History of Creation) என்னும் நூலில் இப் பூமியின் தரை, நீர்ப்பரப்புக்கள் தொடர்ந்து மாற்றமடைந்து வந்த தன்மைகளை ஆராய்ந்து கூறியுள்ளார். அவர் கூற்று வருமாறு: “இந்துமாக் கடல் முன் ஒரு பூகண்டமாக விருந்தது. அது சந்தாத் தீவுகள் (Sunda Islands) முதல் (ஆசியாவின் தென் கரை வழியாக) ஆப்ரிக்காவின் கிழக்குக் கரை வரையில் பரந்திருந்தது. முற்காலத்தில் மக்களின் பிறப்பிட மாக விளங்கிய இத் தரைக்கு இஸ்கிளாத்தர் (Sclater) இலெமூரியா எனப் பெயரிட்டுள்ளார். இப் பெயர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரங்கு போன்ற மக்கள் காரணமாக இடப்பட்டது. இலெமூர் என்பதற்கு தேவாங்கு என்பது பொருள். இலெமூரியா, மக்களுக்குப் பிறப்பிடமாக வுள்ளது என்னும் பெருமை யுடையது.” மலாய்த் தீவுக் கூட்டங்கள் முற்காலத்தில் இரு பிரிவுகளாக விருந்தன வென்று வலேசு (Wallace) என்னும் இயற்கை வரலாற்றியலார் ஆராய்ந்து கூறியுள்ளார்.

மலாய்த் தீவிலும் தென்னிந்தியாவிலும் வாழும் மக்கள் சிலரின் பழக்கவழக்கங்கள் ஒரே வகையாக வுள்ளன. போர்ணியோத் தீவில் வாழும் (இ)டைக்கர் மரமேறும் வகையும் தென்னிந்தியாவில் ஆனை மலையில் வாழும் காடர் மரமேறும் வகையும் ஒரே வகையாகவுள்ளன. காடரும் திருவிதாங்கூர் மலை வேடரும் தமது முன் பற்களை உடைத்து அல்லது அராவிக் கூராக்கிக் கொள்வர். ஆண்கள் பதினெட்டு வயதடை யும் போதும் பெண்கள் பத்து வயதடையும்போதும் இவ்வாறு செய்து கொள்கின்றார்கள். மலாயாவில் யக்குன் என்னும் மக்கள் இவ்வாறு செய்து கொள்கின்றார்கள். மலாய்த் தீவுக்கூட்டங்களில் பெண்கள் பருவமடையுங் காலத்தில் பற்களை அராவிக் கறுப்பு நிறமூட்டுகின்றனர். தென்னிந்திய காடர் முடியில் சீப்பணிந்து கொள்வது போலவே மலாக் காவில் வாழும் நீக்கிரோயிட்டு இனத்தைச் சேர்ந்த மக்களும் சீப்புகளை முடியில் அணிந்து கொள்கின்றனர். கலிங்க நாட்டினின்றும் சென்று மலாயாவிற் குடியேறிய மக்கள் கிளிங்கர் எனப்படுகின்றனர்; இக் காலத் தில் அப் பெயர் தமிழர்களை மாத்திரம் குறிக்க வழங்குகின்றது.

பழங் காலத்தில் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்பட்ட தாவரங்களும் விலங்குகளும் ஒரே வகையின வென்று ஆல்ட்காம் முடிவு செய்து தென்னிந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் தொடுத்துத் தரை யிருந்த தெனக் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்கக் கரையிலுள்ள நெத்தாவிலும் திருச்சிராப்பள்ளி பாறையடுக்குகளிலும் காணப்பட்ட சில உயிர்களின் கற்படி உருவங்கள் (Fossils) ஒரே வகையாகக் காணப் பட்டன. இவையும் இவை போன்ற காரணங்களும் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் இணைக்கப்பட்டிருந்தன என்னும் கொள்கையை வலியுறுத்துகின்றன. ஆஸ்திரேலியர் பூமராங் என்னும் வளை தடிகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு இலக்கின் மீது வளை தடியை எறிந்தால் அது இலக்கில்பட்டு மீண்டு வருகின்றது. வளைதடி தென்னிந்திய மறவரால் பயன்படுத்தப்படுகின்றது. கள்ளரின் திருமணத்தில் மணமகள் இல்லத் தில் விருந்து நடக்கும் போது மணமகன் வீட்டாரும் பெண் வீட்டாரும் வளைதடிகளை மாற்றிக் கொள்வர்.

ஆஸ்திரேலியரும், பப்புவர், புதுக்கினியர், சந்தா தீவினர், மலாயர், மயோரியர் (நீயூசீலந்து மக்கள்) முதலியோரும் ஒரே இனத்தவர்களாகக் காணப்படுகின்றனர். தென்னிந்திய ஆதிகுடிமக்கள் மக்களினப் பிரிவுப் படி ஆஸ்திரேலிய மக்களாகக் காணப்படுகின்றனர். இவ் வாராய்ச்சி யினால் ஒரு காலத்தில் நியுசீலந்து முதல் மலாய்த் தீவுகள் இந்தியா மாலை தீவுக் கூட்டங்கள் வரையில் ஒரு இன மக்கள் வாழ்ந்தார்கள் என்பதும், அவ் வினத்தைச் சேர்ந்தவர்களே தென்னிந்திய ஆதிக்குடியினரிற் சில ரென்பதும் தெரிய வருகின்றன. முண்டா, சாந்தால் மக்களும் இவ் வினத்தைச் சேர்ந்தவராகக் கொள்ளப்படுவர். இவ்வாறு தர்ஸ்டன் தனது ‘தென்னிந்திய சாதிகளும் இனங்களும்’ என்னும் நூலிற் கூறியுள்ளார்.

இந்தியாவில் மிகப் பழங்காலத்தில் மூன்று இன மக்கள் வாழ்ந் தார்கள். (1) மத்திய தரை மக்கள். இவர்களே திராவிட இனத்தவர் எனப் படுவோர். (2) நிகிரிட்டோ மக்கள், (3) ஆதி ஆஸ்திரேலோயிட்டு மக்கள். நிகிரிட்டோ வகை தென்னிந்திய மலைச் சாதியினராகிய இருளர், காடர் களிடையே காணப்படுகின்றது. ஆதி ஆஸ்திரேலோயிட்டு வகை முண்டா, சாந்தால், கொல் முதலிய மொழிகளைப் பேசும் மக்களிடையே காணப்படுகின்றது. இம் மக்கள் ஆரியரின் வருகைக்குமுன் வட மேற்குத் திசையினின்று வந்தவர்களாகலா மென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இவ் வினத்தினரையே மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கொல்லாரி யர் எனக் கூறியுள்ளார்கள். ஆதி ஆஸ்திரலோயிட்டு இனத்தவர்களே மலாய்த் தீவுகள், பர்மா, சயாம் முதலிய நாடுகளின் ஆதி மக்களாவர். இவர்கள் இப்படி இந்தியாவை அடைந்தார்கள் என்று கூற முடியவில்லை. ஆஸ்தி ரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் நில இணைப்பு இருந்த காலத்தில் இவர்கள் இந்தியாவை அடைந்திருக்கலாமெனச் சிலர் கூறுவர். இந்திய மக்கள் (People of Inida) என்னும் நூல் எழுதிய ஹெர் பெட் இரிஸ்லி இந்தியாவில் தொடக்கத்தில் திராவிட மக்கள் வாழ்ந் தார்கள் என்றும், பின்பு பல்வேறு இனத்தவர்கள் இம் மக்களோடு வந்து கலந்தார்கள் என்றும் கொண்டு இந்திய இனத்தவர்களை, சித்திய திராவிடர், ஆரிய திராவிடர், மங்கோலிய திராவிடர், திராவிடர் முதலிய பிரிவுகளாகப் பிரித்தார். திராவிட மக்களுக்கும் ஆஸ்திரலோயிட்டுகளுக்கும் சில ஒற்றுமைகள் காணப்படும். தமிழ் மக்கள் நெளிந்த கூந்தலை அழகாகக் கொள்கின்றனர். இலக்கியங்களிலும் நெளிந்த கூந்தல் அழகாகவே கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் ஆதிக் குடிகளின் தொகை இந்திய சனத்தொகையில் 1.3 பகுதி இவர்கள் பெரும்பாலும் வங்காளத்துக்கும் பீகாருக்கும் இடையில் வாழ்கிறார்கள்.

‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்னும் இந்நூல் இந்திய மக்கட் கூட்டத்தினரின் பழக்கவழக்கங்களை பிற மக்கட் கூட்டத்தின ரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு நோக்கி இன ஒற்றுமை வேற்றுமை காண்பதற்கு உதவியளிக்கும்.
* * *

அகமுடையான்: தமிழ்நாட்டிலே உழவு தொழில் செய்யும் ஒரு கூட்டத்தினர் அகமுடையார் எனப்படுகின்றனர். அவர்கள் வேளாண் மக்கள் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுவர். இப் பெயர் வேளாளப் பள்ளிகள், குறும்பர்களையும் குறிக்கச் சில மாகாணங்களில் வழங்கும். அகமுடையான் என்பதற்கு வீடு அல்லது நிலமுடையவன் என்பது பொருள். அகமுடையாரின் ஒரு பிரிவினர் அகம்படியார் எனப்படுவர். அகம்படியான் என்பதற்கு உள்ளே இருப்பவன் என்பது பொருள். அவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லது கோயில்களில் வேலை புரிவோர். தஞ்சாவூர் அகமுடையார் தெற்கத்தியார் எனப்படுவர். அகமுடையானின் பட்டப்பெயர் சேர்வைக் காரன். கள்ளர், மறவர், அகம்படியார் என்னும் மூன்று வகுப்பினர்களுக்கிடையில் திருமணக் கலப்பு உண்டு. மறவ அகம்படிய திருமணக் கலப்பினால் தோன்றினோர் அகமுடையார் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

அகம்படியான்: அகமுடையான் பார்க்க.

அக்கினி: ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்ளாத குறும்பர் கோலர் (Gollar) என்பார் அக்கினி எனப்படுவர். பள்ளிகள் தம்மை அக்கினி குலத்தவர் எனக் கூறுவர்.

அச்சன்: இது தந்தை அல்லது பிரபு என்னும் பொருள் தரும் பெயர். பாலைக்காட்டு அரச குடும்பத்தினருக்கு அச்சன் என்னும் பட்டப்பெயர் வழங்கும். கள்ளிக் கோட்டை அரசனின் மந்திரி பாலைக்காட்டு அச்சன் எனப்படுவான்.

அச்சு வெள்ளாளர்: இது பட்டணவர் (மீன்பிடிகாரர்) சிலருக்கு வழங்கும் சாதிப்பெயர்.

அடிகள்: இவர்கள் அம்பலக்காரரில் ஒரு பிரிவினர்; இவர்கள் பூணூலணிவதுண்டு. இவர்கள் பதினெட்டு நாள் மரணத் தீட்டுக் காப்பர்; தம் சாதியினரே தமக்குக் குருக்களாக விருப்பர்.

அடுத்தோன்: இதற்கு அடுக்க நிற்போன் என்பது பொருள். மலையாளத்து அம்பட்டருள் ஒரு பிரிவினராகிய காவுத்தீயர் அடுத் தோன் எனப்படுவர். அம்ப (கிட்ட) ஸ்த (நிற்றல்) என்னும் வட சொற் களின் சிதைவே ‘அம்பட்ட’ என்று கருதப்படுகின்றது.

அம்பட்டன்: தமிழ்நாட்டில் அம்பட்டப் பெண்கள் மருத்துவச்சி வேலை பார்ப்பர். செகந்நாத ஆலயத்தில் அம்பட்டர் சமைக்கும் உணவுக்குத் தீட்டு இல்லை. அக்கோயிலில் பூசை செய்யும் பூசாரி அம்பட்டன். அவன் சமைத்துக் கடவுளுக்குப் படைத்த உணவைப் பிராமணரும் அமுது கொள்வர். சேலத்திலே கொங்கு வேளாளரின் திருமணத்தில் அம்பட்டனே புரோகிதனாகவிருந்து மணக்கிரியைகள் புரிந்து தாலி கட்டுவான். தலைப் பூப்பெய்திய அம்பட்டப் பெண் பதினொரு நாட்களுக்குத் தனியாக இருக்க விடப்படுவாள். ஒவ்வொரு நாட் காலையிலும் கோழி முட்டை வெள்ளைக் கருவோடு கலந்த நல்லெண்ணெய் குடிக்கும்படி அவளுக்குக் கொடுக்கப்படும். அம்பட் டன் கொள்ளிக்குடம் உடைத்தற்கு நீர்க் குடத்தைத் தாங்கிக் கொண்டு இறந்தவனின் மகனுடன் சுடலைக்குச் செல்வான். அம்பட்டரின் சாதித் தலைவன் பெரியதனக்காரன் எனப்படுவான். மயிர்வினை செய்தல், வைத்தியம் பார்த்தல், வாத்தியமொலித்தல் என்னும் மூன்று தொழில்கள் அம்பட்டருக்குரியன. பண்டிதன். பரியாரி, குடிமகன், நாசுவன், மயிர் வினைஞன் என்பன அம்பட்டனைக் குறிக்க வழங்கும் பெயர்கள்.

திருவிதாங்கூரில் இவர்களுக்குப் பிராணோபகாரிகள் என்னும் பெயர் வழங்கும். பல சாதியினருக்குக் கிரியைகள் புரிவதால் இவர்க ளுக்கு இப் பெயர் வழங்குகின்றது. விளக்குத் தலையர் என்னும் அம்பட்டப் பிரிவிலிருந்து அரசருக்கு மயிர்வினை செய்யும் அம்பட்டன் தெரிந்தெடுக்கப்படுவான். திருவிதாங்கூர் அம்பட்டர் சிலர் அரசரால் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கர், வைத்தியர் முதலிய பட்டங்கள் பொறிக்கப்பட்ட பட்டையங்களை வைத்திருக்கின்றனர். மலையாள அம்பட்டரின் சொத்துரிமை மருமக்கள் தாய முறையானது. அம்பட்டப் பெண்கள் பெரும்பாலும் பச்சை குத்திக்கொள்வர். இவர்களில் ஒருவன் இறந்து போனால் உடல் புதைக்க அல்லது எரிக்கப்பட்டபின் சுற்றத்தவ ரில் இருவர் ஒரு கயிற்றை இழுத்துப் பிடிக்க இறந்தவனின் கிட்டிய உறவினன் கயிற்றை வெட்டி விடுவான். இக் கிரியைக்குப் பந்தமறுப்பு என்று பெயர். இதற்கு இறந்தவனின் உறவு மற்றவர்களிலிருந்து வெட்டப் பட்டது என்பது பொருள்.

அம்பலக்காரன்: அம்பலக்காரர் கள்ளச் சாதியினருக்கு இன முடைய ஒரு வகுப்பினர். இவர்கள் வேளாண்மை செய்வதோடு கிராமக் காவலும் புரிவர். இவர்களின் சாதிப் பட்டப்பெயர் சேர்வைக்காரன். முத்திரையன், மளவராயன், முத்தரசன், வன்னியன் என்பனவும் இவர்கள் பட்டப்பெயர்களாக வழங்கும். இவர்கள் குலத்தலைவன் காரியக்காரன் எனப்படுவன். இப் பதவி பரம்பரையாகத் தந்தையிலிருந்து மகனுக்கு வருவது. காரியக்காரனின் சேவுகன் குடிப்பிள்ளை எனப்படுவான். வலை யரினின்றும் பிரிந்து வாழும் ஒரு பிரிவினரே அம்பலக்காரர் எனக் கருதப்படுவர்.

அம்பலவாசி: மலையாளத்துக் கோயிற் பணிவிடைக்காரர் அம்பலவாசிகள் எனப்படுவர். இவர்களுள் பூணூலணிவோர், பூணூ லணியாதோர் என இரு பிரிவினருண்டு. இவர்களின் உரிமை முறை மருமக்கள் தாயம்; மக்கள் தாயமும் உண்டு. அம்பலவாசிப் பெண்கள் பிராமணருடன் அல்லது சொந்தச் சாதியாருடன் சம்பந்தங் கொள்வர்.

அரவா: இவர்கள் கொல்லா (Golla), வேள்மா என்னும் தெலுங்குச் சாதிகளுள் ஒரு பிரிவினர். தெலுங்கு நாட்டிற் குடியேறிய வேளாளரும் இடையரும் அரவா எனப்படுவர். அரவா என்பது அரைவாய் (அரைப் பேச்சு?) என்பதன் திரிபு எனக் கருதப்படுகின்றது.

அறுத்துக்கட்டாத: பறையருள் ஒரு பிரிவினர் அறுத்துக்கட்டாத என்னும் பெயர் பெறுவர். இவர்களுள் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதில்லை. அறுத்துக் கட்டாத என்பதற்கு வாழ்விழந்த பெண் மகள் மறுமணஞ் செய்து கொள்ளாத என்பது பொருள்.

ஹடியர்: இவர்கள் தமிழ்ப் பறையர். தெலுங்கு மாலர், மாதிகர் போன்ற தாழ்ந்த ஒரிய வகுப்பினர்.

ஆசாடியர்; இவர்கள் பெல்லாரி மாகாணத்திற் காணப்படும் ஹோலிய அல்லது மால சாதியினரின் ஒரு பிரிவினர். இவர்களிடையே பெண்கள் நாட்டியமாடுவோரும் ஒழுக்கத் தளர்வுடையோருமாவர்.

ஆசாரி: ஆசாரி அல்லது ஆச்சாரி என்பது கம்மாளரின் பட்டப் பெயர். மலையாளத்தில் கம்மாளப் பிராமணன் ஆசாரி எனப்படுவான். கம்மாளன் நாயருக்குப் பன்னிரண்டடி தூரத்திலும், பிராமணருக்கு முப்பத்திரண்டடி தூரத்திலும் வரின் இவர்களுக்குத் தீட்டுண்டாகும். கம்மாளன் அளவுகோலைக் கையிற் பிடித்துக்கொண்டு இவர்களை மிக அணுகினாலும் அல்லது இவர்கள் வீடுகளுள் நுழைந்தாலும் தீட்டு உண்டாகமாட்டாது.

ஆண்டி: ஆண்டிகள் தமிழ் வகுப்பைச் சேர்ந்த பிச்சைக்காரர். இவர்கள் பண்டாரங்களிலும் தாழ்ந்தோர். கோயில்களிலும் மடங்களி லும் வேலைசெய்வோர் முறையே கோவிலாண்டிகள் மட ஆண்டிகள் எனப்படுவர். திருநெல்வேலி ஆண்டிகளுள் திருமணக் காலத்தில் பெண் ணின் கழுத்தில் தாலி கட்டுகின்றவள் மணமகனின் உடன்பிறந்தாளா வள். ஆண்டிகளுள் கோமண ஆண்டி, இலிங்கதாரி, முடவாண்டி, பஞ்சத்துக் காண்டி எனப் பல பிரிவுகளுண்டு. இப் பிரிவுகள் பஞ்சத்துக் காண்டி, பரம்பரை ஆண்டி என்னும் இரு பிரிவுகளிலடங்கும்.

ஆதிசைவர்: இவர்கள் வேளாளருள் ஒரு பிரிவினர்; ஓதுவார் வகுப்பைச் சேர்ந்தோர். இலிங்கங்கட்டுவோர் வீரசைவர் எனப்படுவர். வீரசைவ மதத்தினரல்லாத சைவர்களே ஆதி சைவராவர்.

ஆத்திரேயர்: அத்திரி இருடி கோத்திரத்தினர்.

ஆரி: இது மராத்தி என்பதன் மறுபெயர். ஆரிகள் தென் கன்ன டம், பெல்லாரி, அனந்தப்பூர் முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர். ஆரிய என்னும் பெயரே ஆரி எனச் சிதைந்து வழங்குகின்றது. இவர்கள் பூணூலணிந்து கொள்வர்; மராத்தி அல்லது கொங்கணி பேசுவர்.

இடிகர்: இவர்கள் தெலுங்கு நாட்டில் கள்ளிறக்கும் வகுப்பினர். தமிழ் இடிகர் கத்தியைப் பின்னால் செருகுவர்; தெலுங்கர் வலது தொடையிற் கட்டுவர்; தமிழ் இடிகர் பனையிலும் தென்னையிலும் கள்ளிறக்குவர்; தெலுங்கர் பனையிலும் ஈந்திலும் கள் எடுப்பர். தெலுங் கர் கள்ளின் செல்வியாகிய எல்லம்மா என்னும் தெய்வத்தை வழிபடுவர்.

இடியர்: திருவிதாங்கூரில் அவலிடிக்கும் சாதியினர் இடியர் எனப்படுவர்.

இடையன்: ஆடு மாடு மேய்ப்போர் இடையர் எனப்படுவர். இவர் களுள் வைணவர் நாமம் தரித்துக்கொள்வர். தம்மை யாதவர் எனக் கூறிக் கொள்வர். மறவ நாட்டு இடையருள் மணமகளின் உடன் பிறந்தாள் மணமகளுக்குத் தாலி கட்டுவள்.

இராசபுத்திரர்: வடநாட்டிலுள்ள காணியாளரும் இராணுவ சேவை செய்வோருமாகிய சாதியினர் இராசபுத்திரர் என்னும்பெயர் பெறுவர். இவர்களின் சிறு கூட்டத்தினர் வேலூர், சித்தூர். திருப்பதி முதலிய இடங்களில் காணப்படுகின்றனர். இவர்களின் பெயர் சிங் என்று முடியும்.

இராசு: இவர்கள் இராணுவத் தொழில் புரியும் காப்பு, கம்மா, வேள்மா முதலிய சாதி வகுப்பினரினின்றும் தோன்றியவர்களாகலாம். திருமணக் காலத்தில் இவர்கள் வாளை வணங்குவர். போர்வீரர் என்று அறிவித்தற்கு வாள் அடையாளமாகும். வட ஆர்க்காடு. கடப்பா முதலிய இடங்களில் இவர்கள் பெரும்பாலும் காணப்படுவர். இவர்கள் பேசும் மொழி தெலுங்கு. பெண்கள் முட்டாக்கிட்டுக் கொள்வர். ஆண்கள் தலையின் எந்தப் பகுதியையும் மழித்துக் கொள்வதில்லை. திருமணக் காலத்தில் காசியாத்திரை போதல் தாலி தரித்தல் போன்ற கிரியைகள் இவர்களுக்கு உண்டு.

இராஸ்பு: தென் கன்னடத்திலுள்ள கொங்கணம் பேசும் வணிகரும் வேளாண்மை செய்வோரும் இப் பெயர் பெறுவர். இவர்கள் பூணூலணிவர். பெண்கள் பூப்படையுமுன் திருமணம் செய்துகொள்வர். விதவைகள் மறுமணம் செய்துகொள்வர்.

இருளர்: இவர்கள் நீலகிரியில் வாழும் மலைச் சாதியினர். இருளர் என்பதற்கு இருண்ட நிறத்தினர் என்பது பொருள். இருளர் தமிழின் சிதைவாகிய மொழியைப் பேசுவர். இவர்களுள் ஆண்களும் பெண்களும் கணவன் மனைவியராக நிலைத்திருந்து வாழ்தல் பெண்களின் விருப் பத்தைப் பொறுத்தது. இறந்தவர்களின் உடல் சப்பாணி கட்டி இருக்கும் நிலையில் வைத்துப் புதைக்கப்படும். ஒவ்வொரு சமாதியின் மீதும் நீருள் இருந்து எடுக்கப்பட்ட கல்கொண்டு வந்து வைக்கப்படும். அக் கற்கள் தேவ கோட்டக் கற்கள் எனப்படுகின்றன. இறகுகளைந்த ஈசல்களை இவர்கள் உண்பர்; நோய்க் காலங்களில் மாரியம்மாவை வழிபடுவர்; ஏழு கன்னிமாரையும் ஏழு மண் விளக்கு வடிவில் வழிபடுவர்.

இல்லம்: நம்பூதிரிப் பிராமணரின் வீடு இல்லம் எனப்படும். நாயர் வகுப்பினரின் ஒரு பிரிவினரும் இல்லம் எனப்படுவர். தமிழ்நாட்டுப் பணிக்கர் சிலர் தம்மை இல்லம், வெள்ளாளர் எனக் கூறிக்கொள்வர்.

இளமகன்: மதுரை மாவட்டத்திலே திருப்பத்தூரில் உழவுத் தொழில் செய்வோர் இப் பெயர் பெறுவர். இவர்கள் கள்ளச் சாதி யினரை ஒத்தவர்கள். இவர்களின் தலைமைக்காரன் அம்பலன் எனப் படுவான்.

இளையது: இவர்கள் மலையாளத்துச் சாதிமான்களுள் ஒரு பிரிவினர். இளையதின் வீடு நம்பூதிரியின் வீட்டைப் போல இல்லம் எனப்படும். ஒவ்வொரு இளையதின் தோட்டத்திலும் நாகக்கா உண்டு. இவர்கள் நாயருக்குக் குருக்களாக விருப்பர். மலையாளத்திலுள்ள நாகக் கோயில்களுக்கும் குருக்கள் இவர்களே. இவர்களின் மூத்த மகன் மாத்திரம் திருமணம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் அம்பலவாசி அல்லது நாயர்ப் பெண்களைச் சம்பந்தம் வைத்துக்கொள்வர். கைம் பெண்கள் கூந்தல் களைவதில்லை; அணிந்திருக்கும் ஆபரணங்களைக் களைந்து கணவனின் பிணத்தின்மீது இடுவர். இஃது உடன்கட்டை ஏறும் வழக்கத்துக்குப் பதிலாக விருக்கலாம். மூத்த மகனுக்குப் பாட்ட னின் பெயரும், மூன்றாவது மகனுக்குத் தந்தையின் பெயரும் இடப்படும். இவ்வாறே பெண்களுக்கும் பெண்வழிப் பெயர்கள் இடப்படுகின்றன. பிள்ளைப் பேற்றுக்குப் பின் பெண்கள் தொண்ணூறு நாட்கள் தீட்டுக் காப்பர். ஆண்கள் பூணூலணிவர். பெண்கள் அகத்துளவர் எனப்படுவர். நம்பூதிரிப் பெண்களுக்கும் இப்பெயர் வழங்கும்.

இறங்காரி: மராட்டி பேசும் சாயத்தொழில் செய்வோரும் தையற் காரரும் இப் பெயர் பெறுவர். இவர்கள் தெலுங்கு மாகாணங்களிலும் காணப்படுகின்றனர். இவர்களின் பட்டப்பெயர் இராவ்.

இறவுலோ: இவர்கள் ஒரிய கோயில்களில் பணிவிடை செய் வோர். இவர்கள் கோயில்களில் சங்கு ஊதுவர்; பூ விற்பர். இவர்களுள் சிறுபிள்ளைத் திருமணம் கட்டாயம். இப்பொழுது இவர்கள் வண்டி ஓட்டுதல், மண் வேலை செய்தல் முதலிய தொழில்கள் புரிவர்.

இறையர்: இவர்கள் எசமானின் இறை (வீட்டுக்கூரை) வரையும் செல்லக்கூடிய மலையாளத்துச் செருமான் என்னும் சாதியினர்.

ஈழவர்: ஈழவர், தீயர் என்போர் மலையாளம் கொச்சி என்னும் இடங்களிற் காணப்படுகின்றனர். மத்திய திருவிதாங்கூரின் தென்புறங் களில் இவர்கள் ஈழவர் என்றும், வட, மத்திய பகுதிகளில் சேரவர் என்றும் அறியப்படுவர். திருவிதாங்கூர் சனத்தொகையில் 17 சதத்தினர் இவர்களாவர். யாழ்ப்பாணம், ஈழம் என்னும் பெயர் பெற்றிருந்ததெனத் தெரிகிறது. ஈழவர் அங்கிருந்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றனர். சேரவர் என்பது சேவுகர் என்பதன் திரிபு. மலையாளத்தில் வழங்கும் கப்பற் பாட்டுகளில் சேவுகர் என்னும் பெயர் காணப்படுகின்றது. தென் திருவிதாங்கூரில் வாழும் ஈழவர் முதலியார் எனப்படுவர். புலையர் அவர் களை மூத்த தம்பிரான் என அழைப்பர். அவர்கள் தொடக்கத்தில் தென் னையைப் பயிரிடும் தொழில் செய்து வந்தனர். கி.பி.824இல் அவர் களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பட்டையத்தினால் அவர்களுக்குத் தலை யாரி இருந்தானென்றும், அவர்கள் வீட்டு நிலங்களில் தென்னையைப் பயிரிடுதல் அவர்களின் தொழில் என்றும் தெரிகின்றன. தமது வேண்டு கோளுக்கிணங்கி ஈழவர் மேற்குக் கடற்கரையில் சென்று குடியேறினார்க ளென்று சீரிய கிறித்தவர் கூறுவர். மத்திய காலங்களில் இவர்கள் அரசரின் கீழ் போர் வீரராக அமர்ந்திருந்தார்கள். கொல்ல மாண்டு 973இல் மரண மான இராமவன்மன் காலத்திலும் பெருந் தொகை ஈழவர் இராணுவ சேவையில் இருந்தார்கள். ஓண விழாக் காலங் களில் இவர்கள் இரண் டாகப் பிரிந்து நின்று போலிப் போர் செய்வது வழக்கம். ஈழவரின் அடிமைகள் வடுவன்கள் எனப்படுவர். முற்காலங் களில் இவ் வடிமைகள், உடையவனால் விற்கவும்கூடிய முறையாக விருந்தனர். ஈழவரின் குரு வகுப்பினர் சாணார் எனப்பட்டனர். சாணார் என்பது சான்றோர் என்னும் சொல்லின் திரிபு. சாணாருக்கு அடுத்த படியிலுள்ளவன் பணிக்கன்.

ஒவ்வொரு இல்லத்திலும் பல சிறிய வீடுகள் உண்டு. இவைகளுள் முக்கியமுடையது அறப்புறம். இது நடுவிலிருக்கும். அதன் இடப்புறத்தி லுள்ள வீடு வடக்கெட்டு எனப்படும். இது பெண்கள் தங்கும் பகுதியும் சமையலறையுமடங்கியது. அறப்புறத்தின் முன்னால் முற்றம் இருக்கும். அதனைச் சூழ்ந்து கிழக்குப்புறத்திலிருப்பது கிழக்கெட்டு எனப்படும். வீடுகள் கிழக்கை நோக்கியிருக்கும். பாதை கிழக்கெட்டுக்குக் சிறிது தெற்கே யிருக்கும். சில இல்லங்களில் அறப்புறத்துக்கு இடப்புறத்தில் தெற்கெட்டுக் காணப்படும். அது அக் குடும்பத்தில் இறந்தவர்களின் ஞாபகமாக இடப்பட்டதாகும். அதனுள்ளே ஒரு பீடம், சங்கு, பிரம்பு, சாம்பல் முடிச்சு முதலியன வைக்கப்பட்டிருக்கும். பெண்கள் காதில் நாகபடம், கையில் வெண்கலக்காப்பு, மூக்கில் மூக்குத்தி, நத்து முதலியன அணிவர். நாயர்ப்பெண்கள் இடது கன்னத்தில் கொண்டை முடிவர்; ஈழவப் பெண்கள் நெற்றிக்கு நேரே முடிவர். இவர்களின் குலதெய்வம் பத்திரகாளி. பத்திரகாளிக்கு ஆடு, கோழி முதலியன பலியிடப்படும். இவர்களுக்கிடையில் மக்கள் தாயம், மருமக்கள் தாயம் என்னும் இரு வழக்குகளுமுண்டு. சம்பந்தம் நடைபெறுவதன் முன் பெண்களுக்குத் தாலி கட்டுக் கலியாணம் நடைபெறுவதுண்டு. இவ் வழக்கம் இப்பொ ழுது அருகி வருகின்றது. தாலிகட்டுக் கலியாண மென்பது போலியாக நடத்தப்படும் ஒருவகைக்கலியாணம். தாலி கட்டுச் சடங்கின் விபரம் வருமாறு:

கிராமத்திலுள்ள முதியவர்கள் மணமகள் வீட்டில் கூடியிருப் பார்கள். பின்பு வீட்டின் தென் கிழக்கு மூலையில் பலாத் தூண் நடப் படும். அங்கு கூடியிருக்கும் கணிகன் (சோதிடன்) முழுத்தம் என்று கூறியவுடன் அங்கு வந்திருக்கும் தட்டான் பெண்ணின் தந்தையிடம் பொன் மோதிரம் ஒன்றைக் கொடுப்பான். அதை அவன் பெற்று அங்கு வந்திருக்கும் உவாத்தி(குருக்கள்)யிடம் கொடுக்க அவன் அதைத் தூணில் கட்டுவான். தச்சன், கணிகன், தட்டான், தக்கணைகள் பெற்றுச் செல்வர். பந்தல் வீட்டின் தென்புறத்தில் இடப்பட்டிருக்கும். திருமணத்துக்கு முதல்நாள் பெண் முழுகி மண்ணான் (வண்ணான்) கொடுக்கும் கஞ்சி தோய்த்த ஆடையை உடுப்பாள். அதன்பின் கலாதி என்னும் சடங்கு தொடங்கும். அப்பொழுது நூலிற் கோக்கப்பட்ட வெள்ளி மோதிரம் அவள் மணிக்கட்டிற் கட்டப்படுகிறது. கலாதி என்பது கிராமப் பெண்கள் மணமகள் எதிரில் நின்று பலவகை வேடிக்கைப் பாடல் களைப் பாடுவதாகும். இதன்பின் பெண்கள் மரப்பொம்மைகளின் மத்தியில் இருத்திப் பாடுவார்கள். இந் நிகழ்ச்சி காஞ்சிரமாலை எனப் படும். அடுத்த நாள் அவள் தானியக் கதிர்களாலலங்கரித்த கதிர் மண்ட பத்தில் இருத்தப்படுவாள். அப்பொழுது தட்டான் மின்னு என்னும் தாலியைக் குருக்களின் கையிற் கொடுப்பான். அப்பொழுது மணமகனும் மணமகளும் உடுத்துக்கொள்வதற்கு ஆடை கொடுக்கப்படும். அவ் வாடைகளிலிருந்து எடுத்துத் திரித்த நூலில் மின்னுக் கட்டப்படும். அப்பொழுது பெண்ணின் தாய் வாயிலில் காத்து நிற்பாள். மணமகன் வருதலும் அவள் அவன் கழுத்தில் பூமாலையிடுவாள். பின் உவாத்தியும் அவன் மனைவியும் ஆடைகளை மணமகனுக்கும் மணமகளுக்கும் கொடுப்பார்கள். பின்பு கிராமத் தலைவன் தென்னங் குருத்துக்களை மணமகனின் இடுப்பில் செருகுவான். இது ஈழவரின் தொழிலைக் குறிப்பதாகலாம். முற்காலத்தில் தென்னங் குருத்துக்குப் பதில் வாள் செருகப்பட்டது. மணமகன் மணமகள் கழுத்தில் மின்னுவைக் கட்டு வான். வந்திருப்போர் அவர்களுக்குப் பல பரிசுகளை வழங்குவர். பெண்ணின் கையில் காப்பாகக் கட்டப்பட்ட கயிறு நான்காவது நாள் உவாத்தியால் அறுக்கப்படும். இக் கலியாணம் பெண் பூப்பு அடைவதன் முன் நடைபெறுகிறது. பெண் பூப்பு அடைந்தபின் தாலி கட்டியவன் அல்லது வேறு ஒருவன் அவளைச் சம்பந்தம் வைத்துக்கொள்ளலாம். தாலி கட்டியவனே அவளின் கணவனாக இருக்க வேண்டு மென்னுங் கட்டாயமில்லை. வடதிருவிதாங்கூரில் நடக்கும் சம்பந்தத்தின் விபரம் வருமாறு:

தாலி கட்டியவனல்லாத ஒரு மணமகன் தனது இன சனத்தாருடன் மணமகளின் வீட்டுக்குச் செல்கின்றான். மணமகனைச் சேர்ந்தவர்கள் பெண்ணின் தாய்க்கு ஒரு தொகை பணம் கொடுப்பார்கள். பின்பு மணமகன் பெண்ணுக்குப் பத்துச் சக்கரங்கள் வைத்து உடை கொடுப் பான். பணம் தாயைச் சேர்கின்றது. அது அம்மாயிப் பணம் எனப்படும். பெண்ணின் தாய் மகளுக்கு பாக்கு வெட்டி, சுண்ணாம்புக் கரண்டகம், அரிசி நிரப்பிய பெட்டி, ஒரு பாய் என்பவற்றைக் கொடுப்பாள். கணவன் பெண்ணுக்குச் சிவப்பு ஆடையால் முட்டாக்கிட்டு அவளைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வான். இவ் வழக்கம் குடி வைப்பு எனப்படும்.

பிள்ளைப் பேற்றுக்குப் பின் 3, 5, 9வது நாட்களில் பெண் குளித்து மண்ணாத்தி கொடுக்கும் மாற்றை உடுப்பாள். இருபத்தெட்டாவது நாள் பிள்ளைக்குப் பெயர் இடப்படும். பின்பு பிள்ளைக்கு இரும்புக் காப்புகள் இடப்படும். சோறு ஊட்டும் சடங்கு ஆறாவது மாதம் நடைபெறு கின்றது. அப்பொழுது இரும்புக் காப்புகள் கழற்றப்படுகின்றன. இவற்றுக்குப் பதில் வெள்ளி அல்லது தங்கக் காப்பு இடப்படும். ஏழு ஆண்டுகள் நிறைவதற்கு முன் பிள்ளைக்குக் காது குத்தப்படுகிறது. இறந்த வர்களின் உடல் சுடப்படுகின்றது. சுடலையில் கொள்ளிக் குடம் உடைத் தல் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன. இரண்டாவது நாள் பிண்டம் வைக்கப்படும். ஐந்தாவது நாள் சாம்பல் அள்ளப்படுகிறது. இவர்களுக்குப் பதினைந்து நாட்கள் தீட்டு உண்டு.

உரோணா: மலைகளில் வாழும் ஒரிய உழவர் தொழில் செய் வோர் இப் பெயர் பெறுவர். இவர்களுள் விதவைகள் மறுமணஞ் செய்து கொள்வர். வாழ்விழந்த பெண்கள் பெரும்பாலும் கணவனின் இளைய சகோதரனை மணப்பர். இவர்களின் சாதித் தலைவன் பாதோ, நாய்க்கோ எனப்படுவான். இக் கூட்டத்தினருள் உண்டாகும் பிணக்குகளைக் சாதித் தலைவன் தீர்த்து வைப்பான். ஆண்கள் பூணூலணிவர். இவர்கள் வழிபடும் கிராம தெய்வங்கள் தகுறாணி எனப்படுகின்றன. இவர்களின் சாதிப் பட்டப் பெயர் நாய்க்கோ.

எட்டரை: இவர்கள் தமிழ்நாட்டுத் தட்டாரிலொரு பிரிவினர்.

எம்பிரான்: இது மலையாளத்திற் குடியேறிய துளுவப் பிராம ணருக்குப் பெயராக வழங்குகின்றது.

எரவாளர்: இவர்கள் மலையாளத்திலே காடுகளிலுள்ள பதி என்னுங் கிராமங்களில் காணியாளரின் கீழ் கூலி வேலை செய்யும் மக்கள். இவர்களில் பெண்கள் தலைப்பூப்பு எய்தினால் தனியே இடப்பட்ட கொட்டிலில் ஏழு நாட்கள் விடப்படுவார்கள். ஏழாவது நாள் நீராடிய பின்பே அவர்கள் குடிசைகளுள் நுழைவார்கள். எரவாளர் வெற்றிலை யும் பாக்கும் வைத்து உயர்ந்தவர்களுக்குத் திருமணத்தை அறிவிப்பர். உயர்ந்தோர் அவர்களின் திருமணச் செலவுக்கு வேண்டிய நெல் முதலியன கொடுப்பர். இவர்கள் பேய், பிசாசுகளிருப்பதை நம்புவார்கள். மந்திரவாதி பேய் பிடித்தவர்களிடமிருந்து பேயை ஓட்டுவான். அவர்கள் மந்திரவாதி பனை ஓலையில் எழுதிக் கொடுக்கும் இயந்திரங்களை நூலாற் சுற்றிக் கழுத்தில் அணிவர். இவர்களின் முக்கிய தெய்வங்கள் ஏழு கன்னிப் பெண்களும், கறுப்பனும்.

எழுத்தச்சன்: எழுத்தச்சன் என்பதற்குப் பண்டிதன் என்பது பொருள். இப் பெயர் மலையாளப் பள்ளிக்கூட ஆசிரியருக்குப் பெயராக வழங்குகின்றது.

ஹெக்காடி (Heggadi): கன்னட இடையரும் உழவரும் இப் பெயர் பெறுவர்.

ஏராடி: இது இடையனைக் குறிக்கும் பெயர். ஏர் நாட்டை ஆண்ட நாயர்ச் சாதியாரின் பெயர். ஏர் நாடு என்பது எருதுநாடு என்பதன் திரிபு.

ஏராளன்: இது செறுமான் சாதியின் ஒரு பிரிவு. செறு - வயல்.

ஏனாதி: இது முதன்மையுடைய அம்பட்டன் அல்லது மந்திரி யைக் குறிக்கும். சாணாருக்கும் இப் பெயர் வழங்கும். ஏனாதி நாயனார் மூலம் தமக்கு இப் பெயர் வந்ததென அவர் கூறுவர்.

ஒக்கிலியன்: பயிர்த் தொழில் செய்யும் கன்னடத் தொழிலாளர் ஒக்கிலியர் எனப்படுவர். அவர்களின் சாதித் தலைவன் பட்டக்காரன் எனப்படுவான். பருவமடையாத ஒக்கிலியச் சிறுவர் பருவமடைந்த பெண்னை மணக்க நேர்ந்தால் கணவனின் கடமைகளை அவன் தந்தை நிறைவேற்றுவான். வியபிசாரக் குற்றத்துக் குட்பட்டவர்கள் ஒரு கூடை மண்ணைத் தலையில் வைத்துக் கிராமத்தைச் சுற்றி வருதல் வேண்டும். அப்பொழுது சின்னப் பட்டக்காரன் பின்னால் நின்று அவர்களைப் புளியம் மிலாறுகளால் விளாசுவான். பெண்களுக்கு முதற்பிள்ளை பிறந்த பின் சீதனம் கொடுக்கப்படும். இறந்தவரின் பிணத்தை எடுத்துச் செல்லும்போது பழம், காசு, சோறு முதலியன எறியப்படும். இறந்தவ னின் மனைவி சுடலைக்குச் சென்று தனது கைவளைகளை உடைத் தெறிவாள். இவர்களுக்கு மரணத் தீட்டு பதினெட்டு நாட்களுக்குண்டு.

ஒட்டியர் அல்லது ஒட்டர்: இவர்கள் கிணறு தோண்டுதல், குளங்களுக்கு அணைகட்டுதல் போன்ற வேலைகள் செய்வர். ஒரிசா மாகாணத்தினின்றும் வந்த காரணத்தினால் இவர்கள் ஒட்டர் எனப் பட்டனர். இவர்களின் திருமணக் கட்டுப்பாடுகள் நுகைவுடையவை. பெண்களும் ஆண்களும் விரும்பினால் மணத் தொடர்பை நீக்கிவிட லாம். இரு பாலினரும் பதினெட்டு முறைக்கு அதிகம் திருமணம் செய்து கொள்ளுதல் கூடாதென்னும் கட்டுப்பாடுண்டு.

ஒஸ்டா: திருவிதாங்கூரில் வாழும் மகமதியரின் அம்பட்டர் ஒஸ்டா எனப்படுவர்.

ஒருநூல்: விதவைகள் மறுமணஞ் செய்யாத மறவர் வகுப்பில் ஒரு பிரிவினர் இப் பெயர் பெறுவர்.

ஓச்சர்: இவர்கள் பிடாரி கோயிலுக்குப் பூசை செய்யும் குலத்தினர். இவர்களின் கொடி உடுக்கை. செங்கற்பட்டுப் பகுதிகளில் ஓச்சர் தேவடியாட்களை ஆட்டும் நட்டுவத் தொழில் புரிவர். ஓச்சன் என்னும் சொல் ஓசை என்னும்அடியாகப் பிறந்தது. அதற்கு மேளமடித்துத் துதிப் பாடல்கள் பாடுவோன் என்பது பொருள்.

ஓடட்டு: மலையாளத்தில் கோயில்களுக்கும் பிராமணரின் வீடுகளுக்கும் செங்கல் செய்யும் நாயர் வகுப்பினர் இப் பெயர் பெறுவர்.

ஓதுவார்: இவர்கள் பண்டாரங்களுள் ஒரு பிரிவினர். இவர்கள் தேவாரம் திருவாசகம் முதலிய பாடல்களைக் கோயில்களில் பண் ணோடு பாடுவர்.

ஹோலியர்: இப் பெயர் பறையன், புலையன் என்னும் பெயர் களுக்கு நேரானது. இவர்கள் தென் கன்னடத்தில் காணப்படுகின்றார்கள்.

கங்கேயர்: இவர்கள் திருவிதாங்கூரில் வாழும் இடையரில் ஒரு பிரிவினர்.

கஞ்சகாரர்: இவர்கள் செம்பு, பித்தளை, வெண்கலம் முதலியவை களில் வேலை செய்வோர்.

கடசன்: திருநெல்வேலிப் பக்கங்களில் சூளை இடுவோர் இப் பெயர் பெறுவர். இவர்களுள் நாட்டரசன், பட்டங்கட்டி என இரு பிரிவினருண்டு. இவர்கள் வேட்டுவரிலும் பார்க்க உயர்ந்தோர். இவர்கள் கோயில்களுள் நுழைதல் கூடாது. இவர்களுக்குத் தனி அம்பட்டனும் வண்ணானுமுண்டு.

கடையர்: பள்ளரில் ஒரு பிரிவினர் கடையர் எனப்படுவர். இவர்கள் இராமேசுவரத்திலே சிப்பி ஓடுகளைச் சூளை வைத்துச் சுண்ணாம்பு செய்கிறார்கள். இக் கூட்டத்தினரிலிருந்து முத்துகுளிப்ப தற்கு ஆட்கள் தெரிந்தெடுக்கப்படுவார்கள். மதுரை திருநெல்வேலிக் கோட்டங்களில் இவர்கள் கிறித்துவ மதத்தைத் தழுவியுள்ளார்கள். பரவரை ஒப்ப இவர்களும் பிரான்சிஸ் சேவியரால் மதமாற்றம் செய்யப் பட்டவர்களாவர்.

கணக்கன்: இது கணக்கு என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயர். இவர்கள் அரசரால் கிராமக் கணக்கர்களாக நியமிக்கப்பட்டவர்க ளாவர். கர்ணம் அல்லது கணக்கன் என்னும் பெயர்கள் பட்டையங்களிற் காணப்படுகின்றன. இவர்களுக்குப் பட்டப்பெயர் வேளான். கர்ணங் களுள் கை காட்டிக் கர்ணம் என்னும் ஒரு பிரிவு உண்டு. இவர்களுள் மருமகள் மாமியுடன் (கணவனின் தாய்) பேச அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், கைகாட்டி (சமிக்கையால்) பேசுவர். பெண்ணின் தாய் பெண் ணுக்குத் தாலிகட்டுவள்.

கணியன்: இப் பெயர் கணி என வழங்குகின்றது. பழைய ஆவணங் களில் கணி என்னும் சொல் காணப்படுகின்றது. கணிகன், கணி என்னும் பெயர்கள் பணிக்கனையும் அரசனையும் குறிக்கும். பணிக்கன் என்னும் சொல் பணி (வேலை) என்னும் அடியாகப் பிறந்தது. பணிக்கனுக்கு இராணுவத் தொழில் பயிற்றும் வேலை உரியது என்று கேரள உற்பத்தி என்னும் நூல் கூறுகின்றது. வடக்கே கணிகன் நம்பிக் குருப்பு எனவும் படுவான். கணியரில் கணியர், தீண்டர் என இரு பிரிவினருண்டு. முதற் பினிவினர் சோதிடம் சொல்வோர். இரண்டாவது வகுப்பினர் குடை செய் வோரும் பேயோட்டுவோரு மாவர். கணியன் முட்டினால் களரிப்பணிக் கனுக்குத் தீட்டு உண்டாகின்றது. களரிப் பணிக்கர் முற்காலத்தில் போர்ப் பயிற்சி அளிக்கும் ஆசிரியராக விருந்தனர். பிடிச்சுகளி, வாட்சிலம்பம், பாரிசாதம் களி, கோலடி முதலிய ஆடல்கள் இன்றும் களரிகளில் நடை பெறுகின்றன. புது வருடப்பிறப்புக்குப் பின் மலையாளத்தில் நடை பெறும் சால் (உழவு) கிரியையில் ஒவ்வொருவரும் அவ்வக் கிராமத்துக் குரிய கணிகனிடம் ஆண்டுப் பலனைக் கேட்டறிந்த பின் அவனுக்குச் சிறிது பொருள் வழங்குவது மரபு. பலன் பனை ஓலையில் எழுதிக்கொடுக் கப்படும். இது விட்டுணுபலன் என்று சொல்லப்படுகின்றது. பாழூரி லிருக்கும் கணி மிகப் புகழ் பெற்றவன். கணிகளுள் பெண் பூப்படையு முன் தாலிகட்டுக் கலியாணமும் பின் சம்பந்தமும் நடைபெறும். அவர்களுட் பலர் பாண்டவரைப்போல ஒரே மனைவி உடையவராக விருப்பர். விதவை மறுமணம் செய்துகொள்வாள்.

பணிக்கருள்ளும் கணிகருள்ளும் பெண்கள் ஒரே காலத்தில் பல கணவரை மணக்கும் வழக்கம் உண்டு. கிராமத்தின் நாயர்த்தலைவன் களரிமூப்பன் எனப்படுவான். கணிகளில் பொதுவன் அல்லது கணிக குருப்புக்கள் அம்பட்டராவர். இவர்கள் பிணத்தோடு இடுகாட்டுக்குச் செல்வார்கள். பொதுவர் தீண்டாக் கணிகளுக்கு மயிர்வினை செய்யார். கணியர் கோவில்களில் நுழையக் கூடாது. இவர்கள் இருபத்து நான்கடி தூரத்தில் வந்தால் பிராமணருக்குத் தீட்டு உண்டாகிறது.

கண்கெட்டு: இவர்கள் மாடாட்டிகள்; தெலுங்கு பேசுவர்; வைணவ மதத்தினர். இவர்களின் குரு வைணவ அடையாளமாகிய சங்கு சக்கரம் முதலியவைகளை இவர்கள் தோள்கள்மீது சுடுவர். பெருமாள் மாட்டுக்காரன் அல்லது பெருமாள் எருதுக்காரன் என்னும் மாடாட் டிகள் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படு கின்றனர்.

கத்திரி: பட்டு நெசவு செய்வோர் கத்திரிகளாவர். பட்டில் வேலை செய்வதால் இவர்கள் பட்டுநூற்காரர் எனவும் அறியப்படுவர். இவர்கள் தமது வமிசம் காத்த வீரிய அருச்சுனனிலிருந்து வருவதாக கூறுவர். பெண்கள் மறுமணம் செய்துகொள்வர். இவர்கள் தாய்மாமன் பிள்ளையை மணப்பதில்லை. பெண்கள் பூப்பு அடையுமுன் மணம் முடிக்கப்படுவர். மணமாகும் போது ஆண்கள் பூணூல் தரிப்பர்.

கபேரர்: இவர்கள் கன்னட மீன் பிடிக்கும் வகுப்பினர். இவர்க ளுள் கௌரி (பார்வதி) மாக்கள், கங்கைமாக்கள் என இரு பிரிவினர் உண்டு. இவ் விரு வகுப்பினரிடையும் திருமணக்கலப்பு நடப்பதில்லை; ஆனால் உண்பனவு, தின்பனவு உண்டு. இவர்களுள் பெண்கள் மறு மணஞ் செய்வதில்லை. திருமணத்தின்போது பிராமணன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவான். விதவை மறுமணம் செய்து கொள்ளுவ ளாயின் விதவை ஒருத்தியே பெண்ணுக்கு தாலி கட்டுவள். இவ் வகுப்பின ருள் சில பெண்கள் தேவடியாட்களாகக் கோயிலுக்கு நேர்ந்து விடப்படு கிறார்கள். இறந்தவரின் உடல் புதைக்கப்படுகிறது.

கம்பலத்தான்: தொட்டியான் பார்க்க.

கம்பன்: இது ஓச்சர் குலத்தின் பெயர்.

கம்மா: இவர்கள் தமிழரினின்றும் பிரிந்து சென்ற காப்புகள், இரெட்டிகள், வேள்மாக்கள் என்போராவர். இப்பொழுது இவர்கள் இராசு என்று அறியப்படுகின்றனர். மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களிற் காணப்படும் காப்புக்களும், கம்மாக்களும் விசயநகரத் தேசாதிபதிகள் காலத்தில் இராணுவ சேவை புரிந்தோராவர். கம்மாப் பெண்களுட் சிலர் முட்டாக் கிடுவர். கம்மாக்களில் மணமகன் பெரும் பாலும் மணமகளிலும் இளையவனாக விருப்பான். 22 வயதுள்ள பெண் தனது குழந்தை மணவாளனை ஒக்கலையில் எடுத்துச் சென்ற குறிப்பு ஒன்று சென்னை ஆட் கணக்கு (Madras Census) என்னும் நூலிற் காணப் படுகின்றது. உருசிய நாட்டிலும் பருவமடைந்த பெண்கள் தமக்குக் கணவராக நிச்சயிக்கப்பட்ட ஆறு அல்லது ஏழு வயதுள்ள கணவன் மாரை கூட்டிக்கொண்டு திரிவது வழக்கம். விதவைகள் பெரும்பாலும் மறுமணம் புரிவதில்லை.

கம்மாளர், கம்சாலர்: இவர்கள் தெலுங்குக் கொல்லர்.

கம்மாளன்: கம்மாளன் கண்ணாளன் எனவும் படுவான். பிராம ணரைப் போலவே கம்மாளரும் விசுவகு, சனகன், அகிமான், யனாதனன், உபேந்திரன் முதலியவர்களைத் தமது கோத்திர முதல்வர்களாகக் கொள்வர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாட்டாண்மைக்காரன் உண்டு. நாட்டாண்மைக்காரனுக்கு மேலே ஐந்து வீட்டு நாட்டாண்மைக்காரன் அல்லது ஐந்து வீட்டுப் பெரிய கைக்காரன் உண்டு. இறந்தவர்களின் உடல் குந்தியிருக்கும் நிலையில் சமாதி வைக்கப்படும். சில சமயங்களில் பிரேதங்கள் எரிக்கப்படுகின்றன. இவர்களின் குலதெய்வங்கள் மீனாட்சி அம்மன், கோச்சடைப் பெரிய ஆண்டவன், பெரிய நயினார் முதலியன. ஏழு கன்னிப்பெண் தெய்வங்களையும் இவர்கள் வழிபடுவர். ஏழு கன்னிப் பெண் தெய்வங்களை வழிபடுவோர் மாதர் வகுப்பு எனப்படுவர். கோச்சடைப் பெரிய ஆண்டவன் என்னும் பெயர் கோச்சடைப் பெரிய பாண்டியன் என்பதன் திரிபு. இவர் விட்டுணு கோச்சடைப் பெரிய நயினார் சிவன் எனவும் படுவர். கம்மாளர் தாம் விசுவ கன்மாவின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவர். கி.பி. 1013இல் உள்ள ஆதாரங்களால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கொள்ளப்பட்டார்களென்றும் அவர்கள் கிராமத்தின் ஒரு பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்தார்களென்றும் தெரிகின்றன. சோழ அரசருள் ஒருவன், அவர்களை வீடுகளில் சங்கு ஊதவும், மேளம் அடிக்கவும், மிரிதடிதரிக்கவும், வீட்டுக்குச் சாந்து பூசவும் அனுமதித்தான். இவ் வகையைச் சேர்ந்த கம்மாளருக்கு ஆசாரி என்னும் பட்டப் பெயருண்டு.

கம்மாளர் (மலையாளத்துக்): இவர்கள் பூணூலணிவதில்லை. இவர்கள் தம்மைத் தீட்டுச்செய்யும் சாதியினர் என ஏற்றுக்கொள்வர். கோயில்களிலும் பிராமணர் இல்லங்களிலும் இவர்கள் நுழைதல் ஆகாது. இவர்களில் உயர்ந்தோர் ஆசாரிகள் எனப்படுவர். இவர்களில் ஆண்கள் பலர் ஒரு பெண்ணை மனைவியாகக் கொள்வர். நாயர்களைப் போல இவர்களுக்கும் தாலிகட்டுக் கலியாணமுண்டு. தாலி கட்டுக்கலி யாணத்தில் பெண்ணின் சாதகத்துக்கு ஏற்ற கணவன் தெரியப்படுவான். தாலிகட்டு நடந்த பின் கணவன் தனது ஆடையி லிருந்து ஒரு நூலை எடுத்து “கட்டு அறுந்து விட்டது” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராது போய்விடுவான். இவர்களுக்குத் தனிப்பட்ட நாவிதன் உண்டு. இவர்களின் குலதெய்வங்கள் தீக்குட்டி, பறக்குட்டி, காலபைரவன் முதலியன. இவர்களுள் கல்ஆசாரி, மரஆசாரி, மூசாரி (பித்தளை வேலை செய்பவன்) கொல்லன், தட்டான், தோற்கொல்லன் எனப் பல பிரிவுக ளுண்டு. கல்லாசாரி முதலிய முதல் ஐந்து வகுப்பினருக்கிடையில் பெண் கொடுத்தல் உண்பனவு தின்பனவு உண்டு. தோற்கொல்லன் இவர்களி னும் தாழ்ந்தவனாவன். இவர்களின் உரிமை வழி மருமக்கள் தாயம். இவர்களின் நாவிதனுக்கு குருப்பு என்றும் தச்சர் வில்லாசான் எனவும் அறியப்படுவர். இவர் முற் காலத்தில் திருவிதாங்கூர் அரசினர் படைக்கு வில்லுச் செய்து கொடுத்தனர். கி. பி. 9ஆம் நூற்றாண்டில் கம்மாளர் மலையாளத்தில் இருந்தார்கள் என்பதற்கு சீரிய கிறித்தவர்களின் பட்டையம் ஒன்று சான்று தருகின்றது. கம்மாளரைப் பரசுராமர் கேரளத் துக்குக் கொண்டு வந்தாரென்றும் பெருமாள்களுள் ஒருவர் அவர்களை வண்ணாருள் திருமணம் செய்யும்படி கட்டளையிட்டமையால் அவர்கள் இலங்கைக்குச் சென்றுவிட்டார்க ளென்றும் கன்னபரம் பரைக் கதைக ளுண்டு. கம்மாளனின் வீடு கொட்டில் எனப்படும். அவை ஓலைக்கற்றை களால் வேயப்பட்ட சிறு குடிசைகளாகும். பெண்கள் நாயர்ப்பெண்க ளணியும் அணிகளைப் போன்றவற்றை அணிவர். மூக்குத்தி, நத்து முதலிய மூக்கு அணிகளை அணிவதில்லை. வீடு கட்டி முடிந்ததும் ஆசாரி மார் குடிபுகும் கிரியை செய்வார்கள். அதில் பால் காய்ச்சுவது முதன்மை யான கிரியை. தென் திருவிதாங்கூரில் இவர்கள் ஈழவரிலும் உயர்ந்தவர் களாகக் கருதப்படுவர். பெண்களுக்குத் தாலி கட்டுக் கலியாணம் நடந்தபின் வாழிப்பு என்னும் கிரியை நடத்தப்படு கிறது. இதனால் தாலிகட்டினவனுக்கும் பெண்ணுக்கு முள்ள தொடர்பு நீக்கப்படுகிறது. ஈழவரைப் போலவே பெண்கள் மின்னு என்னும் தாலிதரிப்பர்.

கரணா: கஞ்சம், ஒரிசா மாகாணங்களில் வாழும் கர்ணம் (கணக்கன்) சாதியினர் கரணா எனப்படுவர். இவர்கள் யயாதிகேசரி என்னும் ஒரிசா நாட்டு அரசனால் (கி.பி. 447-526) வடநாட்டினின்றும் எழுத்தாளராக கொண்டுவரப் பட்டவர்கள். விதவைகள் மறுமணம் செய்வதில்லை. முட்டாக்கிடும் கரணோப்பெண்கள் கோசா வழக்கத் தைக் கைக்கொள்வர். பருவமடைந்த பெண்கள் சகோதரனுக்கு முன்னால் தானும் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கலவாந்து : இவர்கள் தென்கன்னடம் தெலுங்கு நாடுகளில் வாழும் பாடல் ஆடல் மாதராவர்.

கவுண்டர்: சேலம் அரசினர் அறிக்கையில் கவுண்டர் உழு தொழில் செய்வோர் எனக்குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமது பெயரினிறுதியில் கவுண்டன் என்னும் பெயரைச் சேர்த்தெழுதுவர்.

கழைக்கூத்தாடி: கம்பங்கூத்தாடி.

கள்ளமூப்பன்: இவர்கள் மலையாளக் கம்மாளரின் ஒரு பிரிவினர். மலையாளத்தில் கம்மாளர் தீட்டு உண்டாக்கும் வகுப்பினர். கள்ள மூப்பன் கோயிலின் மதிலுக்கு உட்பட்ட வெளிவீதி வரையிற் செல்ல லாம். இவர்களின் விதவைகள் மறுமணம் புரிவதில்லை. இவர்களின் புரோகிதன் அம்பட்டன். அவன் மணமகன் வீட்டிலிருந்து பெண்ணின் வீடுவரையும் சங்கு ஊதிச் செல்வான்.

கள்ளர்: கள்ளர் என்பதற்குக் கொள்ளையடிப்போர் என்பது பொருள். இவர்கள் பெரும்பாலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை முதலிய பகுதிகளிற் காணப்படுவர். பெண்களும் ஆண்களும் காதில் துளை செய்து காது தோளில் முட்டும்படியான காதணிகளை அணிவர். இவர் களின் தலைமைக்காரன் அம்பலக்காரன் எனப்படுவான். இவர்களின் தாய் நாடு தொண்டைமண்டலம் அல்லது பல்லவர் நாடாகும். புதுக் கோட்டை அரசர் இன்றும் தொண்டைமான் எனப்படுவர். கள்ளர் குறும்பரில் ஒரு பிரிவினர். படையினின்றும் கலைக்கப்பட்டதும் இவர்கள் கொள்ளையடிக்கும் தொழிலை கைக்கொண்டனர். திருமணத் தில் மணமகனின் சகோதரி பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவாள். கள்ளரில் தெற்கத்தியார் எனப்படுவோர் புதுக்கோட்டையிற் காணப்படு கின்றனர். இவர்கள் தலைமயிரை நீளமாக வளரவிடுவர். ஆண்களும் பெண்களும் காதைத் துளையிட்டு ஓலைச்சுருளைச் செருகித் துளை யைப் பெருக்கச் செய்வர். தஞ்சாவூரில் வாழ்வோருக்குக் கள்ளன், மறவன், அகமுடையான் முதலிய பெயர்கள் வழங்கும். மாயவரம் பகுதி யில் அகமுடையான், வலையன் என்போருக்கும் கள்ளன் என்னும் பெயர் வழங்கும். கள்ளன், மறவன், அகமுடையான் என்போருக்குள் நெருங்கிய உறவுண்டு. கிராமங்கள் கொள்ளையடிக்கப்படாதிருப்பதற்கு ஒவ்வொரு கிராமமும் அவர்களுக்குத் திறைகொடுத்து வந்தது. திறை கொடுக்கப்படாவிடில் மாடுகள் திருட்டுப் போயின. சில சமயங்களில் வீடுகள் தீப்பிடித்து விடும். கள்ளரால் பெரிதும் பாதிக்கப்படுவோர் இடையர் அல்லது கோனாராவர். மாடுதிருட்டுக் கொடுத்தவன் கள்ளன் ஒருவனுக்குத் துப்புக்கூலி கொடுத்தால் அவன் இன்ன கிராமத்தில் இன்ன இடத்தில் மாடுகட்டி நிற்கிறது என்று சொல்வான். மாட்டுக்காரன் அவ் விடத்திற்சென்று தன் மாட்டைப் பெற்றுக் கொள்வான். துப்புக் கூலி மாட்டின் பாதிவிலையளவு ஆகும். மாடு திருட்டுப் போனதைப் பொலீசாருக்குத் தெரிவித்தால் மாடு கிடைக்க மாட்டாது. இவர்கள் வளைதடி என்னும் ஒருவகை எறிதடியைப் பயன்படுத்துவர். இத் தடி இலக்கை நோக்கி எறியப்பட்டால் இலக்கில்பட்டு எறிந்தவனிடம் திரும்பி வரும். இவ் வகை வளைதடி (Boomerang) ஆஸ்திரேலிய பழங் குடிகளாலும் பயன்படுத்தப்படும். வெல்லூர்க் கள்ளரின் பெயர்கள் வினோதமானவை. வேங்கைப்புலி, வெங்காலிப்புலி, செம்புலி, சம்மட் டிகள், திருமான், சாயும் படை தாங்கி போல்வன.

இவர்களுள் அண்ணன் தங்கை பிள்ளைகள் மணம் செய்து கொள்ளலாம்; தாய்மாமன் பிள்ளையை மணத்தல் கூடாது. புறமலை நாட்டுக் கள்ளர் சுன்னத்துச் செய்து கொள்வர். சிறு குடிக்கள்ளர் கட்டும் தாலியில் மகமதியரின் நட்சத்திரமும் பிறையுமுண்டு. திருநெல்வேலி யிலும் மதுரையிலும் வாழும் கள்ளப்பெண் மூர்க்கங்கொண்ட எருதின் கொம்பிலே கட்டிய துணியை எடுத்துக்கொண்டு வந்தவனையே கணவ னாகத் தெரிவார்கள். மாட்டின் கொம்புகளில் விலையுயர்ந்த பொருள் களைக் கட்டி மாட்டை அவிழ்த்து விடுவார்கள். சனங்களின் ஆரவாரத் துக்கும் மேளங்களின் ஒலிக்கும் நடுவே அது அங்கும் இங்கும் ஓடும். கள்ளன் மாட்டுக்குப் பின்னால் சென்று அதன் கொம்பிற் கட்டியிருப் பதை அவிழ்த்தெடுப்பான். மேற்கத்திய கள்ளருள் பெரும்பாலும் ஒரு கள்ளப்பெண் பத்து, எட்டு அல்லது இரண்டு கணவருக்கு மனைவியாக விருப்பாள். பிள்ளைகள் எல்லாருக்கும் சொந்த முடையவர்களாவர். மணமகனின் உடன் பிறந்தாள் பெண்வீட்டுக்குச் சென்று 21 பணம் கொடுத்து பெண்ணின் கழுத்தில் குதிரை மயிரைக் கட்டி அவளையும் அவள் இனத்தவர்களையும் மணமகன் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். மணமகனும் மணமகளும் வளைதடி மாற்றிக்கொள்வார்கள். கள்ளரின் முதன்மையான கடவுள் அழகர்சாமி. மதுரையில் அழகர் கள்ளசாமி எனப்படுவர். கள்ளர் மாட்டுச்சண்டை நடத்துவதில் விருப்பமுடையர். இது கொழுமாடு எனப்படும். இன்னொரு வகை மாட்டுச் சண்டை பாய்ச்சல் மாடு எனப்படும். கள்ளரின் வழக்கமான பட்டப்பெயர் அம்பலக்காரன், சிலர் அகமுடையான், சேர்வை, தேவன் எனவும் பெயர்பெறுவர்.

கன்னடியர்: இவர்கள் மைசூரிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறினோராவர்

காக்காளர்: இவர்கள் மத்திய திருவிதாங்கூரிலுள்ள காக்காக் குறவர். பெண்கள் பச்சை குத்தும் தொழில்புரிவர். காதுகுத்து, கைநோக்கு (இரேகை பார்த்தல்) கொம்பு வைப்பு (நோவுள்ள இடத்தில் கொம்பா லூதுதல்) பாம்பாட்டு, வாய்ப்புக் கூறுதல் (சோசியம் சொல்லுதல்) போன்ற தொழில்களையும் இவர்கள் புரிவர். காக்காளர் காலை ஞாயிற்றை வணங்கி ஞாயிற்று வாரத்தில் பொங்கலிடுவர். ஆடவர் பன்னிரண்டு மனைவியர் வரையில் மணப்பர். இவர்களின் சொத்து தந்தை தாயரிலிருந்து பிள்ளைகளைச் சேர்வது.

காடர்: ஆனைமலையில் வாழும் மக்கள் காடர் எனப்படுவார்கள். ஆண்களும் பெண்களும் பற்களின் முனைகளை அராவிக் கூராக்குவர். பெண்கள் கூந்தலில் மூங்கிற் சீப்பு அணிவர். இவர்கள் பேசும் மொழியில் தமிழ் மலையாளச் சிதைவுகள் காணப்படுகின்றன. இவர்கள் ஆளை ஆளி என்பர்; முடி ஆளி - முடியுடையவன்; கத்தி ஆளி - கத்தியுடை யவன்; பூ ஆளி - பூ வுடையவன். இராக் காலங்களில் இவர்கள் தமது குடிசைகளின் முன் விளக்கெரிப்பர். இவ்வாறு இவர்கள் செய்தல் கரடி, யானை, புலி, சிறுத்தை முதலிய விலங்குகள் தமது குடிசைகளை அணுகா மல் இருப்பதற்காகும். தீத்தட்டிக் கற்களால் இவர்கள் தீ உண்டாக்கு கின்றனர். பெண்கள் தமது குழந்தைகளைத் தோளிற் கட்டிய துணியில் இட்டுச் செல்வர். காடர் வாலிபன் திருமணம் செய்ய விரும்பினால் பெண் இருக்கும் கிராமத்துக்குச் சென்று ஓர் ஆண்டு தங்கித் தான் ஈட்டிய பொருளைக் கொடுப்பான். திருமணத்தின் போது ஆண்களும் பெண்களும் பந்தலுக்கு முன்னால் நின்று ஆடுவார்கள். பெண்ணின் தாய் அல்லது உடன் பிறந்தாள் தாலியை அவள் கழுத்தில் கட்டுவாள். பெண்ணின் தந்தை மணமகனின் தலையில் தலைப்பாகை வைப்பான். பூப்புக்காலங்களில் பெண்கள் தனிமையாக ஓரிடத்திலிருப்பர். பூப்படைந்தபின் அவர்கள் தமக்கு வேறு பெயர் இட்டுக் கொள்வார்கள். குழந்தையைப் பெற்ற பெண்ணுக்கு மூன்று மாதங்களுக்குத் தீட்டு உண்டு. ஒரு மாதமானதும் பெண்கள் எல்லோரும் கூடிக் குழந்தைக்குப் பெயரிடுவார்கள். கைம் பெண்கள் மறுமணம் செய்வதில்லை; ஆனால் வைப்பாட்டிகளாக இருக்க அனுமதிக்கப்படுவர். தாய்மார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை குழந்தைக்குப் பாலூட்டி வளர்ப்பர். பல்லை அரத்தினால் அராவிக் கூராக்குதல் அழகு என்று காடர் கருதுவர். சிறுவர் புலிநகம், முதலைப்பல் முதலியவற்றை அணிந்திருப்பர். பெண்கள் காதிலுள்ள துளைகளில் ஓலையைச் சுருட்டிச் செருகுவர். இரும்புக் காப்பு, இரும்பு மோதிரம், மணிகோத்த மாலைகள் என்பவற் றையும் இவர்கள் அணிவர்.

காடுபட்டன்: இவர்கள் மலையாளத்திலுள்ள நாயர்ச் சாதியினர் போன்றோர். இவர்களின் உரிமை வழி தந்தை தாயரிலிருந்து சொத்து பிள்ளைகளைச் சேர்வது. மணமகளுக்குப் பெண்ணின் சகோதரி தாலி கட்டுவாள். பிணச் சடங்குகளை அம்பட்டன் செய்வான். பெண் ஆண் சந்ததியின்றிக் கைம்மையானால் கணவனிறந்த 12வது நாள் பெற்றோர் வீட்டுக்குச் செல்வாள். ஆண் சந்ததியிருந்தால் கணவன் வீட்டிலிருப் பாள்.

காட்டு மராத்தி: குருவிக்காரர் என்னும் வகுப்பினருக்குக் காட்டு மராத்தி என்னும் பெயர் வழங்கும். மலையாளத்தில் வாழும் குறும்பர் காட்டு நாய்க்கர் எனப்படுவர்.

காணிக்காரர்: தென் திருவிதாங்கூரில் மலைகளில் வாழும் மக்கள் இப் பெயர் பெறுவர். காணிக்காரரின் உட்பிரிவினர் இல்லங்கள் எனப் படுவர். இவர்கள் பேசும் மொழி மலையாளம். இவர்களின் உரிமை தந்தையின் சொத்து பிள்ளைகளைச் சேர்வது. அம்மன், பூதநாதன், வெடிக்காட்டுப் பூதம், வடதலைப் பூதம் முதலிய தெய்வங்களை இவர் கள் வழிபடுவர். திருமணத்தின்போது பெண் சிறுமியாயின் மணமகனே தாலி கட்டுவான்; பருவ மடைந்தவளாயின் பெண்ணின் சகோதரி கட்டு வாள். பெண் கருப்பமடைந்து ஏழாவது மாதம் வயிற்றுப் பொங்கல் என்னும் பொங்கல் இடப்படுகிறது. இப் பொங்கல் ஏழு அடுப்பில் ஏழு உலைகளை வைத்துச் செய்யப்படும்.

காது குத்துக் குறவர்: பல சாதியினருக்கும் காது குத்தும் குறவர் இப் பெயர் பெறுவர்.

காப்பிலியர்: இவர்கள் குறும்பரில் ஒரு பிரிவினர். பெண்களுக்குத் திருமணத்தின் அடையாளமாக பொட்டு அல்லது தாலி கட்டப்படும். கணவன் வயதில் இளையவனாக விருந்தால் பெண் கிட்டிய உறவின னைச் சேர்ந்து பெறும் பிள்ளை கணவனின் பிள்ளையாகக் கொள்ளப் படும். உடன் பிறந்தாளின் கணவனோடு உறவு பூண்டிருந்தால் அவள் ஒழுக்கத்தில் தவறியவளாகக் கருதப்படமாட்டாள். இவர்களின் தெய்வங்கள் இலக்கம்மா, வீர இலக்கம்மா, தெண்டையா, திம்மப்பன், சிங்காரப் பெருமாள் முதலியவை.

காப்பு: இவர்கள் இரெட்டி வகுப்பினர். இவர்கள் தெலுங்கு நாட்டில் உழு தொழில் செய்கின்றனர். இவர்கள் பிராமணருக்கு அடுத்த படியிலுள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
கிராமணி: இது சாணார் சிலரின் பட்டப்பெயர். இவர்களின் தலைமைக்காரருக்குக் காத்திரி என்னும் பட்டப்பெயர் வழங்கும்.

கிருஷ்ணாவைக் காக்கா: இவர்கள் இரணியல், கல்குளம் (திருவிதாங்கூர்) முதலிய இடங்களில் வாழ்வோர். ஆண்களின் பெயர் இறுதியில் ஆயன் என்றும் பெண்களின் பெயரிறுதியில் ஆய்ச்சி யென் றும் முடிவுகள் சேர்ந்து வழங்கும். இவர்கள் வட இந்தியாவிலுள்ள அம்பாதியிலிருந்து வந்து காஞ்சீபுரத்தில் ஆயர்பாடியில் வாழ்ந்தார்கள். மகராசா உடைய மார்த்தாண்டவர்மன் காலத்தில் இவர்கள் கேரளத் துக்குச் சென்றார்கள். மார்த்தாண்டவர்மன் காலம் கொல்லமாண்டு 904-933. இவர்களிடையே மருமக்கள் தாயம், மக்கள் தாயம் என்னும் இருவகை உரிமை வழிகளும் உண்டு. இவர்களின் குரு காணத்தன் அல்லது கசான் எனப்படுவர். குருக்கள்குலப் பெண்கள் மங்கலி அம்மா எனப்படுவர். மருமக்கள் தாயக்காரர் மலையாள மொழி பேசுவர். மக்கள் வழித்தாயக்காரர் கொச்சைத் தமிழ் பேசுவர். மருமக்கள் தாயக்காரருக்கு இளமையில் தாலி கட்டுக் கலியாணமுண்டு. ஒருத்தியின் கணவன் இறந்து போனால் அவள் அவன் தம்பியின் மனைவியாவாள். அவள் அணிந் திருக்கும் ஆபரணங்களைக் களையவேண்டியதில்லை. மருமக்கள் தாயக்காரரின் பெண்கள் தாய் வழியால் அறியப்படுவர்.

கிலாசி: இவர்கள் தெலுங்கு அம்பட்டர். இவர்களின் உரிமை பெண் வழியாக வருவது.

கிழக்கத்தி: வட அல்லது தெற்கு ஆர்க்காட்டுப் பறையர் சென்னையில் கிழக்கத்தி எனப்படுவர்.

கீரைக்காரன்: கோயம்புத்தூரில் கீரை பயிரிடும் அகம்படியார் சிலருக்கு இப்பெயர் வழங்கும்.

குகவேளாளர்: சில வேளாளரும் மறவரும் தாம் இராமருக்கு ஓடம் விட்ட குகனிலிருந்து தோன்றியவர்கள் எனக் கொண்டு தம்மைக் குகவேளாளர் என்பர்.

குசராத்தி: கூர்ச்சரத்தினின்றும் வந்து தென்னாட்டிற் குடியேறி னோர் குசராத்தி எனப்படுவர்.

குடிகாரர்: ஓவியந் தீட்டுவோர், மரங்களில் உருவங்கள் வெட்டு வோருக்குக் கன்னட நாட்டில் இப் பெயர் வழங்கும். குடி என்பது கோயிலைக் குறிக்கும்.

குடிக்கார்: திருவிதாங்கூரிலுள்ள தேவதாசிகளுக்கு இப் பெயர் வழங்கும். இவர்களுக்கு வீட்டுக் கூலி இல்லை.

குடிமகன்: இது அம்பட்டனுக்கு வழங்கும் தமிழ்ப் பெயர்.

குடியர் (குடி=மலை) : இவர்கள் தென் கன்னடத்தில் காணப்படு கின்றனர்; கொச்சைத்துளுப் பேசுகின்றனர். மைசூர் எல்லைப் புறங்களில் இவர்கள் காணப்படுகின்றனர். இவர்களின் முக்கிய கடவுளர் பைரவர், காமன் தேவாரு, பஞ்சபாண்டவர் என்போராவர். பெண்ணும் மணமக னும் கையைப் பிடித்து நிற்க மணமகளின் தந்தை நீரை ஊற்றுவதே அவர்களின் மணக் கிரியையாகும். சில சமயங்களில் மணமகனும் மணமகளும் குடித்தலைவனின் முன்னால் நின்று ஒருவருக்கு ஒருவர் பொட்டு இட்டுக் கொள்வர்.

குடியா: ஒரியாநாட்டு மிட்டாய் விற்போர் இப்பெயர் பெறுவர். குடோ - கருப்புக் கட்டி.

குடுபியர்: இவர்களின் சாதிப் பெயர் குளவாடி. இவர்கள் பெரி தும் குண்டப்பூர் மாகாணத்தில் காணப்படுவர். கொங்கணி, மராட்டி முதலியன இவர்களின் மொழிகளாகும். இவர்களுள் வியபிசார நடத்தை யுள்ள ஆணின் தலையையும் முகத்தையும் சிரைத்து அவனைக் குழியில் நிறுத்தி எச்சில் இலையைத் தலை மீது எறிவது வழக்கு. தலைமைக்காரன் பணத் தண்டம் விதிப்பான். பெண் உண்மை கூறாவிடில் இரும்புக் கம்பியுடன் வெயிலில் நிறுத்தப்படுவாள். இவர்கள் தமது குலதெய் வத்தை வீட்டின் ஒரு புறத்தில் வைத்து வழிபடுவர்; குடும்பத்தினருள் ஒருவன் பூசாரியாக விருப்பான். இவர்கள் பூதங்களையும் காலபைரவரை யும் வழிபடுவர். விதவைகள் மறுமணம் செய்து கொள்வர். ஆனால் இறந்த கணவனின் குடும்பத்தில் மணம் முடிக்க மாட்டார்கள்; பெரும் பாலும் காசுக் கட்டி செய்வர். காசுக் கட்டி ஒருவகை மரத்தை வெட்டி அவித்து அதன் சத்திலிருந்து செய்யப்படுகிறது.

குடுமி அல்லது குடுமிக்காரர்: இப்பெயர் ஒரே குடும்பம் என்பதன் சிதைவு என்று சொல்லப்படுகிறது. இவர்கள் குடியர் எனவும் படுவர். இப்பொழுது இவர்கள் தாம் செட்டி இனத்தைச் சேர்ந்தவர்க ளெனக் கூறுவர். இவர்களில் மரியாதைக்குரியவரைக் கொச்சி அரசர் மூப்பன் என்று அழைப்பர். கொங்கண மொழியின் சிதைவாகிய ஒரு வகை மொழியை இவர்கள் பேசுவர். பெண்கள் பூப்புக்குப்பின் நான்கு நாட்கள் தீட்டுக் காப்பர். அக் காலத்தில் அவள் மற்றவர்களுக்கு ஏழடி தூரத்தில் நிற்க வேண்டு மென்றும், நிழல் மற்றவர்கள் மீது விழுதல் கூடாதென்றும் விதிகளுண்டு. பெண்களுக்குத் திருமணம் பூப்படையும் முன் நடக்கும். விதவைகள் மறுமணம் முடிப்பர். குடும்பத்தில் மிக முதியவரின் பிணம் மாத்திரம் சுடப்படும். இவர்களுக்கு இறப்பு பிறப்புத் தீட்டுகள் பதினாறு நாட்களுக்குண்டு. இவர்களின் முக்கிய பொழுது போக்கு கோலாட்டம்.

குடைகட்டி: இவர்கள் பாணரில் ஒரு பிரிவினர்.

குணி: இவர்கள் ஆடல் பாடல் புரியும் ஒரிய தாசி வகுப்பினர்.

கும்மாரர்: (கும்பகாரர்-குயவர்) அவர்கள் கன்னட தெலுங்கு குயவரில் ஒரு பிரிவினர். தமிழ்நாட்டுக் குயவரைப்போல இவர்கள் நூல் தரிப்பதில்லை.

குயவன்: மட்பாண்டங்கள் செய்வோர் இப்பெயர் பெறுவர். இவர்கள் பூணூலணிவர். பிடாரி கோயில்களில் இவர்கள் பூசாரியாக இருப்பதுண்டு. இவர்களின் பட்டப் பெயர் உடையான், வேளான் என்பன. முற்காலத்தில் இறந்தவர்களை வைத்துப் புதைக்கும் அழகிய தாழிகளை இவர்கள் செய்தார்கள். திருநெல்வேலி, மதுரை, மலையாளம் முதலிய இடங்களில் தாழிகள் கிண்டி எடுக்கப்பட்டன. குயவன் மாமியின் மகளை மணக்கலாம். பெண் பருவமடைவதன் முன் மணம் நடக்கின்றது. மணமகனின் சகோதரி பெண்ணுக்குத் தாலி தரிப்பாள்.

குருகள்: இவர்கள் மலையாளக் குரு வகுப்பின் ஒரு பிரிவினர். இவர்கள் தமிழர் உற்பத்தியைச் சேர்ந்தவராகலாம். ஆடவர் நயினார் எனவும் மகளிர் நாச்சியார் எனவும் படுவர். இவர்கள் திருவனந்தபுரத்தி லுள்ள பத்மநாப சுவாமிக்கு வழித் தொண்டர். இவர்கள், மடத்தலைவர் களும், தேவார பண்டாரங்களும் சமயக் கிரியைகள் புரியும்போது உதவி செய்பவர்களாவர். கொல்லம் ஆண்டின் எட்டாவது நூற்றாண்டு வரையில் இவர்கள் பத்மநாபசாமி கோவிலின் உள்மண்டபங்களை அலகிடும் வேலை செய்து வந்தனர். இவர்களின் இல்லம் பவனம் அல்லது வீடு எனப்படும். பெண்கள் குருக்கத்திகள் எனப்படுவர். அவர்கள் கழுத்தில் அரசிலைத் தாலியையும், காதில் சூட்டு என்னும் அணியையும், மூக்கில் நத்து அல்லது மூக்குத்தியையும் அணிவர்; கையிலும் நெற்றியிலும் பச்சை குத்திக் கொள்வர். குருகளின் புரோகிதர் உபாத்தியாயர் எனப்படுவர். தாலிகட்டுக் கலியாணம் சம்பந்தம் முதலிய வழக்கங்கள் இவர்களிடையே உண்டு. இவர்களுக்கு மரணத் தீட்டு ஏழு நாள்.

குருப்பு: இவர்கள் மலையாளத்திற் காணப்படும் கொல்ல வகுப் பில் ஒரு பிரிவினர். இவர்களிற் பல பிரிவுகளுண்டு. காய, பலிச (கேடகம்) தோல் முதலிய பெயர்கள் அவர்கள் பெயர்களுக்கு முன்னால் இட்டு வழங்கப்படும்.

குருவிக்காரன்: குருவி பிடிப்போரில் மராட்டி பேசுகின்ற கூட்டத்தினர் இப் பெயர் பெறுவர். இவர்கள் காட்டு மராட்டிகள் எனவும் அறியப்படுவர். இவர்கள் தமது பொருள் பண்டங்களையும் குடிசைகளையும் பொதிமாடுகளில் ஏற்றிக்கொண்டு அலைந்து திரிவர். இவர்கள் பிச்சை எடுத்தும், ஊசி, மணி, முதலியன விற்றும் வாழ்க்கை நடத்துவர். இவர்கள் பலரைச் சென்னை நகரில் காணலாம். குருவிக் காரன் வலையைக் கட்டி அதனுள்ளிருந்து நரி போலச் சத்தமிடுவான். நரிகள் அச் சத்தத்தைக் கேட்டு ஓடி வரும். குருவிக்காரன் அவற்றை அடித்துக் கொல்லுவான். கலியாணமான குருவிக்காரி பகல் முழுதும் அலைந்து திரிந்துவிட்டு இரவானதும் கணவனிருக்கு மிடத்துக்கு வரவேண்டும்; அல்லாவிடில் வேகக் காய்ச்சிய இரும்பைப் பிடித்துக் கொண்டு அவள் பதினாறடி செல்லவேண்டும்; அல்லது கொதிக்கக் காய்ச்சிய சாணி நீருள் கைவைத்து அடியில் இருக்கும் காலணாவைத் தடவி எடுக்க வேண்டும். அவள் குற்றமற்றவளானால் உடனே உள்ளங் கையில் நெல்லை வைத்து உரைஞ்சி உமியைப் போக்கக் கூடியவளாவள். ஆண்கள் தமது பெயரினிறுதியில் சிங் என்பதைச் சேர்த்துக் கொள்வர். திருமணத்தின்போது அவர்களின் தலைமைக்காரன் கறுப்புக் கயிற்றை அல்லது மணிகள் கோத்த மாலையை மணமகனின் கையில் கொடுப் பான். அவன் அதை மணமகளின் கழுத்தில் அணிவான். துர்க்கையும் காளியும் அவர்களின் முதன்மையான தெய்வங்கள்.

குறவர்: இவர்கள் இடம்விட்டு இடம்பெயர்ந்து திரியும் மலைச் சாதியினர். இவர்கள் கொச்சைத் தமிழ் பேசுவர்; கூடைமுடைவர். வாய்ப்புக் (சோசியம்) கூறுவர். திருமணத்தில் மணமகள் மஞ்சள்நூல் தாலி தரிப்பர். குறப் பெண்கள் பச்சை குத்துவார்கள். குறவர் பூனை, கோழி, மீன், பன்றி, கருங்குரங்கு, நரி, எலி, மான் முதலியவற்றி னிறைச்சியை உண்பர். மணமான பெண்கள் கழுத்தில் கறுப்புப் பாசியும் கையில் வளையலுமணிந்திருப்பர். கணவனை இழந்த பெண்கள் அவற்றைக் களைந்துவிடுவர்; “குறத்தி பிள்ளையைப் பெறக் குறவன் காயந்தின்கிறது” என்னும் பழமொழியுண்டு. குறத்தி பிள்ளை பெற்றால் குறவன் மூன்று நாட்களுக்குப் படுக்கையிலிருந்து காயந் தின்பான்.

குறவர் (திருவிதாங்கூர்): திருவிதாங்கூர்ப் பகுதியில் 50,000-க்கும் மேற்பட்ட குறவர் வாழ்கின்றனர். இவர்கள் குண்டக்குறவர், பூங்குறவர், காக்காக் குறவர் என மூன்று பிரிவினராவர். பாண்டிக் குறவர் தமிழ் பேசுவர். இவர்கள் பெரிதும் நாஞ்சில் நாட்டில் (நாகர் கோயிற் பகுதி) காணப்படுவர். நாஞ்சில் குறவர் என்பது அவர்களின் மறுபெயர். குண்டக்குறவர் தமது முன்னோர் ஓம குண்டத்தினின்றும் பிறந்தவர் எனக் கூறுவர். மூன்று நூற்றாண்டுகளின் முன் நாஞ்சில் நாடு நாஞ்சிற் குறவரால் ஆளப்பட்டது. இவர்கள் இறந்த முன்னோரின் ஆவிகளை வணங்குவர். இவர்களின் மேலான கடவுள் கார்த்திகேய அடிகள். இவர் களின் இறந்துபோன முன்னோர் சாவார் எனப்படுவர். சாவாருக்குச் சிறுகுகைக் கோயில்களுண்டு. சாவாருக்குப் பூசைசெய்யும் பூசாரி பிணியாளி எனப்படுவான். இராரக்காரர் அல்லது விச்சாரக்காரர் என்னும் ஒருவகையினருண்டு. அவர்கள் நோய்களின் காரணங்களை ஆராய்வர். அவர்களின் தெய்வங்கள் சாவார், ஆயிரவல்லி, சாத்தான், பகவதி, மாடன், மூடி, தெய்வம், பகவான், அப்புப்பன், மருதன் முதலியன. இவர்களின் குடித்தலைவன் ஊராளி, பணிக்கன் எனப்படுவான். பெண் களுக்குத் திருமணம் பூப்பாவதன்முன் நடைபெறும். தாலிகட்டுக் கலியாணமுண்டு. சம்பந்தம் கொள்ளும் வழக்கமும் உண்டு. தாலிகட்டுக் கலியாணத்தில் குறத்தி பெண்ணின் கழுத்தில் தாலிகட்டுவான். குறவன் ஒரு பெண்ணை மணக்க விரும்பினால் அவன் பெண்ணின் தந்தைக்குப் பன்னிரண்டு பணம் கொடுக்கவேண்டும். விதவைகள் மறுமணஞ் செய்வர். இவர்களின் உரிமை வழி மருமக்கள் தாயம். இவர்களுக்கு மரணத்தீட்டு பன்னிரண்டு நாள். தாழ்ந்தவர் உயர்ந்த சாதியினருக்கு நாற்பத்தெட்டடி தூரத்தில் நிற்றல் வேண்டும்.

குறிச்சான்: மலையாளத்தில் வேட்டையாடி வாழும் சாதி யினருக்கு இப் பெயர் வழங்கும். இப் பெயர் குறிச்சி என்னும் அடியாகப் பிறந்திருக்கலாம். மலையாளத்தில் குறிச்சி என்பது மலையைக் குறிக்கும். குறிச்சான்கள் பிராமணரிடத்தில் அதிக வெறுப்புக் காட்டுவர். பிராமண னொருவன் குறிச்சான் வீட்டுக்குச்சென்று திரும்பினால் குறிச்சான் பிராமணன் இருந்த இடத்தைச் சாணியால் மெழுகிச் சுத்தஞ் செய்வான். மருமக்கள் தாயமும், மக்கள் தாயமும் இவர்களிடையே உண்டு. இவர் களின் தெய்வம் மூத்தப்பன் (பாட்டன்). இப்பொழுது இவர்கள் புனம் செய்வர். இவர்கள் பெரும்பாலும் வேணாடு, கள்ளிக்கோடு, மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரல்களிற் காணப்படுவர். தீயரும், கம்மாளரும் தீண்டினால் இவர்களுக்குத் தீட்டு உண்டு. பூப்பு எய்து முன் பெண்களுக் குத் தாலிகட்டுக் கலியாணம் நடக்கும். விழாக்காலங்களில் இவர்கள்மீது தெய்வம் ஏறி ஆடி வெளிப்புக் கூறும். சில இடங்களில் வாழ்வோர் நல்ல தண்ணீரில் வாழும் மீன்களைக் கைவில்லால் அம்பை எய்து கொல்வர். அம்பு நீண்ட கயிற்றிற் கட்டப்பட்டிருக்கும். கரிம்பில் பகவதி, மலைக் குறத்தி, அதிர் அள்ளன் முதலிய கடவுளரை இவர்கள் வழிபடுவர்.

குறுமோ: குறுமோ என்பார் இறசல் கொண்டாப் பகுதிகளில் வாழும் பயிர்த்தொழில் புரியும் ஒரிய வகுப்பினர். தெலுங்கர் இவர் களைக் குடுமோ என்பர். இவர்களின் கிராம தெய்வங்கள் தக்குறாணி எனப்படும். பாகதேவி, கும்பேசுவரி, சாதபவூனி முதலியன அவர்கள் குடும்பத் தெய்வங்களாகும்.

குறும்பர்: ஆட்டைக் குறிக்கும் குறு என்னும் கன்னடச் சொல்லி லிருந்து இப் பெயர் உண்டானதென்று கருத இடமுண்டு. குறு என்பது கொறி (ஆடு) என்னுஞ் சொல்லின் திரிபு. இவர்களின் தலைமைக்காரன் கொடு எனப்படுவான். தலைப் பூப்படைந்த பெண்கள் வீட்டின் ஒரு மூலையில் எட்டு நாட்கள் விடப்படுவார்கள். ஒன்பதாவது நாள் பெண்கள் அவளை முழுக்காட்டிப் பீடத்தின்மீது இருத்தி, மஞ்சள் நீரும் சுண்ணாம்பு நீரும் கலந்த தட்டை அவளுக்கு முன்னால் ஏந்தி அவளின் கால், மடி, தலை மீது அரிசி தூவி உடுக்கப் புதிய ஆடை கொடுப்பார்கள். திருமணத்தின்போது ஐந்து பெண்கள் தாலியைத் தொட்ட பின்பு குருக்கள் பெண்ணின் கழுத்தில் அதனைக் கட்டுவார். பின்னர் மற்றப் பெண்கள் கலியாணத்துக்குத் தெரியப்படுவார்கள். நல்ல சுழிகளிலொன்று பாசிங்கம். இது நெற்றியிற் காணப்படுவது. மிகக் கூடாத சுழிகள் பேய், யானை என்பன. இவை தலையின் பின்புறத்திற் காணப்படுவன. கூடாத சுழியுடைய பெண்கள் கணவனைக்கொன்று விடுவார்கள் என்னும் நம்பிக்கை இவர்களிடையே உண்டு. ஆகவே தீய சுழியுடைய பெண்கள் மனைவியை இழந்த ஆண்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்படுவர். மணம் கணவன் வீட்டில் நடைபெறும். பூப்படைந்த பெண்களுக்குப் பூப்புப் கலியாணம் முன்னதாக நடைபெறுகின்றது. பெண்கள் மறு மணம் செய்துகொள்வர். இவர்களுக்கு இன்னொரு விதவை தாலி கட்டு வாள். இறந்து போன தந்தைக்கு மூத்தமகன் கொள்ளிக்குடமுடைப்பான். இறந்தவனின் மனைவி பதினோராவது நாள் கைவளைகளை உடைத்து விடுவாள். வண்ணத்தம்மா, துர்க்கம்மா, முதலிய பெண் தெய்வங்களின் கோயில்களில் பெண் பூசாரிகள் பூசை செய்வர். விழாக் காலங்களில் பூசாரி தெய்வமேறி ஆடி வருங்காரியங் கூறுவான். இவ்வாறு தெய்வ மேறுவது காரணிகம் எனப்படும். வளர்ந்தவர்களின் பிரேதம் எரிக்கப் படும், சிறுவரின் பிரேதம் புதைக்கப்படும். இவர்களுக்கு மரணத் தீட்டு பத்துநாள். மணமாகாத பெண்கள் தனித்தனி விடப்பட்ட குடிசைகளில் படுத்து உறங்குவார்கள். மணமாகாத சிறுவரும் ஆடவரும் தனிக் குடிசை களில் படுத்துறங்குவார்கள். பயிரை மேயவரும் யானைகளின் முகத்துக்கு நேரே இவர்கள் சூளைக்காட்டியும், காட்டுப்பன்றிகளைக் கவணிற் கல்லை வைத்தெறிந்தும் ஓட்டுவார்கள். இவர்களில் தென்குறும்பர் என்னும் ஒரு பிரிவினரும் உண்டு. குறும்பரின் சாதித் தலைவன் முதலி எனப்படுவான். இவர்களிடையே வேட்ட, உறளி என்னும் இரு பிரிவின ரும் உண்டு. நீலகிரிக் குறும்பரில் பல சகோதரர் சேர்ந்து ஒரு பெண்ணை மணப்பர். இறந்தவர்களின் சமாதியில் அவர்கள் நீருள் இருக்கும் கல்லை (தேவ கோட்டக் கல்) எடுத்துக் கொண்டு வந்து நடுவார்கள். இரங்க சாமிக் கோடு, பராலியர் (Baraliar) முதலிய குன்றுகளில் வாழ்வோர் இறந்தவரின் உடலை எரித்து எலும்பின் ஒரு சிறு துண்டையும், சிறு கல்லையும் அவரின் சமாதியில் (சாவுமனை) வைப்பர்; சில பகுதிகளில் இரு பெரிய கற்களை நாட்டி மேலே ஒரு பாவு கல்லை வைப்பர்.

குன்றுவர்: இவர்கள் பழநி மலையில் வாழும் பயிர்த்தொழில் புரியும் மக்கள். இவர்களின் மொழி தமிழ். இவர்கள் தமது முன்னோர் வேளாளர் எனக் கூறுவர். இவர்கள் தலைவன் மண்ணாடி எனப்படுவன். பெண்கள் வெள்ளை ஆடை உடுப்பார்கள். ஒருவன் மாமியின் மகளை மணக்கலாம். கணவன் இளம் வயதினனாயின் அவள் அச் சாதி ஆடவன் ஒருவனோடு சேர்ந்து வாழ்வாள். அவ்வாறு பிறக்கும் பிள்ளைகள் கணவனின் பிள்ளைகளாகவே கருதப்படும். எட்டு வயதுள்ள ஒருவனுக்கு இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருக்கக்கூடும்.

கூடலர்: விசாகப்பட்டினம் கஞ்சம் பகுதிகளில் வாழும் கூடைமுடையும் வகுப்பினர் இப் பெயர் பெறுவர்.

கூடான்: மலையாளத்திற் காணப்படும் காணியாளரின் அடிமைகள் கூடானெனப்படுவர். இவர்கள் எல்லா உயர்ந்த சாதியினருக் கும் நாற்பத்திரண்டடி தூரத்தில் நிற்றல் வேண்டும். புலையர், நாயாடி, உல்லாடர் முதலியவர்களுக்குப் பக்கத்தில் நின்றால் இவர்களுக்குத் தீட்டுண்டாகும். இவர்களுக்கு அம்பட்டரும், வண்ணாரும் உண்டு. பெண்கள் பூப்பு அடைந்தால் நான்கு அல்லது ஏழு நாட்களுக்குத் தீட்டுக் காப்பார்கள். கூடான் தனது சொந்தச் சாதியில் அல்லது பறையர் வகுப்பில் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு மருமக்கள் தாயம் உண்டு. இவர்களிடத்தில் சொத்து இருப்பதில்லை. ஒரு ஆடு, ஒரு மாடு அல்லது சில கோழிகளே இவர்களின் சொத்தாகும்.

கூணா: இவர்கள் வேள்மா வகுப்பினரின் ஒரு பிரிவினர்.

கூத்தாடி: ஆரியக் கூத்தன், கழைக் கூத்தன் முதலியோர் இப் பெயர் பெறுவர்.

கூர்மாப்பு: இவர்கள் விசாகப்பட்டினப் பகுதியில் காணப்படும் ஆடல் மகளிராவர். இவர்கள் மணம் முடிப்பதில்லை; வியபிசாரத்தி னால் பொருளீட்டுவர். விருந்துக் காலங்களில் ஆடல் புரிவர். இவர்கள் விசாகப்பட்டினத்திலுள்ள சிறீ கூர்மம் என்னும் கோயிலில் தேவடி யாட்களாக இருந்தவர்களாவர்.

கைக்கோளர்: தென்னாட்டில் நெசவுத் தொழில் புரியும் பெரும் பிரிவினர் இப் பெயர் பெறுவர். மதுரை நாயக்க அரசர் கைக்கோளர் வேலையில் திருப்தியுறாது வடநாட்டினின்னும் பட்டுநூற்காரரை அழைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இன்று தமிழ் நெசவாளரை விடப் பட்டுநூற்காரரின் எண்ணிக்கை அதிகமாகும். கைக்கோளர் செங்குந்தர் எனவும் படுவர். பறையரும் இவர்களும் தம்மை வீரபாகுவின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவர். இவர்களுள் சோழியர், இரட்டு சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம், சேவுக விருத்தி என்னும் பிரிவுகளுண்டு. சிறுந்தாலி பெருந்தாலி என்பன சிறிய தாலியையும் பெரிய தாலியையும் அணிவது காரணமாகத் தோன்றிய பெயர்கள். கைக்கோளரிற் பெரும் பாலினர் சைவர். இவர் இலிங்கங் கட்டுவர். சிறு தொகையினர் வைணவ மதத்தினர். இவர்களின் தலைமைக்காரன் பெரியதனக்காரன் அல்லது பட்டக்காரன் எனப்படுவான். பெரிய தனக்காரன் மகா நாட்டான் எனவும் படுவன். இவர்களுள் நட்டுக்கட்டாத நாயன்மார் என்னும் பண்டாரங்களுண்டு. இவர்கள் நாடுகளிற் சென்று தமது குலத்தவர்களுக் கிடையில் தோன்றும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பர். கைக்கோளருள் பொன்னம்பலத்தார் என்னும் பண்டாரங்களுமுண்டு. ஒட்டக்கூத்தப் புலவர் கைக்கோள வகுப்பைச் சேர்ந்தவராவர். காஞ்சீபுரத்திற் சபை கூடும்போது கைக்கோளத் தலைவன் தலையணையிற் சாய்ந்து கொண்டிருப்பான். ஆகவே அவன் திண்டுக்காரன் எனப்படுவான். கைக்கோளக் குடும்பமொவ்வொன்றிலும் ஆலய சேவைக்குப் பெண்கள் நேர்ந்து விடப்படவேண்டும். கைக்கோளர் தாம் தேவதாசிகளோடு தொடர்பற்றவர் எனக் கூறுகின்றனர். தாசிகளுக்குக் கோயில் விக்கிரகத் துக்கு முன்னிலையில் பிராமணன் தாலி கட்டுகின்றான். தாலி என்பது கறுப்பு மணிகள் கோத்தமாலை (கறுப்புப்பாசி). கைக்கோளருக்கு முதலி, நாயன்மா ரென்ற பட்டப்பெயர்களுண்டு.

கொங்கணி: கொங்கணரின் ஆதி இருப்பிடம் சரசுவதி ஆற்றை அடுத்த இடங்கள். அங்கிருந்தும் வந்து தெற்கே குடியேறினோர் கொங்கணிகள் எனப்படுவர்.

கொங்க வேளாளர்: இரெட்டிமார் இவர்களுடனிருந்து உண்ண மாட்டார்கள். காதில் தொங்கும் வளையங்களையும் மேற்காதில் தொங்கும் முருகுகளையும் கொண்டு இவர்கள் மதிக்கப்படுவார்கள். முறுக்கித் திரிக்கப்படாத நூலில் பெண்கள் தாலி அணிவார்கள். தாயத்து என்னும் அணியை இடதுகையில் அணிவார்கள். ஆண்கள் தாய்மாமன் மகளை மணப்பர். சிறு பையன் வளர்ந்த பெண்ணுக்குக் கலியாணம் முடிக்கப்படு வான். மகன் வளரும் வரையும் அவன் தந்தை அவளுக்குக் கணவனின் கடமைகளைச் செய்து வருவான். திருமணக் காலத்தில் அவர்கள் குரு அருமைக்காரன் என அழைக்கப்படுவான். குருவின் மனைவி அருமைக் காரி எனப்படுவள். அருமைக்காரன் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டு வான். அப்பொழுது அம்பட்டன் “சந்திரசூரியர் உள்ளளவும் உங்கள் கிளைகள் ஆல்போல் தழைத்துச் சுற்றம் மூங்கில் போல் பெருக” என்று வாழ்த்துவான். இவர்களுட் பிச்சைக்காரர் முடவாண்டிகள் எனப்படுவர்.

கொடிக்கால்: கொடிக்கால் - வெற்றிலை. வெற்றிலை பயிரிடு வோர்க்கு இப் பெயர் வழங்கும். சாணாரில் ஒரு பிரிவினருக்கும் கொடிக் கால் என்னும் பெயருண்டு.

கொடிப்பட்டன்: இவர்கள் மலையாளத்தில் வாழும் தமிழ்ப் பிராமணருள் ஒரு பகுதியினர். இவர்கள் வெற்றிலைக் கொடிகளைப் பயிரிட்டமையால் பிராமணத் தன்மையை இழந்தார்கள். இவர்களின் முக்கிய இருப்பிடம் வாமனபுரி.

கொண்டதோரர்: விசாகப்பட்டினத்திற் பயிரிடும் மலைவாசிகள் இப் பெயர் பெறுவர். இவர்கள் பாண்டவரையும், தலுபுல் அம்மாவை யும் வழிபடுவர். இவர்கள் தம்மைப் பாண்டவர் குலத்தினரெனக்கூறிக் கொள்வர்.

கொண்டர்: இவர்கள் கஞ்சம், விசாகப்பட்டினம், வங்காளம், மத்திய மாகாணங்களில் வாழ்கின்றனர். இவர்கள் தம்மை கூய் என்னும் பெயர் கொடுத்தும் வழங்குவர். இது கோய அல்லது கோயாவுக்குச் சமம். இவர்களில் 58 பிரிவுகளுண்டு. போர் செய்யும்போது இவர்கள் எருமைக் கொம்பும் மயிலிறகு மணிவர். பெண்கள் முகத்தில் பச்சை குத்திக்கொள் வர். முற்காலத்தில் கொண்டர் பூமிக் கடவுளுக்கு நரபலி இட்டனர். நரபலியிடுதற்குப் பயன்படுத் தப்பட்ட மரப் பலிபீடமொன்று சென்னை நூதன பொருட்காட்சிச் சாலையிற் காணப்படுகின்றது. நரபலி ஆங்கில ரால் நிறுத்தப்பட்டது. திருமணக் காலத்தில் மணமகன் மணமகளைத் திருடிக் கொண்டு போவதாகவும் பெண்வீட்டார் பெண்ணை மீட்டுக் கொண்டு போவதாகவும் இரு பகுதியாருக் கிடையிலும் போலிப் போர் நடத்தப்படுவதுண்டு.

கொண்டாலிகர்: மராட்டி உற்பத்தியைச் சேர்ந்த பிச்சை எடுக்கும் பண்டாரங்கள் இப் பெயர் பெறுவர்.

கொல்லர்: இவர்கள் மலையாளக் கம்மாள வகுப்பினர், இவர்களுள் தீக்கொல்லன், பெருங்கொல்லன், கனசிற்கொல்லன், தோற்கொல்லன் எனப் பல பிரிவுகளுண்டு.

கோசாக்கள்: இவர்கள் அண்ணகர் (விதையடிக்கப்பட்டவர்). தென்னிந்தியாவில் இவர்களிற் பலர் காணப்படவில்லை. சில சமயங் களில் இந்துக்கள் சிலரும் பிராமணர் சிலரும் அவர்களின் சம்மதத்தின் பேரில் அண்ணகராக்கப்படுகிறார்கள். விரையை எடுத்துவிடும் வேலை அம்பட்ட வகுப்பினராலும் அண்ணகராலும் செய்யப்படுகிறது. இவர்கள் முசல்மான்களின் அந்தப்புரங்களில் வேலை செய்வார்கள்.

கோஷ்டி அல்லது கோஷ்டா: சூடியநாகபுரியில் நெசவு, பயிர்த் தொழில்கள் புரியும் தெலுங்கு வகுப்பினர் இப்பெயர் பெறுவர்.

கோடர்: இவர்கள் முன்பு மைசூரிலுள்ள கொல்லி மலையில் வாழ்ந்தார்கள். இப்பொழுது நீலகிரிப் பீடபூமியிலுள்ள ஏழு கிராமங் களில் வாழ்கின்றனர். கன்னடமும் தெலுங்கும் கலந்த மொழி பேசுகின்ற னர். எல்லா வகை இறைச்சிகளையும் உண்பர். கோடருள் கொல்லர், தச்சர், தட்டார்,தோல் மெருகிடுவோர், குயவர், வண்ணார், பயிரிடுவோர் முதலிய பல பிரிவினருளர். இவர்கள் எருமைத் தோலினாற் பின்னிய நீண்ட கயிறுகளால் ஆடு மாடுகளைக் கட்டுவர்; ஆவரசம்பட்டை சுண்ணாம்பு முதலியவைகளைக் கொண்டு தோலைப் பதனிடுவர். இவர்களின் குருமார் பூசாரி, தேவாதி என இருபிரிவினராவர். இவர்கள் மணம் செய்து கொண்டவர்களாயிருத்தல் வேண்டும். மனைவி இறந்தால் இவர்கள் குருமாராக இருக்க முடியாது. காமாடராயன், மங்காளி, வேட்டைக்காரச் சுவாமி, அதிரல், உதிரல் முதலிய தெய்வங்களை இவர்கள் வழிபடுவர்; ஓண நாளைப் பெருநாளாகக் கொண்டாடுவர். வைசூரி நோய் மாரியம்மாவால் உண்டாகின்றதென்று நம்புவர்; மாகாளி யைக் கற்றூண் வடிவில் வழிபடுவர். மனைவி கருப்பமாயிருந்தால் கோடன் தனது தலைமயிரையும் முகமயிரையும் வளரவிடுவான். பெண்கள் பிள்ளையீன்றதனாலுண்டான தீட்டு அடுத்த பிறை காணும் வரையும் உண்டு. பூப்புக் காலத்தில் பெண்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டு. கணவனை இழந்த பெண்கள் அணிகலன்களைக் களைந்துவிடு வார்கள்.

கோட்டைப்பத்து: இவர்கள் அகம்படியாருள் ஒரு பிரிவினர்.

கோட்டை வேளாளர்: திருநெல்வேலியிலுள்ள சிறீவைகுந்தத் தில் பல கோட்டை வேளாள குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்கள் இருக்கும் கோட்டைக்குள் பிற ஆடவர் செல்லுதல் கூடாது; பெண்கள் செல்லலாம். மணமான பெண்கள் கணவன், தந்தை, தாய்மாமன், சகோதரன் அல்லாத பிறரின் முகத்தைப் பார்த்தல் கூடாது. இவர்களின் தலைவன் கோட்டைப் பிள்ளை எனப்படுவான். பெண்கள் ஐந்து தலைநாகத்தின் படம் போன்ற ஒரு வகை அணியை அணிவர்.

கோமட்டி: இவர்கள் சென்னை மாகாணத்தில் வாணிகம் செய்யும் சாதியினர். இவர்கள் மைசூர், பம்பாய், பீரார்(Berar), மத்திய மாகாணம், வட மேற்குப் பரோடா முதலிய இடங்களிற் காணப்படுவர். கோமட்டிச் செட்டிகள் தாய் மாமன் மகளை மணப்பர். 18ஆம் நூற்றாண் டில் கோமட்டிகளின் திருமணத்தில் வயது முதிர்ந்த மாதங்கன் தாலியை ஆசீர்வதிப்பது வழக்கமாக விருந்தது. இதனால் மாதங்கருக்கும் கோமட்டிகளுக்கும் யாதோ தொடர்பு இருக்கிறதெனக் தெரிகிறது. மாதங்கன் கலியாணத்தை விரும்பாவிடில் அவன் கலியாணப் பந்தலிற் கட்டியிருக்கும் வாழை மரங்களை வெட்டி கலியாணத்தை நிறுத்தலாம். இவ்வாறே கம்மாளர் கலியாணங்களை நிறுத்த வெட்டியானுக்கு உரிமையுண்டு. இவ் வழக்கங்களால் கோமட்டிகள், கம்மாளர்களுடைய நிலங்களுக்கு மாதங்கர் வெட்டியான் முதலியோர் அதிபதிகளாயிருந் தார்களெனத் தெரிகிறது. கோமட்டிகள் வெற்றிலையும் பாக்கும் வைத்து மாதங்கரைத் கலியாணத்துக்கு அழைப்பார்கள். கோமட்டிகளின் குலதெய்வம் கன்னிகை அம்மா. இத் தெய்வத்தைக் குறிக்கக் கரகத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகின்றது. மாதங்கர் தமது தெய்வம் கன்னி எனக் கூறி அதனை மாதங்கி என்னும் பெயர் கொடுத்து வழிபடுவர். திருமணத்தில் தாலி குருக்கள் அல்லது மணமகனால் கட்டப்படுகிறது.

கோமணாண்டி: ஆண்டிகளுள் ஒரு பிரிவினர்.

கோமாளி: ஒட்டியருள் ஒரு வகுப்பினர்

கோயா: இலாக்கா தீவிலுள்ள தோணிச் சொந்தக்காரராகிய சோனக மாப்பிள்ளைமார், தங்கள் பெயரோடு கோயா என்னும் பெயரைச் சேர்த்துக் கொள்கின்றனர்.

கோயி: கோயி அல்லது கோயா என்போர் கோதாவரிக்கு வடக்கே யுள்ள மலைகளில் வாழ்வோராவர். இவர்கள் கொண்டர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்கள் நாலு ஆண்டுகள் வரையில் ஓர் இடத்தில் தங்கியிருந்து பயிரிடுவார்கள்; பின் பிறிதொரு இடத்துக்குச் சென்று விடுவர். கோயிச் சாதியினரின் கலியாண வழக்கம் மிக வியப்புடையது. ஒருவனுக்குப் பெண் வேண்டியிருந்தால் அவன் தன் பெற்றோரையும் நண்பரையும் பெண் வீட்டுக்கு அனுப்பி முடிவு செய்கிறான். பெண் விறகு பொறுக்கவோ தண்ணீர் எடுக்கவோ வரும் சமயம் பார்த்துக் கணவன் பகுதியார் பெண்ணைத் தூக்கி மணமகன் வீட்டுக்குக் கொண்டு செல்வார்கள். பெண் வீட்டாருக்கு இச் செய்தியை அறிவித்தபின் மணக்கிரியை நடைபெறுகிறது. கோயர் பெரும்பாலும் பல பெண்களை மணப்பர். தாழ்ந்த வகுப்பானுடன் சேர்க்கை வைத்திருக் கும் பெண்ணின் நாக்கில் பொன் கம்பி காய்ச்சிச் சுடப்படும். பனை ஓலையினால் வில் வடிவாகச் செய்யப்பட்ட ஏழு வில்களுக்கூடாக அவளை நுழையச் செய்த பின் ஓலையைச் சுட்டு அவள் சுத்தஞ் செய்யப்படுவாள்.

குழந்தை பிறந்து ஏழாவது நாள் அதற்குப் பெயரிடப்படும். பிணங்கள் சுடப்படும். இறந்தவரைச் சுட்ட சாம்பலைப் புதைத்து அவ் விடத்தில் நேரான கல்லை நட்டு அதன் மீது தட்டைக் கல் வைக்கப்படும். அவ் வழியாற் செல்வோர் அதன்மீது சிறிது புகையிலையை வைப்பர். இவர்கள் தாம் வீமசேனனுக்கும் காட்டுச் சாதிப் பெண்ணுக்கும் தோன்றிய சந்ததியினர் எனக் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் நரபலி யிடுவர். நரபலி இப்பொழுது தடைசெய்யப்பட்டுள்ளது. மனித பலிக்குப் பதில் குரங்கு பலியிடப்படுகிறது. வைசூரி நோயை உண்டாக்கும் தேவதை முடியாள் அம்மா எனப்படும். சாளம்மா, கொம்மாளம்மா முதலிய தெய்வங்களையும் அவர்கள் வணங்குவர். இறந்தவர்களின் ஆவிகளும் வணங்கப்படும். நோய்களைப் பேய்கள் உண்டாக்குகின்றன என்னும் நம்பிக்கை இவர்களிடமுண்டு.

கோயிலார்பிள்ளை: இவர்கள் வன்னியரில் ஒரு பிரிவினர்; நூலணிவர்.

கோயிற்றம்பிரான்: இவர்கள் வட திருவிதாங்கூரிலும் கொச்சியி லும் காணப்படும் சத்திரிய வகுப்பினர். பழைய சாசனங்கள் இவர்களைக் கோயிலதிகாரிகளெனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் கொல்லமாண்டு 300இல் சேரமான் பெருமாளால் பெபூரி(Beypore)லிருந்து கொண்டு வரப்பட்டார்கள். ஆண்கள் வேணாட்டுச் சிவரூபம் என்று அழைக்கப் படுவர். இவர்கள் அரச குடும்பப் பெண்களை மணந்தார்கள் என்னும் பழங்கதை உள்ளது. இவர்களுக்கு உரிமை பெண் வழி. நம்பூதிரிப் பிராமணர், இவர் பெண்களை மணப்பர்.

கோலா: தெலுங்கு உழவர் கோலா எனப்படுவர். இவர்கள் எத்தனை மனைவியரை வேண்டுமாயினும் மணக்கலாம். பெண்கள் இறவுக்கை அணிவதில்லை. கணவனை இழந்த பெண்கள் கைவளை களை உடைப்பதில்லை. பிள்ளையைப் பெற்ற கோலாப் பெண் 90 நாள் தீட்டுக் காப்பாள்.

கோலாயன்: இவர்கள் தென் கன்னடத்திற் காணப்படுவர். வட மலையாளத்தில் இவர்கள் ஊராளி எனப்படுவர். ஆயன், கோல் ஆயன், மாரியன் அல்லது எருமான் (எருமா - எருமை) என இவர்களுட் பல பிரிவுகளுண்டு. கோலாயரின் குரு மூத்தவன் அல்லது பொதுவன் எனப் படுவன். அவன் பெரும்பாலும் அரசரால் தெரியப்படுவன். கோலாயர் பெண்கள் பருவமடைய முன் தாலிகட்டுக் கலியாணம் நடத்துவர். தந்தை தாலிகட்டுவான். பூப்படைந்த பெண் மூன்று நாள் தீட்டுக் காப்பாள்.
கோலியன்: நெசவு செய்யும் பறைய வகுப்பினர் இப் பெயர் பெறுவர். இவ் வகுப்பினர் பெரும்பாலும் தஞ்சாவூர் மதுரைப் பகுதி களிற் காணப்படுவர். சில பறையருக்குச் சாம்பான் என்னும் பட்டப் பெயருண்டு. ஈசன் என்பதும் அவர்களின் பட்டப்பெயர். திருமணக் காலங்களில் இவர்களின் பட்டப் பெயர் சொல்லப்படுதல் வேண்டும். கணவனின் சகோதரி பெண்ணுக்குத் தாலி கட்டுவாள்.

கௌடோ: கஞ்சத்தில் காணப்படும் ஒரிய உழவர் இப் பெயர் பெறுவர். இவர்களில் ஆண்கள் தாய்மாமன் மகளைக் கலியாணஞ் செய்து கொள்வர்; சகோதரியின் மகளைக் கலியாணஞ் செய்வதுமுண்டு. ஏழு கணவரை மணந்தவள் பெத்தம்மா என மரியாதை செய்யப்படுவள்.

சக்கிலியன்: சக்கிலியர் தெலுங்கு கன்னட நாடுகளிலிருந்து வந்தோர்களாவர். இவர்கள் எல்லாச் சாதியினரிலும் பார்க்கத் தாழ்ந்தோ ராவர். ஆவரசஞ் செடியை இவர்கள் பரிசுத்தமுடையதாகக் கொள்வர். திருமணத்தின் முன் தாலியை அச் செடியின் கிளைகள் ஒன்றில் கட்டுவர். இவர்கள் செருப்புத் தைப்பர். பறையர் தாம் சக்கிலியரிலும் உயர்ந்தவ ராகக் கொள்வர். மதுரை வீரன், மாரியம்மன், திரௌபதி, கங்கம்மா முதலிய தெய்வங்களை இவர்கள் வழிபடுவர். இவர்களின் திருமணங் களை வள்ளுவக் குருக்கள் நடத்தி வைப்பர்.

சத்திரியன் : சத்திரியர் என்னும் பிரிவு திராடவிடருக்குரியதன்று. ஆனால் சத்திரியர் என்னும் தலைப்பின்கீழ் குறிக்கப்பட்டுள்ளோர் திராவிடர்களாவர். வன்னியர், சாணார், பயிர்த் தொழிலாளரி லொரு பிரிவினர், கள்ளிறக்குவோர் முதலினோரும் தம்மைச் சத்திரியர் எனக் கூறுகின்றனர். தென்கன்னடத்தி லுள்ள மராட்டியர் சிலரும் திருநெல் வேலிச் சாணாரும் தம்மை அக்கினி குலச் சத்திரியர் எனக் கூறிக்கொள் வர். மைசூர் ஆட்கணக்கு அறிக்கையில் அரசுக்கள், இராசபுத்திரர், கூர்க்கர், சீக்கியர், ஆகியோர் சத்திரியர் எனக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அரசுக்கள் என்போர் மைசூரிலுள்ள அரச குடும்பத்தினர். மலையாளத்தி லுள்ள சத்திரியர் நான்கு பிரிவுகளாக்கப்பட்டுள்ளனர். கோயில் பண்டாலா (பண்டாலா- பண்டசாலை) இராசா, தம்பான், திருமுப்பாத் என்பன அப் பிரிவுகளாகும். தம்பானின் பெண்கள் தம்புராட்டிகள் எனப்படுவர். கன்னட பரப்பரைக் கதையின்படி கோயிற்றம் பிரான்மார் சேரமான் பெருமானின் மருமக்களாவர். இவர்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் பிரிட்டிஷ் மலையாளத்திலுள்ள பேச்பூரில் (Bejpore) வாழ்ந்தார்கள். மலையாளம் ஆண்டு 300 வரையில் இக் குடும்பம் ஒன்றி லிருந்த ஆண்கள் வேணாட் சுபரூபத்தி (திருவனந்தபுர அரச குடும்பம்) னிடையே மணஞ் செய்வதற்கு அழைக்கப்பட்டார்கள். கொல்லமாண்டு 963இல் திப்புச் சுல்தான் மலையாளத்தின் மீது படை யெடுத்தபோது ஆலியம்கோடு கோவிலகத்தைச் சேர்ந்த ஐந்து பெண் களும் மூன்று ஆண்களும் திருவிதாங் கூருக்கு ஓடிச்சென்று தங்கினர். தம்புரான்கள், அரசர்கள் வீடுகள் கொட்டாரம் அல்லது கோவிலகம் எனப்படும். தம்பான் அல்லது திருமால் பாடிகளின் வீடுகள் கோவிலகம், மடம் எனப் படும். சத்திரியப் பெண்களின் செருத்தாலி, எந்திரம், குழல் என்னும் அணி களை பெண்கள் சிறப்பாக அணிவார்கள். தம்பான். திருமால்பாடிகள் அரச குடும்பங்களில் வேலைக்காரராவர். மலையாள சத்திரியரின் வீடுகள் தேவாரபுரம் எனப்படும். கோயில் தம்புரான்மார் விசுவாமித்திர கோத்திரத்தவர். அரசர் பார்க்கவ கோத்திரத்தினர். இவர்கள் தமது கூட்டத்துள் மணம் முடிப்பதில்லை. கோயில் தம்புராட் டிகள், நம்பூதிரி ஆடவர்களை மணஞ் செய்வர். கோயில் தம்புரான்கள் அரசரிடம் பெண் கொள்வர். அரசர் நாயர்ப் பெண்களை மனைவியராக வைத்திருக்கலாம். தம்பான். திருமால் பாடிகளும் இவ்வாறே செய்வர். இராணிகளும் பண் டாலங்களும் நம்பூதிரி ஆண்களை மணப்பர். தம்பான், திருமால்பாடி பெண்கள் எந்தப் பிராமணனுடனும் வாழ்வர். தம்பான், திருமால்பாடி, பண்டாலம் பெண்களுக்கு ஆரியப்பட்டர் தாலி கட்டுவர். விதவைகள் மறுமணம் புரிவர். தம்புராட்டியின் திருமணத்தில் பெண்கள் சேர்ந்து பிராமணியப் பாட்டுப் பாடுவார்கள். கொள்கையள வில் பெண்களே சொத்துக்குரியவராவர். மூத்த சகோதரனே சொத்தை மேற்பார்ப்பன். சொத்துப் பிரிவினை செய்யப்படுதல் கிடையாது. சொத்து இவர்கள் எல்லோரின் வாழ்க்கைக்காக விடப்படும்.

சமகாரர்: தென்கன்னடத்தில் வாழும் தோலில் வேலை செய் வோர் இவர்களாவர். தோல் பதனிடும் வேலை பெரும்பாலும் இவர் களாற் செய்யப்படுகின்றது.

சமய: இவர்கள் வைணவ ஆச்சாரியர்களாவர். திருமணக் கிரியை களையோ சமயக் கிரியைகளையோ இவர்களுக்குத் தக்கணை கொடாது புரிதல் கூடாது. முற்கால அரசர் ஒவ்வொரு பட்டினங்களிலும் சமயாச் சாரியா என்னும் நிலையம் நிறுவியிருந்தார்கள். அவர்களின் வருவாய் பெரும்பாலும் கற்பில் தவறிய பெண்களை விற்பதால் கிடைத்தது. அப் பெண்கள் சக்கார்ப் பெண்கள் என அறியப்பட்டார்கள். பிராமணப் பெண்களும் கோமட்டிப் பெண்களும் விற்கப்பட்டிலர். சாதியிலிருந்து விலக்கப்பட்டார்கள். அவர்களின் கையில் வியபிசாரிகள் என்று சூட்டுக்கோலினால் எழுதப்பட்டது. மற்றச் சாதிப் பெண்கள் விற்கப்பட் டார்கள். பங்களூரில் ஐரோப்பியர் காலம் வரையில் இவ் வகைப் பெண்கள் வாழும் பெரிய கட்டடம் பட்டினத்திலே இருந்தது. 1833இல் இவ் வழக்கம் அரசினரால் ஒழிக்கப்பட்டது.

சலங்குக்காரன்: இது மீன்பிடிகாரருக்கும் முத்துக்குளிகாரருக் கும் வழங்கும் பெயர்.

சவரர்: கஞ்சம் பகுதிகளில் வாழும் மலைச்சாதியினர் இப் பெயர் பெறுவர். இவர்களின் மொழி முண்டா இனத்தைச் சேர்ந்தது எனக் கிரீர்சன் கூறியுள்ளார். ஆண்கள் இரண்டு அல்லது மூன்று மனைவியரை மணப்பர். பெண்தான் விரும்பினால் கணவனை விட்டுப் பிரிந்து விடலாம். அதனைத் தடுக்க முடியாது. சவரரின் விருந்துகளில் ஆண் களும் பெண்களும் சேர்க்கை வைத்துக் கொள்கின்றனர். விதவைகள் கணவனின் சகோதரனை மணப்பர். சவர இளைஞன் ஒருவன் மணஞ் செய்துகொள்ள விரும்பினால் அவன் ஒரு குடத்தில் கள்ளை எடுத்துக் கொண்டு தனது சுற்றத்துடன் பெண்ணின் தந்தை வீட்டுக்குச் செல்வான். பெண்ணின் தந்தை கள்ளை ஏற்றுக் கொண்டால் அது பெண்ணைக் கொடுப்பதற்கு அடையாளமாகும். இவர்கள் பிராமணப் புரோகிதரைக் கொண்டு எதுவும் செய்விப்பதில்லை. இறந்தவரின் உடல் சுடப்படும்; அடுத்தநாள் தண்ணீர் தெளித்து நெருப்பை அணைத்துக் கருகிய எலும்புகளை எடுத்து இரண்டடி ஆழத்திற் புதைத்து அவ் விடத்தில் சிறு குடிசையிடுவர். இறந்தவரைக் குறித்து மரங்களின் கீழ் நேரிய கற்களை நாட்டுவர். கற்கள் பெரும்பாலும் ஒன்றறை அடி முதல் நாலு அடிவரை உயர்ந்திருக்கும். வியபிசாரம் செய்பவர்களுள் பெண்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்; ஆண்கள் தண்டிக்கப்படுவர். இவர்களுள் சாதித் தலைவன் உண்டு. அவனே வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிப்பான். மகுவா (Mahua)என்னும் ஒரு வகைப் பூவிலிருந்து இலுப்பைப் (பூ?) கள்ளுச் செய்வர்.

சவலைக்காரன்: இது மீன்பிடிகாரருக்கு வழங்கும் பெயர். சவலை என்பது சவள்; ஓடக்கோலை உணர்த்தும் இவர்கள் வன்னியர் , செம்படவர்களை ஒத்தவர். சிலர் பயிர்த் தொழில் செய்வோராகவும் சிலர் நாகசுரம் வாசிப்போராகவும் இருக்கின்றனர். திருநெல்வேலிப் பகுதியில் வாத்தியக்காரர் சவலைக்காரரும் பணிக்கர்களுமாவர்.

சாக்சியர்: இவர்கள் அம்பலவாசிகளுள் ஒரு பிரிவினர். இவர் களிற் பெண்கள் தமது சாதிக்குள் மணமுடித்துக்கொள்வர் அல்லது நம்பூதிரிகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வர். சாக்கியர் நம்பியார் சாதியாருள் சம்பந்தம் வைத்துக்கொள்ளலாம். இவர்களுக்குக் குருமா ருண்டு. இவர்கள் வீடுகளில் பிறப்பு இறப்புத் தீட்டுகளைப் பிராமணக் குருமார் நீக்குவர். வட திருவிதாங்கூரில் விழாக் காலங்களில் சாக்கியர் கூத்து முதன்மையுடையது. இவர்கள் கூத்தாடுவதற்கென அமைக்கப் பட்ட கட்டடம் கூத்தம்பலம் எனப்படும். சாக்கியன் பழங்கால முறையில் உடுத்துக்கொண்டு முக்காலி மீதிருந்து பாடுவான். அவனுக்குப் பின்னால் நம்பியார் முழவுடன் நிற்பார். நங்கையார் என்னும் நம்பியார்ப் பெண் முன்னால் இருந்து சல்லரியால் தாளம் போடுவாள்.

சாணான்: இவர் தமிழ்நாட்டுக் கள் விற்கும் சாதியினர். கோயில் களுள் இவர்கள் நுழைதல் கூடாது. சாணார் கோயில்களுள் நுழைய வேண்டுமென வாதாடியதால் உள்நாட்டுக் கலகங்கள் பல உண்டாயின. இவர்களை எதிர்த்தோர் மறச்சாதியின ராவர். திருவிதாங்கூரில் கிறித்துவ மதத்தைத் தழுவிய சாணாரப் பெண்கள் மார்பில் துணியணியாமல் இருக்கும் வழக்கை மீறியதால் கலகங்கள் உண்டாயின. சென்னைத் தேசாதிபதி பெண்கள் இறவுக்கை அணியவும் மாறாடி இட்டு மார்பை மறைத்துக்கொள்ளவும் உரிமை வழங்கினார். நாடான், கிராமணி என்பன இவர்களின் பட்டப்பெயர். சாணார் என்னும் பெயர் சாறு என்னும் அடியாகப் பிறந்தது. சாணார் என்பது அவர்கள் மரம் ஏறப் பயன்படுத்தும் சாண் நார் காரணமாக வந்த பெயர் என்பாரு முளர்.

சாணி அல்லது சாணி வாள்ளு: இவர்கள் தெலுங்குச் சாதிக் குலத்தினர். இவர்கள் கோயிற் பணிவிடை செய்வார்கள். இவர்கள் தெற்கேயுள்ள தாசிகளைப் போலக் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட வர்களாவர். அகம்படியாரி லொரு பிரிவினரும் சாணி எனப்படுவர்.

சாதானி: பிச்சைக்காரப் பண்டாரங்களும் மற்றச் சாதிகளி லிருந்து சாதியால் விலக்கப்பட்டோரும் இப் பிரிவில் சேர்வர். வியபிசாரிப் பெண்களும் இவ் வகுப்பில் சேர்வர். பெண்கள் வைணவப் பெண்களைப் போல உடுத்துக்கொள்வர். சாதானியர் இறவுக்கை உற்சவம் என ஒரு விழா நடத்துவர். இப்பொழுது அது கந்தப்பொடி உற்சவம் எனப்படு கிறது. இவ் வுற்சவத்தில் முற்காலத்தில் இடக்கரான கிரியைகள் நடத்தப் பட்டன. இப்பொழுது கடவுள் வணக்கத்துக்குப் பின் சந்தனப் பொடியை ஒருவர் மற்றவர் மீது எறிவர். விழாவுக்குப் பின் அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து மது வருந்துவார்கள். பெண்கள் தமது இறவுக்கைகளைக் கழற்றி ஒரு ஏனத்துள் இடுவார்கள். அவைகளை ஆண்கள் ஆளுக்கு ஒன்றாக எடுப்பார்கள். எந்த இறவுக்கை எவனுடைய கையிற் கிடைக் கிறதோஅப் பெண் அன்று அவனுடைய மனைவியாவள்.

சாத்திரி: இது ஸ்மார்த்த பிராமணரின் பட்டப்பெயர். தேவாங்கு வகுப்பினருக்கும் இப் பட்டப்பெயர் வழங்கும்.

சாமந்தன்: மலையாள அரசரும் பெருமக்களும் இச் சாதியின ராவர். சாமந்தன் என்பதற்கு ஒரு பகுதிக்கு அதிகாரி என்பது பொருள். இவர்கள் பூணூலணிவதில்லை. இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. பெண்கள் பிராமணரையும் சத்திரியரையும் சம்பந்தம் கொள்வர். பெண்கள் கோயில் அம்மாமார் எனப்படுவர். அவர்கள் செருத்தாலி, எந்திரம் குழல் என்பவைகளைத் திருமணக் காலத்தில் அணிவர். சாமந்தனின் வீடு கொட்டாரம் (அரண்மனை) எனப்படும். பிராமணரின் வீடு மடம் எனப்படும்.

சாலியர்: மலையாள நெசவுத் தொழிலாளர் சாலியர் எனப்படு வர். இவர்களுக்குப் பொதுவான் என்னும் அம்பட்டன் உண்டு. பொது வானே சாலியரின் புரோகிதனாவன். இவர்களில் சிலருக்கு மருமக்கள் தாயமும், சிலருக்கு மக்கள் தாயமும் உண்டு. இவர்கள் வீதிகளிலே வாழ் கின்றமையின் தெருவர் எனவும் அறியப்படுவர். இவர்களுக்கு இறப்புப் பிறப்புத் தீட்டு பத்து நாட்களுக்கு உண்டு. பெண் தலைப்பூப்பு அடைந் தால் பெண்கள் அவளைக் குளத்துக்கு அழைத்துச் சென்று இலைகளாற் செய்த ஏனங்களால் நீரை அள்ளி அவளை முழுக்காட்டுவர். பின்பு அவளைத் தென்னங்குருத்தால் செய்த அறையில் இருத்துவர். அவளிருக் கும் பாயைச் சுற்றி அரிசியும் நெல்லும், தென்னம்பூவும் தேங்காய்களும் வைக்கப்படும். மூன்றாம் நாள் மாலை நேரத்தில் பெருவண்ணான் வெளுத்த மாற்றுத் துணி கொண்டுவருவான். அவனுக்குச் சிறிது நெல்லும் அரிசியும் கொடுப்பார்கள். அவன் அவற்றை ஓர் இலையில் வைத்துப் பூசை செய்வான். பின்பு அவன் துணிகளை மரத் தட்டில் வைத்துத் தட்டைத் தனது தலைமீது ஏந்துவான். அவன் சில வாழ்த்துப் பாடல்கள் பாடிய பின் அத் தட்டை நிலத்தில் வைப்பான். பெண்ணின் உறவினராகிய சில பெண்கள் எரியும் விளக்கு, நிறைகுடம், ஒரு படி அரிசி முதலியவை களைக் கொண்டு பலகையை மூன்று முறை சுற்றி வருவார்கள். அடுத்த நாள் பெண்ணை முழுக்காட்டுவார்கள். பாயில் வைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும் ஆற்றில் வீசப்படும்.

சாலியருக்குத் தாலிகட்டுச் சடங்கு உண்டு. பந்தல் இடப்படு கின்றது. ஒரு பலாப் பலகையின் மீது கொளுத்திய விளக்கு, வெற்றிலை, பாக்கு, ஒரு படி பச்சையரிசி முதலியன வைக்கப்படும். பெண் தனது வலது கையில் ஒரு போலி அம்மன் பாவையை வைத்துக் கொண்டு ஒரு பலகை மீது இருப்பாள். பொதுவனுக்கு ஒரு பிடி வெற்றிலையும் ஒரு பணமும் கொடுப்பார்கள். அவன் மணவாளனிடம் தாலியை எடுத்துக் கொடுப்பான். அவன் அதைப் பெண்ணின் கழுத்தில் கட்டுவான். கலியாணத்துக்கு முதல்நாள் மணவாளன் தனது ஆண் சுற்றத்தாரோடு மணமகள் வீட்டுக்குச் செல்வான். அங்கு விருந்துக் கொண்டாட்டம் நடைபெறும். பெண் கருப்பமடைந்து ஏழாவது மாதம் புளிக்குடி என்னும் சடங்கு நடத்தப்படுகிறது. பெண்ணின் சகோதரன் புளியங் கிளை ஒன்றைக் கொண்டு வருவான். இலைகளை எல்லாம் உருவிய பின் அது முற்றத்தில் நடப்படும். புளியமிலையிலிருந்து பிழிந்து எடுக்கப் பட்ட சாறு ஏழு தேங்காய்களிலுள்ள இளநீரில் கலக்கப்படும். பின்பு குடும்பத்தில் முதிய பெண் அதில் சிறிதை அக் கருப்பவதி குடிக்கும்படி கொடுப்பாள். இவ்வாறு மூன்று நாட்கள் செய்யப்படுகிறது. இறந்த வர்கள் புதைக்கப்படுவர். இறந்தவனின் மகன் புதுப்பானையில் தண் ணீரைச் சுடலைக்குக் கொண்டு செல்வான். அவன் குடத்தோடு பிணத்தைச் சுற்றி வந்து அதனை எறிந்து விடுவான். பிணத்தைப் புதைத்த இடத்தில் மூன்று கற்கள் வைக்கப்படும்.

சாலியர்: இவர்கள் தெலுங்கு நெசவாளர். இவர் தம்மைச் சேனாபதியர் என வழங்குவர். இவர்களின் சாதித் தலைவன் சேனாதிபதி எனப்படுவான். பட்டுச் சாலியர், பதும சாலியர் என இவரில் இருவகை யினருண்டு. பட்டுச் சாலியர் பூணூலணிவர். கொரு நாடு, ஐயம்பேட்டை முதலிய இடங்களில் வாழும் நெசவாளரும் சாலியர் எனப்படுவர். இவர்கள் திருநெல்வேலிச் சாலியருடையவும், கைக்கோளருடையவும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவர். செங்கற்பட்டிலுள்ள சாலியர் பெரிதும் கைக்கோளராவர். இவர்களின் குலதெய்வம் முத்தாட்சி அம்மன்.

சிவியார்: இவர்கள் பல்லக்குக் காவுஞ் சாதியினர். இடையரில் ஒரு பிரிவினருக்கும் இப் பெயருண்டு. வியபிசாரிகள் தூணிற் கட்டிப் புளியம் மிலாறுகளால் அடிக்கப்படுவர். பருவமடைந்து மணமாகாதவர்கள் மணமானால் பனை ஓலையில் வேண்டிய ஆண் வடிவங்களை வைத்து அவர்களுக்கு மணக்கிரியை நடத்தப்படும்.

சிறுகுடி: இது கள்ளரின் கிராமம் அல்லது ஊர்.

சிறுதாலி: இவர்கள் கைக்கோளர் மறவர்களுள் காணப்படும் பிரிவினர்.

சிற்பர்: இவர்களுள் பஞ்சம்மாளரில் ஒரு பிரிவினர்; கற்களில் வேலை செய்பவர்.

சீரிய கிறித்தவர்: கி.பி. 52இல் தோமஸ் ஞானியார் கொடுங் கோளூரில் வந்திறங்கினார். அவ்விடம் குசிறி அல்லது முசிறிக்கோடு எனப்படும். அக் காலத்தில் பினீசியரும் ஆப்பிரிக்க வணிகரும் வாணிகத் தின் பொருட்டு அங்கு வந்தார்கள். தோமஸ் ஞானியார் இந்தியாவில் பலரைக் கத்தோலிக்க மதத்தைத் தழுவச் செய்தார். இறுதியில் இவர் பிராமண மதத்தினர் ஒருவரால் ஈட்டியால் எறிந்து கொல்லப்பட்டு மயிலாப்பூரிலுள்ள சாந்தோமில் அடக்கஞ் செய்யப்பட்டார். இவ்வாறு பழங்கதை வழங்குகின்றது. இரண்டாம் தியதோய்ச்சுக் (Theodoisus) காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட் டார்கள். அப்பொழுது அவர்களிற் பலர் வந்து இந்தியாவிற் குடியேறி னார்கள். இன்னும் சிலர் கி.பி. 345 வரையில் சீரியாவிலிருந்து வந்தார்கள். வீரராகவச் சக்கரவர்த்தி (774) ஸ்தானுரவி குப்பதன் (824) முதலியோ ரளித்த பட்டயங்களில் சீரிய கிறித்தவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வீரராகவச் சக்கரவர்த்தி அளித்த பட்டையம் சீரிய கிறித்தவர்களிடத்தில் உள்ளது. பட்டையத்தில் சங்குமுத்திரை பொறிக் கப்பட்டுள்ளது. இப் பட்டையத்தால் சேரமான், உலோகப் பெருஞ் சேவடி என்னும் இரவிக் கொற்றனுக்கு மணிமங்கலம் என்னும் பட்ட மளித்துள்ளான். விழாக்கால உடை அணிதல், வணிக உரிமை, பரிவாரம் வைத்துக் கொள்ளுதல், ஐந்து வாத்தியங்கள், சங்கு முதலிய வாத்தியங் களைப் பயன்படுத்துதல், பகலில் பந்தம் பிடித்தல், நில பாவாடை விரித்தல், பல்லக்கு வைத்திருத்தல், அரசனைப் போல உலாவருதல், அலங்கரிக்கப்பட்ட வில் வைத்திருத்தல், வீட்டு வாயிலை வில் வடிவாக அமைத்தல் போன்ற உரிமைகள் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப் பட்டையத்தை வரைந்தவன் சேரமான் உலோகப் பெருந் தட்டான் நம்பி சடையன். இரவிக் கொற்றன் சீரிய கிறித்தவருள் ஒருவன். சீரிய கிறித்தவர் 9ஆம் நூற்றாண்டுக்கும் 14ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் பெருமை பெற்று விளங்கினார்கள். இவர்கள் உடையப் பேரூரைத் தலைநகராகக் கொண்ட கிறித்துவ அரசனால் ஆளப்பட்டார்கள் என்னும் செவி வழிச் செய்தி உண்டு. இன்றும் சில சீரிய கிறித்துவர் இந்து ஆலயங்களுக்குக் காணிக்கைக் கொடுப்பர். பிராமணரல்லாத சில இந்துக்களும் சீரிய கிறித்துவ ஆலயங்களுக்குக் காணிக்கை கொடுப்பர். சீரிய கிறித்தவர் தமது குழந்தைகளுக்குச் சாதகமெழுதி வைப்பர். திருமணத்தில் மண மகன் பெண்ணுக்குத் தாலி தரிப்பான். கணவன் மரணமானால் மனைவி தாலியைக் களைந்து விடுவாள். மரணத்துக்குப் பின் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்குப் புலர் என்னும் தீட்டுக் காப்பார்கள். ஆண்டில் ஒரு முறை இறந்த நாள் கொண்டாடப்படும்.

சூலி: கன்னடத் தேவதாசிகள் இப் பெயர் பெறுவர்.

செக்கன்: வன்னியனுக்கு இது மற்றொரு பெயர்.

செக்கான்: இவர்கள் தென்மலையாளத்தில் வட்டக்காடர் எனவும் வடமலையாளத்தில் வாணியர் எனவும் படுவர். செக்கார் வாணியரிலும் பார்க்க உயர்ந்தவர்களாவர். செக்கார் தீண்டுவதால் நாயருக்குத் தீட்டு உண்டு. இவர்கள் பழக்கவழக்கங்கள் நாயர் சாதியன ருடையவை போல்வன.

செட்டி: நெசவுகாரர், செக்கார் முதலியோர் இதனைத் தமக்குப் பட்டப் பெயராகக் கொள்வர். பேரிச்செட்டி, நகரச் செட்டி, காசுக்காரச் செட்டி, நாட்டுக் கோட்டைச் செட்டி முதலியோர் செட்டி வகுப்பிற் சிலராவர். (செட்டிகள் தம்மைத் தனவைசியர் எனக் கூறுவர். தனவைசி யரின் பிரிவுகள் காவிரிப்பூம்பட்டினத்துச் செட்டி, ஏழிலைச் செட்டி, இளையாத்துச் குடிச்செட்டி, சோழபுரத்துச் செட்டி, புளியங்குடிச் செட்டி, பூவள்ளுக் குடிச் செட்டி, திருவாப்பூர்ச் செட்டி, கருப்பூரச் செட்டி, காவேரிச் செட்டி, வளையல் செட்டி, மஞ்சப்பட்டுச் செட்டி எனச் சைமன் காசிச் செட்டியவர்கள் குறிப்பிடுவர்.)

செம்படவன்: தமிழ்நாட்டில் மீன் பிடிகாரர் செம்படவராவர். இவர்கள் நாட்டான், கவண்டன், மணியக்காரன், பாகுத்தன், பிள்ளை முதலிய பட்டப்பெயரை வைத்துக்கொள்வர். மலையனூரில் எல்லாச் செம்படவரும் தம்மைப் பூசாரிகள் என வழங்குவர். சிதம்பரத்திலே குறிக்கப்பட்ட ஒரு நாளில் செம்படவர் சுவாமியைச் சுமந்து ஊர்வலம் வருவர். அதற்காக அவர்களுக்குக் கூலியும் பொங்கலும் கொடுக்கப்படும். அம்மன் ஊர்வலம் வரும்போது செம்படவர் அம்மனை நிறுத்தி ஆடை கொடுப்பார்கள். அவர்கள் தலைவன் நாட்டாண்மைக்காரன் எனப்படு வான். அவனுடைய உதவிக்காரன் சங்கதிப் பிள்ளை அல்லது சங்கதிக் காரன் எனப்படுவான். படகு ஓட்டும் செம்படவர் கங்கையை வழிபடுவர். பூப்படைந்த பெண் காவலாகக் கையில் இரும்பை வைத்திருப்பாள். பெண் கருப்பமாகி ஏழாவது மாதம் முதுகுநீர் குத்தல் என்னும் சடங்கு நடத்தப்படும். பெண் குனிந்து நிற்கும்போது உறவினர் வெற்றிலையின் நுனியால் அவள் முதுகின் மீது பால் வார்ப்பார்கள்.

செம்மான்: இவர்கள் பறையரில் ஒரு பிரிவினர்; தோலில் வேலை செய்வோர். இப்பொழுது இவர்கள் செய்யும் வேலையைச் சக்கிலியர் புரிகின்றனர்.

செருமான்: இவர்கள் மலையாளத்தில் உழவுத்தொழில் செய்யும் வேலையாளர். வட மலையாளத்தில் இவர்கள் புலையர் எனப்படுவர். இவர்கள் காணியாளரால் அடிமைகளாய் விற்கவும் வாங்கவும் பட்டார்கள். 1862இல் இவ்வாறு விற்று வாங்குதல் சட்ட விரோதமாக் கப்பட்டது. இவர்கள் சாதிமான்களுக்கு 30 அடி தூரத்தில் வந்தால் தீட்டு உண்டாகும். செருமார், பிராமணர் கிராமங்கள், கோயில்களை அணுகுதல் கூடாது. இன்றும் செருமார் சந்தைகளுள் நுழைதல் கூடாது. இவர்கள் பிராமணருக்கும் நாயருக்கும் அறுபத்து நான்கடி தூரத்தில் நிற்றல் வேண்டும்.

சேணியன்: நெசவு தொழிலாளர் சேணியரெனப்படுவர். காஞ்சீ புரத்தில் சேணியார் இலிங்க மதத்தினராவர்.
சேனைக்குடையார்: இவர்கள் வெற்றிலை பயிரிடுவர். இவர்கள் இலை எனவும், கொடிக்காற் பிள்ளைகள் எனவும் அறியப்படுவர். மூப்பன், பிள்ளை என்னும் பட்டப் பெயர்களும் இவர்களுள் வழங்கும். இவர்கள் வீடுகளில் பறையர், அம்பட்டர், வண்ணார் உண்ணமாட் டார்கள்.

சொண்டி: ஓரிய வகுப்பினருள் கள் விற்போர் இவர்களாவர். இவர்கள் அரிசி, பனங்கட்டி, பனங்கள், இருப்பைப் பூ முதலியவற்றி லிருந்து சாராயம் வடிப்பர். தலைப் பூப்பு எய்திய பெண், நான்கு அம்புகளை நட்டுக் கயிற்றாற் றொடுத்துக் கட்டப்பட்ட இடத்தில் விடப்படுவாள். ஏழாவது நாள் அவளுக்கு முழுக்காட்டப்படும். பூப்படையுமுன் பெண்களுக்கு மணமாகும். இறந்தவர்கள் புதைக்கப்படு வார்கள். மரணத்தீட்டுப் பத்து நாட்களுக்குண்டு. பெண்கள் மச்ச மாமிசம் உண்ணார்கள். கஞ்சம் பகுதியில் பெண்கள் பூப்படைந்த பின் மணப்பர்.

சோலகர்: இவர்கள் கொச்சைக் கன்னட மொழி பேசும் மக்கள்.

சோழியப்பட்டர்: இது பட்டப் பிராமண வகுப்பினருக்கு மலையாளத்தில் வழங்கும் பெயர்.

சோனகர்: இவர்கள் இந்துத் தாய் தந்தையர் மரபில் வந்த முசல்மான்களாவர். சோனகன் என்னும் பெயர் அராபியனைக் குறிக்கும். மலையாளத்து மாப்பிள்ளைமார் சோனக மாப்பிள்ளைமார் எனப்படுவர். கிரேக்கரைக் குறிக்கும் யவனரென்னும் சொல்லுக்குப் பதில் சோனகர் என்னும் சொல் வழங்குகின்றது.
சோனார்: இவர்கள் மராத்தி மொழியில் ஒரு பிரிவினராகிய கொங்கணம் பேசும் தட்டார். இவர்களின் சாதித் தலைவன் முக்கியஸ் தன் எனப்படுவன்; இவன் வழக்குகளை விளங்கித் தீர்ப்பளிப்பான். ஒரு கோத்திரத்தில் இவர்கள் மணஞ் செய்து கொள்வதில்லை. இவர்களின் பட்டப்பெயர் செட்டி. சென்னையில் 408 பேருக்கு ஒரு தட்டானுண்டு. இங்கிலாந்தில் 1100-க்கு ஒரு தட்டானுண்டு.

சௌராட்டிரர்: இவர்கள் பட்டுநூற்காரர் எனப்படுவார்கள். இப் பெயர் இவர்கள் இருந்து வந்த சௌராட்டிர நாடு தொடர்புடைய பெயர்.

தக்கடோ: இவர்கள் மலைச்சாதியினரும், பிராமணரும் கலந்து உதித்தோர் . இவர்கள் செயப்பூர்ப் பக்கங்களிற் காணப்படுகின்றனர்.

தங்கர்: மராட்டிய இடையர் இப் பெயர் பெறுவர்.

தங்கலான்: இவர்கள் பறையரில் ஒரு பிரிவினர். தங்கலான் என்பதற்குக் கிட்ட நிற்கத் தகாதவன் என்பது பொருள்.

தசாரிகள்: இவர்கள் ஒரு வகை வைணவப் பண்டாரங்கள். இவர்களை ஒரு சாதியினர் என்று கூறமுடியாது.

தச்சநாடன் மூப்பன்: இது குறிச்சான்களுக்கும் நீலகிரிக் குறும்பர்களிற் சிலருக்கும் வழங்கும் பெயர்.

தச்சன்: இவர்கள் மரவேலை செய்வோர். பறையரில் ஒரு பிரிவினரும் இப் பெயர் பெறுவர்.

தண்டப்புலையர்: இவர்கள் தென் மலையாளத்தில் வாழும் புலையரில் ஒரு பிரிவினர். இவர்கள் தண்டக் கொடியை அறுத்துப் பின்னிய ஆடையை உடுப்பர். இப் புலைக் குடும்பங்கள் இல்லங்களாகக் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு இல்லத்தில் உள்ளவர்கள் அதே குடும்பத்தில் மணம் முடித்தல் ஆகாது. இவர்கள் குடியிருக்குமிடம் மன்றம் எனப் படும். இவர்கள் சூரியனைப் பார்த்து “சூரியனறிய கண் கெட்டுப் போக” என்று சொல்லிச் சத்தியஞ் செய்வர். இவர்கள் ஐஞ்சு தம்புராக்கள் எனப் பாண்டவரை வழிபடுவர்; இறந்தவருக்குக் கொள்ளிக் குடம் உடைப்பர்; பிணத்துக்கு வாய்க்கரிசி போடுவர். இறந்தவரின் ஆவி சாவார் எனப்படும்.

தண்டர் : மலையாளத்திலும் , வள்ளுவ நாட்டிலும் பாலைக் காட்டிலும் வாழும் ஈழவருக்கு இப் பெயர் வழங்கும். இவர்களிற் பெண்கள் பல கணவரை மணப்பர். ஊராளி என்பது இவர்களின் பட்டப்பெயர். சில இடங்களில் இவர்கள் வேளான் எனவும் படுவர். சாதிமான்களோடு பேசும் போது இவர்கள் தம்மைக் குழியர் (குழியில் வாழ்வோர்) என்பர். ஆண்களும் பெண்களும் நெற்றியில் பிறையும் ஒரு புள்ளியும் பச்சை குத்திக்கொள்வர். இவர்களுள் குருமார் மார்த்தாண்ட குருப்புக்கள் எனப் படுவர். குருப்புக்கள் அம்பட்டரு மாவர். இவர்களின் கடவுள் பத்திர காளி. பெண்கள் ஏழு அல்லது எட்டு வயதாகவிருக்கும் போது தாலிகட்டுக் கலியாணம் நடத்தப்படும். இக் கலியாணம் கழுத்துக் கெட்டி எனப்படும். மணமகன் மச்சாம்பி எனப்படுவான். இறப்பவர்களுள் குடும்பத்தில் வயதின் மூத்தவர் மாத்திரம் இறந்தால் சுடப்படுவர் இவர்களுக்கு மரணத் தீட்டு பத்து நாள் உண்டு. இறந்தவரின் கிரியைகள் கடற்கரையில் நடத்தப் படும். இறந்தவர்களுக்கு எள்ளோடு கலந்த உணவு கொடுக்கப்படும்.

தண்டான்: இவர்கள் தீயர். கிராமத்தில் தலைமுறையாக வரும் தலையாரிகள். தலையாரி அரசனால் நியமிக்கப்படுவான்.

தம்பலர்: தெலுங்கு பேசும் கோயிற் குருமார் இப் பெயர் பெறுவர். கோதாவரி, கிருட்டிணா முதலிய இடங்களில் இவர்கள் பிராமணர்க ளாகவும், தெலுங்கு நாட்டில் சூத்திரராகவும் கருதப்படுவர். இவர்கள் பூணூலணிந்து கொள்வர்.

தம்பி: இது திருவிதாங்கூர் நாயருக்கு வழங்கும் மரியாதைப் பட்டப்பெயர். திருவிதாங்கூர் அரசரின் பிள்ளைகளும் தம்பி எனப் படுவர்.

தம்பிரான்: திருவாடுதுறை, மயிலம் (தென்ஆர்க்காடு) முதலிய இடங்களிற் கோயிற் கருமங்களைப் பார்க்கும் பண்டாரங்கள் தம்பிரான் எனப்படுவர்.

தம்புரான்: திருவிதாங்கூரில் வாழும் ஒரு கூட்டத்தினர் தம்புரான் எனப்படுவர். இவர்கள் இருக்கும் இடப்பெயர்களால் வேறுபடுத்தி அறியப்படுவர். இவர்கள் வட மலையாளத்திலுள்ள கோலாட்டு நாட்டி லிருந்து வந்தார்கள். இவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக் குத் தாலிக் கட்டு அல்லது பள்ளிக்கட்டுச் செய்து அவர்களோடு கணவர் போல வாழ்வர். அரச குடும்பத்திலுள்ள ஆடவர் சூத்திரப் பெண்ணைக் கொள்வர். பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அல்லது ஏதும் காரணத்தை முன்னிட்டுப் பிரிந்து விட்டால் அவள் இன்னொரு கோயிற்றம்புரானைக் கொள்ளலாம். இவர்களின் குருக்கள் மலையாளப் போற்றிகளாவர். திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் முதற்பெண்ணுக்கு இலக்குமி என்றும், இரண்டாவது பெண்ணுக்குப் பார்வதி என்றும் பெயரிடப்படும்.

தருமராசர்: இவர்கள் வட ஆர்க்காட்டிலுள்ள இருளரில் ஒரு பிரிவினர்.

தலையாரி: இவர்கள் முதன்மையான கிராமக் காவலர். தெலுங்கு நாட்டில் முத்திராசர் கிராமக் காவலர்களாவர். அவர்கள் தலாரி வாலு எனப்படுவர்.

தலைவர்: இது பரவரின் பட்டப்பெயர். சாதித் தலைவனென்பது திருநெல்வேலி முத்துக்குளிகாரர் தலைவனுக்கு வழங்கும் பெயர்.

தாசி: நம்பூதிரிப் பெண்களின் பிராமணரல்லாத பணிப்பெண் இப் பெயர் பெறுவாள். இவள் தேவதாசியில் வேறானவள்.

தாய்: இது வட இந்தியாவினின்றும் வந்த சைனரின் பட்டப் பெயர். இவர்கள் பெரும்பாலும் வணிகராவர்.

தார்வாட்: இவர்கள் மருமக்கள் தாயக் குடும்பத்தில் ஒரு தாய் வட்டத்தைச் சேர்ந்தோர்.

தாலிகட்டுக் கலியாணம்: இது நாயர்ப் பெண்கள் பருவமடையு முன் அவர்களுக்கு நடத்தப்படும் கலியாணம். மருமக்கள் தாயமுடைய ஆண்பெண் என்பவர்களின் ஒழுக்கங்கள் தளர்ந்தவை. இக் கலியாணம் தேவதாசிகளுக்குச் செய்யப்படும் கலியாணம் போன்றது.

திகம்பரர்: இவர்கள் முழு நிர்வாணம் பரிசுத்தத்துக்கு அடை யாளமெனக் கொள்ளும் சைனர்.

திராவிட்: தென்னிந்திய பிராமணர் திராவிட் எனப்படுவர்.

திருமுடி: செங்கல் வேலை செய்வோர் திருமுடியாளர் எனப் படுவர். சேலம், கோயம்புத்தூர் முதலிய இடங்களில் இவர்கள் பெரும் பாலும் காணப்படுகின்றனர். பெண்கள் ஒழுக்கத்தளர்வுடையர். இவர்கள் பெரும்பாலும் வேட்டுவர் அல்லது கைக்கோளராவர். கோயி லுக்கு நேர்ந்து விடப்படும் கைக்கோளப் பெண்கள் கடவுளுக்குக் கலியாணம் செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுவர்.

தீபோ: இவர்கள் பொண்டாரி வகுப்பில் ஒரு பிரிவினர்.

தீயன்: தீயரும் ஈழவரும் மலையாளத்தில் கள்ளிறக்கும் சாதியினர். வடமலையாளத்தில் தீயப் பெண்களுக்கு ஐரோப்பியர் தொடர்பினால் பிள்ளைகள் பிறந்துள்ளன. இவர்களுக்கு மருமக்கள் தாயம் உண்டு. ஆகவே பிள்ளைகள் தாய் வட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். முற்காலத் தில் பெண்கள் ஐரோப்பியருடன் வாழ்தல் இழிவாகக் கருதப்பட வில்லை. கல்வி அறிவு ஏறப்பெற்ற இக் காலத்தில் அது இழிவாகக் கருதப்படுகிறது. ஈழவரும் தீயரும் இலங்கையிலிருந்து சென்றார்கள் என்னும் ஐதீகம் உள்ளது. ஈழத்து மக்கள் சிலர் மலையாளத்தில் வந்து குடியேறினார்களென்றும் அவர்கள் வரும்போது தென்னையை (தெற்கே உண்டாகும் மரம்) கொண்டு வந்தார்களென்றும் அவர்கள் தீவார் எனப்பட்டார்கள் என்றும், தீவார் என்பதே தீயார், தீயர் என்று ஆயிற்றென்றும் கூறப்படுகின்றன. நில சம்பந்தமான ஆவணங்களில் தீயர் ஈழவர் எனக் குறிக்கப்பட்டுள்ளார்கள். தீயர் ஈழவருக்குத் தாழ்ந்தவராகக் கருதப்படுவர். ஒருவன் சாதியிலிருந்து தள்ளப்பட்டால் வண்ணான் அம்பட்டன் முதலியோர் அவனுக்குக் கடமை செய்ய மறுப்பார்கள். வண்ணாரப் பெண்கள் பெரும்பாலும் தீய வகுப்பைச் சேர்ந்தவர்க ளாவர். பூப்பினா லுண்டாகும் தீட்டு, பிள்ளையைப் பெற்ற தீட்டு முதலியன, நீராடியபின் வண்ணாத்தி கொடுக்கும் “மாத்து” (மாற்று) உடுப்பதால் நீங்கும். ஈழவர் மாத்தைப் பற்றி அறியார்கள். தீயன் ஈழவன் சமைத்த உணவை உண்பான். ஈழவன் தீயன் சமைத்த உணவை உண்ண மாட்டான். தீயர் குடியிருப்புத் தரை எனப்படும். ஒவ்வொரு தரைக்கும் ஒவ்வொரு நாயர் அதிகாரியும். தீயத் தண்டனும், சோதிடனும், அம்பட்ட னும் பலவகைத் தொழிலாளருமிருப்பர். மணமகன் வீட்டாரையும் மணமகள் வீட்டாரையும் பொருந்த வைத்து மணம் ஒழுங்கு செய்வோர் சங்கதி எனப்படுவர். தந்தையின் குடும்பம் இல்லம் எனவும், தாயின் குடும்பம் குலம் எனவும் படும். ஒரே இல்லத்தில் மணங்கள் நடப்ப தில்லை. தென் மலையாளத்தில் மணமகன் மற்போருக்குச் செல்கின்ற வனைப் போல அரையில் ஆடையைக் கட்டிக்கொண்டும், கையில் வாள், கேடகம் என்பவற்றைப் பிடித்துக் கொண்டும், இவ்வாறு உடுத்திக் கொண்ட இரண்டு தோழர் பக்கத்தே வரக் கூத்தாடிக் கொண்டும் போவான். ஈழவன் ஒரு போதும் வாள் கொண்டு போவதில்லை. கலியாணத்தில் முக்கிய பகுதி வாயில் துற பாட்டு. வடமலையாளத்தில் இவர்கள் நெற்றியிலும் தோளிலும் திருநீறு பூசிக்கொள்வர்; பொன் கடுக்கன் அணிவர். இடக்கை மோதிர விரலில் வெள்ளி அல்லது பித்தளை மோதிர மணிவர். பலர் தாயத்துக் கட்டிக்கொள்வர். முற்காலத் தில் தென்மலையாளத் தீயர் முழங்காலுக்கு மேல் ஆடை உடுத்தார்கள். எல்லோரும் காது குத்திக்கொண்டனர். காதில் கடுக்கனும் அரையில் தாயத்தும் அணிந்தார்கள். அரைக்குமேல் யாதும் அணியவில்லை. இன்றும் பெண்கள் மார்பை மறைப்பது அரிது. ஈழவப் பெண்கள் நீல ஆடையைப் பெரிதுமுடுப்பர். இப்பொழுது இவர்கள் மார்பை மறைத் தும் ஆடையை அணிகிறார்கள். தீயர்ப் பெண்களில் சிலர் அணியும் தோடு அவர்களுக்குரியதன்று. முற்காலத்தில் பல தீயச் சகோதரர் கூடி ஒரு மனைவியை மணந்து வாழ்வார்கள். இவ் வகை நிகழ்ச்சியைப் பற்றிய சான்றுகள் எழுத்து மூலம் உள்ளன. தென் மலையாளத்தில் இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. பூப்பு அடையுமுன் பெண்ணுக்குத் தாலிக் கட்டுக் கலியாணம் நடைபெறும். இறந்தவனின் தலை தெற்கே இருக்கும்படி பிணம் கிடத்தப்படுகிறது. கைப்பெருவிரல் களும் கால்பெருவிரல்களும் சேர்த்துக் கட்டப்படுகின்றன. கால்மாடு தலைமாடுகளில் விளக்குகள் வைக்கப்படுகின்றன. இறந்தவரின் உடல் கொளுத்தப்பட்டால் சாம்பல் கடலில் அல்லது ஆற்றில் கொட்டப்படு கிறது. ஆண்டில் ஒரு முறை இறந்தவரின் நினைவுநாள் கொண்டாடப் படுகின்றது. அப்பொழுது வீட்டின் நடுவே விளக்குக் கொளுத்தி வைத்துப் பக்கத்தே தண்ணீரும் இளநீரும் வைக்கப்படும். இவர்கள் மாட்டு இறைச்சியை உண்பதில்லை.

துருவாளர்: இவர்கள் கட்டுக் கொடுக்கிற (கலியாணம் பொருத்தி வைக்கிற) சாதியினர். இவர்களுக்கு வேண்டான் என்பதும் மறுபெயர்.

துலாபாரம்: இது திருவிதாங்கூர் அரசரால் செய்யப்படும் ஒரு வகைத் தானம். அரசன் தனது நிறையுள்ள பொன்னைப் பிராமணருக்குத் தானஞ் செய்வான்.

துலுக்கர் (துருக்கியர்) : இப் பெயர் சில சமயங்களில் மகமதியரைக் குறிக்க வழங்கப்படும்

தேசிகர்: இவர்கள் பண்டாரங்களுள் ஒரு பிரிவினர்.

தேசாரி: வட ஆர்க்காட்டில் ஒவ்வொரு இடத்திலுமுள்ள தலையாரி தேசாரி எனப்படுவன்.

தேவடியாள்: தேவதாசி

தேவதாசி: தாசிகளில் ஏழு வகையினர்களுண்டு. (1) தத்தம் - தன்னைக் கோயிலுக்கு ஒப்படைத்தவள். (2) விக்கிரகம் - தன்னைக் கோயிலுக்கு விற்றவள் (3) பிரித்திய - தன் குடும்ப நன்மைக்காக கோயிற் பணிவிடை செய்பவள். (4) பத்தி காரணமாகக் கோயிலை அடைபவள் (5) தானே விரும்பி வந்து சேர்பவள் (6) அலங்காரஞ் செய்து அரசரால் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டவள். இவர்களின் வேலை விக்கிரங்களுக் குச் சாமரை வீசுதல், கும்ப ஆராத்தி கொண்டு செல்லுதல், கடவுள் உலாவரும் போது ஆடிப்பாடுதல் என்பன. 1004இல் இராசராசன் கட்டிய பெரிய தஞ்சாவூர்க் கோயிலின் நான்கு வீதிகளிலும் நானூறு தழுக்குச் சேரிப்பெண்கள் வாழ்ந்தார்கள். சென்ற நூற்றாண்டின் இறுதி யில் காஞ்சீபுரத்தில் நூறு ஆடல் மாதர் இருந்தார்கள். மதுரை, காஞ்சீ புரம் முதலிய கோயில்களில் இன்னும் பெருந் தொகையினர் காணப்படு கின்றனர். இவர்களுக்குக் கோயில் வருவாயி லிருந்து மானியங் கிடைக்கிறது. அப்தூர் இரசாக் (Abdul Rasak) என்னும் துருக்கிய தூதர் 15ஆம் நூற்றாண்டில் விசயநகரத்திலிருந்தார். இப் பெண்கள் மூலம் கிடைக்கும் வருவாய் நகரக் காவலர் (Police) சம்பளம் முதலியவற்றுக்குச் சென்றதென அவர் கூறியுள்ளார். இப் பெண்களுக்கும் வாளுக்கும் அல்லது கடவுளுக்கும் கோயிலில் கலியாணம் நடத்தப்படுகின்றது. பெண்களின் கழுத்தில் அவர்கள் குலத்திலுள்ள ஆடவர் தாலி கட்டு கின்றனர். தாசி குலத்தவர்களுக்கு ஆண்களைப் போலவே பெண்களுக் கும் சொத்துரிமை உண்டு. தாசி குல ஆடவர் நட்டுவர் எனப்படுவர். அவர்கள் தமது பெயருடன் பிள்ளை என்பதைச் சேர்த்து வழங்குவர். தாசிகளில் வலங்கை, இடங்கை என இரு பிரிவுகளுண்டு. வலங்கையினர் இடங்கைக் கம்மாளர் வீடுகளில் பாடவோ ஆடவோ மாட்டார்கள். மற்றவர்கள் கம்மாளத் தாசிகள் எனப்படுவார்கள். தெலுங்கு நாட்டில் கம்மாளர் போகம் அல்லது சாணி எனப்படுவர். ஒரிய நாட்டுத் தாசிகள் குனி எனப்படுவர். பெல்லாரியின் மேற்குத் தாலுக்காவிலும் அதன் அயலேயுள்ள தார்வர், மைசூர் முதலிய இடங்களிலும் போயர், பினா சூஸ் முதலியவர்களுள் ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களுள் ஒரு பெண் குழந்தை தாசியாகக் கோயிலுக்கு விடப்பட வேண்டுமென்று சட்டமுண்டு. திருவிதாங்கூர்த் தாசிகள் தேவடியாட்கள், குடிக்காரி (வீட்டுக் குரியவள்) அல்லது பெண்கள் எனப்படுவர். ஆடவர் தேவடி யான் அல்லது நாஞ்சில் நாட்டு வேளாளன் எனப்படுவர். திருவிதாங் கூர்த் தாசிகள் வீடுகளில் சேவிக்கப் போவதில்லை. தேவடியாள் முதுமை யடைந்துவிட்டால் தோடு களையும் சடங்கு நடத்தப்படுகிறது. இது அரசனது அரண்மனையில் நடக்கும். பின்பு அவள் தாய்க்கிழவி ஆகிவிடு வாள். கேரளத்தில் முறக்குடி சிறப்புக்குடி என இருவகைத் தாசிகள் உளர். முறக்குடிப் பெண்கள் முக்கிய காலங்களில் மாத்திரம் சேவிப்பர். திருவிதாங்கூர்த் தாசிகளின் சொத்துரிமை பெண்களைச் சார்கின்றது.

தேவர்: புதுச்சேரியில் கண்ணாடிப் பொருள்களில் வாணிகஞ் செய்யும் தெலுங்கர் தேவர் எனப்படுவர். கிராம தேவதைகளுக்குப் பூசை செய்யும் பூசாரிகளும் தேவர் எனப்படுவர். மறவரின் பட்டப்பெயர் தேவன். தென் கன்னடத்திற் கள்ளிறக்குவோர் தேவறுகளு (தேவரின் மக்கள்) எனப்படுவர். இவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவர்.

தேவாங்கர்: சென்னை மாகாணம் முழுமையிலும் காணப்படும் துளுவும் கன்னடமும் பேசும் நெசவுத் தொழிலாளர் இப் பெயர் பெறுவர். கோயம்புத்தூர்ப் பகுதியில் இவர்கள் செட்டுக்காரன் எனப்படு வார்கள். இவர்கள் சௌவேஸ்வரி என்னும் தெய்வத்தை வழிபடுவர். இவ் வழிபாடு காளி, துர்க்கை வழிபாட்டின் வேறுபாடாகும். இவர்கள் பெரிதும் சைவ மதத்தினர்; இலிங்கங்கட்டிக் கொள்வர். நாட்டுமக்கள் பல எருதுகளை வளர்ப்பர். எருது இறந்துவிட்டால் துக்கம் கொண் டாடிப் பலர் பின்தொடர்ந்து செல்ல அதனை எடுத்துச் சென்று புதைப்பர்.

தேவாதிக்கர்: இவர்கள் கன்னடத்தில் கோயிற்றொண்டு செய்யும் கன்னடம் பேசும் மக்கள். மயூரவர்மன், பூசை மாத்திரம் பிராமணர் செய்தல் வேண்டுமென்றும், மற்ற வேலைகள் ஸ்தானிகர், தேவாதிக் கர்கள் செய்ய வேண்டுமென்றும் விதித்தான். இப்பொழுது இவர்களிற் பலர் உழவுத்தொழில் செய்கின்றனர். பெண்களின் சொத்துரிமை பெண் களைச் சார்வது.

தொண்டமான்: இவர்கள் திருநெல்வேலிப் பகுதியில் வாழும் சுண்ணாம்புக்காரர். இவர்கள் புதுக்கோட்டையிலிருந்து திருநெல்வேலி யிற் சென்று குடியேறிய கள்ளரில் ஒரு பிரிவினர். இவர்களில் தொண்ட மான், தோல்மேஸ்திரி என இரு பிரிவினருண்டு.

தொம்மாரர்: இவர்கள் ஓரிடத்தில் தங்காது திரியும் கழைக் கூத்தர். இவர்கள் தெலுங்கு மராட்டியர்; இந்துஸ்தானி பேசுவர். இவர்கள் சாதிப்பறையரிலும் உயர்ந்தவர். ஆரியக் கூத்தாடிகள் என்பதும் இவர்களுக்குப் பெயர். கழைக் கூத்துத் தொடங்குமுன் இவர்கள் சாணியி னால் பிள்ளையார் பிடித்துவைத்து அதனை வழிபடுவர்.

தோடர்( தோதர்) : இவர்கள் நீலகிரி மலையில் வாழ்வர்; எருமை களை வளர்ப்பர்; தமிழ் பேசுவர். இவர்களுக்குச் சுருண்டு தொங்கும் தடித்த தலைமயிரும் அடர்ந்த தாடியும் உண்டு. பெண்கள் பூப்படைந்த பின் பச்சை குத்திக்கொள்வர். பெண்கள் மாட்டுத் தொழுவத்தில் எரியும் கொள்ளிக் கட்டையைத் தொட்டால் தீட்டு உண்டாகும். தோதரின் தொழுவத்துக்குப் பிராமணன் செல்லுதல் ஆகாது. தோதர் பெரும் பாலும் மோரில் சோறு ஆக்குவர். பெண்கள் பல கணவரை மணப்பர். தோதப்பெண் ஒருத்தி ஒருவனுக்கு மனைவியாகும்போது அவள் அவன் சகோதரர் எல்லாருக்கும் மனைவி என்பது விளங்கிக் கொள்ளத்தக்கது. சில சமயங்களில் கணவர் சகோதரராயிராவிட்டாலும் ஒரே கூட்டத் தைச் சேர்ந்தவராயிருப்பர். இரண்டு அல்லது பல சகோதரர் பல பெண்களைத் தமக்குப் பொதுமனைவியராக வைத்திருப்பர். இறந்த வரின் உடல் சுடப்படும். அப்பொழுது சுடலையில் எருமை பலியிடப் படும்.

தோட்டி: இவர்கள் சக்கிலியருள் ஒரு பிரிவினர். தஞ்சாவூர்த் தோட்டியான் அல்லது கம்பளத்தான் பன்றிவளர்த்தல் , பாம்பு பிடித்தல், பிச்சையெடுத்தல் முதலிய தொழில்களைச் செய்வான். தோட்டி தந்தை யின் சகோதரி மகளை அல்லது தாய்மாமன் மகளைக் கலியாணம் செய்ய லாம். இக் கட்டுப்பாடு இருப்பதால் சிறுவருக்கு வளர்ந்த பெண்கள் கலியாணம் முடிக்கப்படுவர். அப்பொழுது மணமகனின் தந்தை பெண் ணோடு சேர்ந்து பிள்ளைகளைப் பெறுவான். தோட்டியான் பிராமணன் வீட்டில் உண்ணமாட்டான். இதற்குக் காரணம் புலப்படவில்லை. பெண்கள் குடும்ப வட்டத்துக்குள் புரியும் வியபிசாரம் குற்றமாகக் கருதப்படமாட்டாது. தோட்டிகளின் குடித்தலைவன் ஊர் நாயகன் எனப்படுவான். மணமான பெண்கள் கணவனின் உறவினருக்குத் தமது தயவைக் கொடுத்தல் குற்றமாகக் கருதப்படமாட்டாது. வாயிலில் ஒருவனின் செருப்பு இருப்பதைக் கண்டால் கணவன் உள்ளே செல்ல மாட்டான். இவர்கள் இறந்தவரைக் கல் நட்டு வழிபடுவர்.

தோணி: தோணி பேழை போன்றது. 70 அடி நீளமும் 20 அடி அகலமும் 11 அடி ஆழமுமுடையது. அடி தட்டையாக விருக்கும். அடிப்பகுதி 7 அடி அகலமுடையது. தென்னிந்தியாவில் அடிக்கப்பட்ட ஈய, செம்பு நாணயங்களில் தோணி பொறிக்கப்பட்டுள்ளது.

டோபி(Dhobi): இது வண்ணானுக்கு இந்தியா முழுவதிலும் வழங்கும் பெயர். இது கழுவு என்னும் பொருள் தருவது. தாவ என்னும் சமக்கிருத அடியாகப் பிறந்தது. இவர்கள் ஆதியில் ஒரிசா மாகாணத்தி லிருந்து வந்தார்கள். மணக் காலங்களில் இவர்கள் ஏழு வீடுகளிலிருந்து ஏழு குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து மணமகனையும் பெண்ணையும் முழுக்காட்டுவார்கள். மணக்கிரியையில் இருவரின் இடக்கையும் சேர்த்துக் கட்டப்படும். பந்தலிலிருப்போர் இருவர் மீதும் மஞ்சளையும் அரிசியையும் எறிவார்கள்.

தோரியர்: இவர்கள் கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களிற் காணப்படுவர். இவர்கள் முற்காலத்தில் மீன் பிடிப்போரும் பல்லக்குச் சுமப்போருமாக இருந்தனர். இப்பொழுது இவர்கள் வெற்றிலை பயிரிடு வர். இவர்களின் சாதித்தலைவன் எசமானன் எனப்படுவன். இவன் இவர்களிடையே உள்ள வழக்குகளை விளங்கித் தீர்ப்பன்.

நகரத்தார்: இவர்கள் செட்டிகளில் ஒரு பிரிவினர். நகரமென்பது பட்டினம். இவர்கள் முன்பு காஞ்சீபுரத்திலிருந்தார்களென்பது ஐதீகம். இவர்களின் வேலையாள் சாதிப்பிள்ளை எனப்படுவன். விதவைகள் மறுமணஞ் செய்வதில்லை.

நங்குடி வேளாளன்: இவர்கள் திருநெல்வேலியிற் பல பாகங் களிலே வாழ்கின்றனர். கோட்டை வேளாளரிருக்கும் சிறீவைகுந்தக் கோட்டைக்கு நங்குடி வேளாளப் பெண்கள் போக அனுமதிக்கப்படுவ தில்லை. இவர்களுள் ஒருவர் இறந்துபோனால் அச் செய்தியை அம்பட்டன் அறிவிப்பான். அக்கினி என்னும் மகாமுனி தவம்செய்து கொண்டிருக்கும் போது தெய்வப் பெண்கள் நீராடவந்தார்களென்றும் முனிவர் அவர்களைக் காதலித்து மூன்று குமாரரைப் பெற்றார் என்றும் அவர்களை வேளாளர்கள் வளர்த்தார்க ளென்றும் அவர்களே சேர, சோழ, பாண்டிய அரசர்கள் என்றும் ஐதீகங்கள் உள்ளன.

நம்பிடி: இவர்கள் மலையாளத்தில் காணப்படும் நம்பூதிரிகள் போன்ற ஒரு கூட்டத்தினர். இவர்கள் பூணூலணிவர். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. தாலிகட்டுக் கலியாணம் இவர்கள் சொந்தச் சாதியினரால் செய்யப்படும். நம்பூதிரிமாரும், இச் சாதி ஆடவரும் நம்பிடிப் பெண்களைச் சம்பந்தங் கொள்வர். நம்பிடி ஆடவர் நாயர்ப் பெண்களைச் சம்பந்தம் வைக்கலாம். இவர்கள் விருந்துகளில் நம்பூதிரிக ளோடு இருந்து உண்பர். பெண்கள் மனோலபாடு எனப்படுவர்.
நம்பூதிரி: கேரள உற்பத்தி என்னும் நூல் மலையாள மொழியி லுள்ளது. அது பரசுராமர் கன்னியாகுமரியிலிருந்து வருணனை நோக்கித் தவஞ் செய்து கன்னியாகுமரி முதல் கோகர்ணம் வரையிலுள்ள நிலத்தைப் பெற்றாரென்றும், பரசுராமராற் குடியேற்றப்பட்டவர்களே நம்பூதிரிகள் என்றும் கூறுகின்றது. இவர்களின் உரிமை வழி மருமக்கள் தாயம். நம்பூதிரிப் பெண்கள் வெளியே செல்லும்போது தம்மை வைக்கான் குடையால் மறைத்துக்கொள்வர். விரிசாலி என்னும் நாயர்ப் பெண் அவர்களின் முன்னே செல்வாள். நம்பூதிரிப் பெண்கள் வெளியே செல்லும்போது தம்மைக் கழுத்து முதல் கால்வரையும் துணியால் போர்த்து மறைத்துக்கொள்வர். இவர்கள் நகை அணிதல் கூடாது. இவர்களைப் பரசுராமர் கொண்டு வந்து குடியேற்றினார் என்னும் கதை நம்பத்தக்கதன்று. இவர்கள் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கும் 8ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் மலையாளத்தில் குடியேறினார்களாகலாம். தாலமி, பெரிபுளூஸ் என்போர் பிராமணர் மலையாளத்திற் குடியேறி யிருந்தமையை கி.பி. முதலாம் நூற்றாண்டிற் குறிப்பிட்டுள்ளார்கள். மேற்குச் சாளுக்கிய அரசர் வலிமை பெற்றிருந்த கி.பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளில் இங்கு வந்து தங்கிய பிராமணர் நம்பூதிரிகளோடு கலந்து ஒன்றுபட்டிருத்தல் கூடும். சாளுக்கியருக்குப் பன்றிக் கொடி உண்டு. ஆதலின் சாளுக்கியப் பிராமணர் குடியேறிய இடம் பன்னியூர் (பன்றியூர்) எனப்பெயர் பெற்றிருக்கலாம். சேவூர்ப் (சிவனூர்) பிராமணர் சைவ சமயத்தினராவர். இவர்கள் சாளுக்கியருக்குப் பின் வந்த சேர, சோழ, பாண்டிய அரசர்களின் சமயத்தையே பின்பற்றினார்களாகலாம். பெருமாளென்னுமரசர் சேரநாட்டுக்கு அயலே இருந்து வந்தவர்களாக லாம். இவர்கள் தமது சொந்த நாட்டை விட்டுவந்தமையால் இவர்கள் நம்பூதிரிப் பெண்களை மணந்துகொள்ள நம்பூதிரிகள் மற்ற வகுப்புப் பெண்களைச் சம்பந்தங் கொண்டார்களாகலாம். ஆகவே மருமக்கள் தாயம் அவசியமாயிற்று. கேரளத்தின் சில பகுதிகள் அதிகாரிகளால் ஆளப்பட்டது. வள்ளுவ நாடல்லாத மற்றைய இடங்களில் நம்பூதிரிகள் அதிகாரிகளாக விருந்திருக்கின்றனர்.

நம்பூதிரிமார் கோயிற் பூஜை செய்வர். இவர்கள் அரசரின் தூத ராகவும் செல்வர். மலையாளத்தில் பட்டர்ப் பிராமணர் அங்குமிங்கும் அலைந்து திரிவர். அவர்களுக்கு உணவு நம்பூதிரிகள் இல்லங்களிலும் கோவிலகங்களிலும் கோவில்களிலும் கிடைக்கும். நம்பூதிரிகளுக்கு ஏடு (வேதம்) படித்தலும் படிப்பித்தலும், பிச்சை, ஓது, அடுக்களை கதவு (எல்லாப் பிராமணரும் குளிக்குமிடத்தில் நின்று குளித்தல்) ஆடு (வேள்வி) சந்தி, குருவாயிருந்து கோயிற் கிரியை செய்தல், அரங்கு, பந்தி (எல்லாப் பிராமணரோடு மிருந்து உண்ணுதல்) போன்ற உரிமைகள் உண்டு. இவர்கள் தலைமயிரை நெற்றிக்கு முன்னால் தொங்கும்படி முடிந்துவிடுவர். நல்லநாள் பார்த்து முகத்தையும் தலையையும் மழித்துக் கொள்வர். மனைவி கருப்பவதியானால் நம்பூதிரி மயிரை வளரவிடுவான். இவர்களுக்கு அடர்ந்த மயிருண்டு. இவர்களின் பழக்க வழக்கங்களுட் சில தோதரிடையே காணப்படுவன போல்வன. அதனால் இவர்கள் தோதரில் ஒரு பிரிவினர் என்று கருதப்படுவர். இவர்கள் விரல் நகங்களை நீளமாக வளரவிடுவர். ஆடவரின் உடுக்கும் வகை “தட்டுத் தூக்குக” எனப்படும். நம்பூதிரிகள் மிரிதடி தரிப்பர். பெண்கள் உடுக்கும் வகை “ஒக்கும் கொலுத்தும் வச்சுத் தூக்குக” எனப்படும். ஆடவர் காதில் துளையிட்டுக் குண்டலமணிவர். பெண்கள் சூட்டு என்னும் காதணி செருத்தாலி முதலியவற்றை அணிவர். அவர்கள் மூக்கைத் துளையிட்டு அணியும் அணிகளை அணிவதில்லை; நீராடியபின் நெற்றியில் சந்தனத் தால் மூன்று குறிகள் வைப்பர். அது அம்புலிக் குறி எனப்படும். அவர்கள் ஒரு போதும் குங்கும மணிவதில்லை; மஞ்சள் குளிப்பது மில்லை. ஆடவர் கை விரலில் பவித்திரம் என்னும் ஆழி அணிவார்கள்; பூணூலில் யந்திரத் தகடு அடைத்த கூட்டைத் தொங்கவிடுவார்கள். பன்னிரண்டு வயதுப் பையன் கவரிமான் தோல் வாரை இடது தோளுக்கு மேலால் போட்டிருப்பான். இரண்டு தலைப்புகளும் அத் தோலினாலேயே பொருத்தித் தைக்கப்பட்டிருக்கும். இவர்கள் திருமணத்துக்குப் பின் பூணூலை மாற்றிக் கொள்வதில்லை. தென்னிந்திய பிராமணர் ஓர் ஆண்டுக்கு ஒரு முறை பூணூலை மாற்றுவர். நம்பூதிரி இருக்கும் வளவுக் குப் பெயருண்டு. வீட்டின் வடகிழக்கில் தொழுவம் இருக்கும். அது கோசாலை எனப்படும். இவர்கள் இருப்பதற்குப் பெரும்பாலும் மான் தோலைப் பயன்படுத்துவர். நம்பூதிரியின் மூத்த குமாரன் காரணவன் எனப்படுவன். அவன் உணவை உண்ட பின் எழும்போது இடக்கையால் இலையைத் தொடுவான்; மனைவி வலக்கையால் தொடுவாள். அப்பொ ழுது அது எச்சில் ஆகமாட்டாது. அவள் அவ் விலையில் உணவைப் புசிப்பாள். நம்பூதிரி, பட்டர் சமைத்த உணவை உண்ணலாம். சுரைக்காய், பனம்பழம், பனங்கட்டி முதலியவைகளை நம்பூதிரி உண்பதில்லை. பால் பாயசமாக மாத்திரம் (பிரதமன்) உண்ணப்படும். நம்பூதிரி மந்திர வாதிகள் ஒருவனைக் கொல்லவேண்டுமானால் அவனைப் போன்ற வடிவை உலோகத் தகட்டில் எழுதி அதன் கீழ் யந்திரம் வரைந்து மந்திரம் செபிப்பார்கள். பின்பு அதனை இன்னொரு உலோகத் தகட்டில் வைத்துச் சுருட்டி அதை அவன் குடியிருக்கு மிடத்துக்குக் கிட்டப் புதைப்பார்கள். அவன் அவ் விடத்தில் மிதித்தால் உடனே மந்திரம் பலித மாகும். அவன் இறந்து விடுவான். அல்லது ஏதும் துயரத்துக்கு ஆளா வான். மந்திர வித்தைக்காரர் குட்டிச்சாத்தானை வாலாயம் செய்து கொள்வார்கள் என்று மலையாளத்தில் நம்பப்படுகிறது. ஆண் குழந்தை யில்லாத நம்பூதிரி மனைவியின் மரணத்துக்குப் பின் மயிரை ஓராண்டுக்கு வளரவிடுவான். தாய் அல்லது தந்தைக்குக் கடமை செய்யும் மூத்த மகனும் அவ்வாறே ஓராண்டுக்கு மயிரை நீள வளரவிடுவான். மயிரை வளரவிடும் காலத்தில் முருங்கைக்காய், பால், மிளகாய், துவரை, அவரை, பப்படம் முதலிய உணவுகள் நீக்கப்படும். குளிக்கும்போதெல்லாமல் இவர்கள் கௌபீன மணிவதில்லை. கடைசிப் பெருமாள் அராபியாவுக் குச் சென்ற காலம் முதல் (கி.பி.825) மலையாள ஆண்டு கணக்கிடப்படும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘அதிக’ என்னும் ஒரு நாள் சேர்க்கப்படும்.

நாயர் நம்பூதிரிக்கு ஆறு அடிக்குள்ளும், அம்பட்டன் 12 அடிக் குள்ளும், தீயன் 36 அடிக்குள்ளும், மலையன் 64 அடிக்குள்ளும், புலையன் 96 அடிக்குள்ளும் வருதல் கூடாது. உயர்ந்த சாதியான் வீதி வழியே செல்லும் போது தாழ்ந்த சாதியான் விலகிச் செல்லும்படி சத்தமிடு வான். தாழ்ந்த சாதியான் போகும் போதுதான் செல்வதை உயர்ந்த சாதியாருக்கு அறிவித்தற்கும், உயர்ந்த சாதியாரின் சத்தத்தைக் கேட்டுத் தான் விலகி நிற்றற்கும் சத்தமிடுவான். இவர்கள் ஒரே கோத்திரத்தில் மணப்பதில்லை. மணமான பெண் கணவனின் கோத்திரத்தைச் சேர்ந்து விடுகிறாள். மணமாகாது இறந்த பெண்களுக்கு மணக்கிரியை செய்து தாலி கட்டப்படும். தோதர் சாதியினரும் இவ்வாறே செய்வர். மணத்தின் போது பெண்வீட்டார் மணமகன் வீட்டுக்குச் சென்று அவனை அழைத்து வருவார்கள். மணமகன் வைக்கான் குடையின் கீழ்ச் செல்வான். நாயர்ப் பெண்களும் நாயரும் நம்பூதிரிகளும் வாயிலில் நின்று பவனி வருவார்கள். மணமகன் துட்ட தேவதைகள் அணுகாதபடி கையில் கங்கணங் கட்டிக் கொண்டும், பதினாறு கணுவுள்ள மூங்கில், முகம் பார்க்கும் கண்ணாடி, அம்பு, நாலு சேலை, தாலி முதலியவற்றைக் கொண்டும் வருவான். வாயிலில் நம்பூதிரிப் பெண்களைப் போல் உடுத்த நாயர்ப் பெண்கள் பவனி வருபவர்களை எதிர்கொள்வார்கள்; மணமக னின் முகத்துக்கெதிராக ஆலத்தி காட்டுவார்கள். சடங்கின் முன் பகுதி “நந்தி முகம்” (புண்ணிய ஆக வசனம்) எனப்படும். மணமகளை மண வறைக்குக் கொண்டு செல்வ தன் முன் மணமகளின் தந்தை மணமகனின் காலைக் கழுவுவான். நாயர்ப் பெண்கள் ஆயிரந்திரி என்னும் ஆலத் தியைக் காட்டுவர். மணப்பந்தல் தூண்களுக்குச் சிவப்பு ஆடை சுற்றப் பட்டிருக்கும். மணமகனையும் மணமகளையும் மணவறைக்கு அழைத் துச் செல்லும்போது ஒருவரை ஒருவர் பாராதபடி நடுவில் வைக்கான் குடை பிடிக்கப்படும். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்குஞ் சடங்கு முக தரிசனம் எனப்படும். மணமகளும் மணமகனும் மூன்று நாட்கள் பிரிந்து தனியே இருப்பர். நாலாம் நாள் இருவரையும் படுக்கையறைக்குச் கொண்டு சென்று அறையின் கதவைத் தாழிட்டுவிட்டு குருக்கள் வெளியே நின்று சுலோகஞ் சொல்லுவர். ஐந்தாவது நாள் குளத்தில் நீராடியபின் இருவரும் மீன் பிடிப்பார்கள். மீன் பிடிக்கும் கிரியை, முன்பு மீன் பிடிப்பவர்களாகவிருந்தவர்களைப் பரசுராமர் பிராமணராக்கினார் என்னும் ஐதீகத்தைக் குறிக்கின்றதென்பர். நம்பூதிரிகளில் வியபிசார நடத்தையுள்ள பெண்கள் கடுமையாகத் தண் டிக்கப்படுவார்கள். வியபிசாரி என்று சந்தேகிக்கப்பட்டவள் ஐஞ்சாம் புரம் அல்லது பஞ்சோலைப்புரம் என்னும் இடத்தில் விடப்படுவாள். அப்பொழுது அகக்கோயின்மார், புறக்கோயின்மார் என்போர் வந்திருப் பார்கள். அகக்கோயின்மார் ஒழுக்கத்தைப் பாதுகாப்போர். புறக்கோயின் மார் அரசன் சார்பில் வந்திருப்போர். விசாரணைத் தலைவன் ஸ்மார்த் தன் எனப்படுவன். ஸ்மார்த்தனால் செய்யப்படும் விசாரணை ஸ்மார்த்த விசாரணை எனப்படும். குற்றச்சாட்டு உறுதியானால் பெண்ணின் கிட்டிய உறவினன் அவளுக்குச் செய்ய வேண்டிய அந்தியக் கிரியை களைச் செய்வான்.

சமயசம்பந்தமாகப் பதினெட்டுச் சங்கங்கள் உண்டு. அவற்றின் தலைவன் வாக்கிய விருத்தி எனப்படுவான். அவன் ஓத்து நம்பூதிரியாக விருத்தல் வேண்டும். அவனுக்கு அடுத்தபடியிலுள்ளவன் பாஸ்கரன். இவன் சாஸ்திரிகளுக்கு (அத்திரப் பயிற்சிக்கு)க் குரு. கதைகளி என்பது மலையாளத்து நாடகம். இவர்கள் அசயாகம் என்னும் ஆட்டுக்கடா யாகம் செய்து யாகத்தில் கொன்ற ஆட்டின் இறைச்சியை உண்பர். சிறுவர் பூணூலணிவர். முற்காலப் பெண்களும் பூணூலணிந்தார்கள். பூணூல் கிருஷ்ணமிருகா என்னும் மான் தோலினால் இடப்படும்.

நரிக்கால்: நரி அங்கம்மாவின் வாகனம். இப் பெயர் நரிக்கொம்பு செய்யும் குருவிக்காரனுக்கும் வழங்கும்.

நாகர்: கஞ்சம், விசாகப்பட்டினப் பக்கங்களில் வாழும் பலர் தமது குலம் நாக வமிசமென்பர். குர்னியர், தொரியர் என்போர் திருமணக் காலத்தில் பாம்புகளுறையும் எறும்புப் புற்றுகளை வணங்குவர். பள்ளிகளில் ஒரு பிரிவினர் நாகபடம் என்னும் பாம்பின் தலைபோன்ற ஒரு வகை அணியை அணிவர். அவர்கள் நாகர் எனப்படுவர்.

நாகவாசுலு: விசாகப்பட்டினப் பக்கங்களில் உழவுத்தொழில் செய்யும் மக்கள் இப் பெயர் பெறுவர். விவாகத்தை விரும்பாதிருக்கும் மகளிர் வியபிசாரத்தால் பொருளீட்டுவர்; வீடுகளில் நடனமாடுவர். இவர்கள் நாயுடு சாதிக்குத் தாழ்ந்தோர்.

நாஞ்சில் நாட்டு வேளாளர்: நாஞ்சில் நாட்டு வேளாளர் என்னும் ஒரு பிரிவினர் திருவிதாங்கூர் முழுமையிலும் அங்குமிங்கும் காணப்படுகின்றனர். இவர்களின் முக்கிய இடம் தோவலா (Tovala). இவர்களின் பழக்கவழக்கங்கள் வேளாளர் பழக்க வழக்கங்களில் வேறானவை. இவர்கள் தங்கள் பெயர்களுடன் கணக்குப்பிள்ளை என்னும் பட்டப் பெயரைச் சேர்த்துக் கொள்வர். கி.பி. 825இல் சீரிய கிறித்தவருக்கு அளிக்கப்பட்ட நன்கொடைப் பட்டையத்தில் ஒரு தச்ச குடும்பமும் நான்கு வேளாளக் குடும்பங்களும் கடற்கரையில் மரங்களை வைத்து உண்டாக்குதற்குப் பொறுப்புடையன என்று கூறப்பட்டுள்ளது. வேளாளர் காராளர் எனப்பட்டுள்ளார்கள். பாண்டிய அரசர் இந் நாட்டின் சில பகுதிகளை ஆண்ட காலத்து இவ் வேளாளர் வந்து குடி யேறியிருத்தல் கூடும். பலர் நாஞ்சில் நாட்டு வேளாளர் என்னும் பெயரை விட்டு நாயர் என்னும் பெயரை வைத்துக்கொண்டனர். இவர்களின் முதன்மையுடைய தெய்வங்கள் மாடன், இசக்கி, இனன் முதலியன. நாஞ்சில் நாட்டு வேளாளரின் கிரியை சம்பந்தமாகப் பாடப்படும் பாட்டு வில்லடிச்சான் பாட்டு எனப்படும். அவர்களின் விழாக்களிற் சிறந்தது அம்மன்கொடை என்பது. சித்திரை மாதத்து அமாவாசியன்று சித்திர புத்திரன் கதை கோயில்களில் படிக்கப்படும். இவர்களிற் பலர் ‘காரியஸ் தன்’ முதல்பிடி (பொக்கிஷக்காரன்) கணக்கன் முதலிய அலுவல்களில் அமர்ந்துள்ளார்கள். பெண்கள் பருவமடைந்தபின் மணப்பர். தாய் மாமன் மகள். சிறியதாய் மகள் சிறந்த மணமகளிராகக் கொள்ளப்படுவர். மணமகனுக்குக் கொடுக்கும் பரிசுகளில் முண்டு, இரும்பு எழுத்தாணி, கத்தி முதலியன அடங்கும். நாஞ்சில் நாட்டு வேளாளர் நாயர்ப் பெண் களிடையே சம்பந்தங் கொள்வர். கணவன் விடுமுறி எழுதிக் கொடுத்துக் கலியாண நீக்கம் செய்து கொள்ளலாம். ஆண் பிள்ளைகளுக்குத் தந்தை தேடிய சொத்தில் நாலிலொன்றும், தந்தை வழி வரும் சொத்தில நாலி லொன்றும் சேரும். அது உகந்துதாமா எனப்படும். கலியாணம் தள்ளப் பட்ட பெண்ணுக்குக் கணவனிடம் சீவிய காலம் வரையும் வாழ்க்கைச் செலவு பெற உரிமையுண்டு. இதற்காக அவள் உரிமை கோரும் சொத்து நங்கு (கை) தாமா எனப்படும். (நங்கு) - பெண்.

நாடான்: சாணான்.

நாட்டுக் கோட்டைச் செட்டி: நாட்டுக்கோட்டைச் செட்டிமார் பெரிதும் வட்டிக்குப் பணங் கொடுத்து வாங்குவர். இவ் வகையில் இவர்கள் தென்னிந்திய யூதர்கள் எனப்படுவர். இவர்களின் தத்துப் பிள்ளை மஞ்சள் நீர்ப் பிள்ளை எனப்படுவர். செட்டிகள் தலைமயிரை மழித்துக் கொள்வர். இப்பொழுது இவ் வழக்கம் பெரும்பாலும் நின்று போய்விட்டது. பெண்களும், ஆண்களும் காதைத் துளையிட்டுக்கொள் வர். சிறுமியர் மணிகளும் சிப்பிகளும் கோத்த மாலைகளை அணிவர். இவர்களுக்குக் கோயில் வாயில் மறியல், மடத்துவாயில் மறியல் என இரண்டு பஞ்சாயத்துக்களுண்டு. பிணச்சடங்குக்கு இடும்பந்தல் கொட் டிற் பந்தல் எனப்படும். மணத்துக்கு இடும்பந்தல் கொட்டகை அல்லது காவனம் எனப்படும்.

நாயக்: நாய்கா - தலைவன். இவர்கள் விசயநகர அரசர் சில பிராமணக் குடும்பங்களுக்கும் இப் பெயருண்டு. முற்காலத்தில் சென்னை நகரில் ‘போலிஸ்’ மேல் அதிகாரி வேலை பெத்த நாயக்கர் களுக்குக் கொடுக்கப்பட்டது. தென் கன்னடத்தில் தேவடியாள் நாய்கனி எனப்படுவாள்.

நாயர்: நாயர் என்போர் மலையாளத்தில் காணப்படும் ஒரு சாதியினர். முற்கால நாயர் உழவுத்தொழில் செய்பவர்களாகவும், போர் வீரர்களாகவும் இருந்தார்கள். இப்பொழுது வணிகர், கைத்தொழில்கள் புரிவோர், எண்ணெய் வாணிகர், பல்லக்குச் சுமப்போர், அம்பட்டர், வண்ணார் முதலிய பல பிரிவினர் நாயர் வகுப்பிற் காணப்படுகின்றனர். கன்னடம் முதலிய இடங்களிலிருந்து வந்து மலையாளத்திற் குடியேறிய மக்கள் பலர் நாயரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றியுள்ளார்கள். சில காலங்களில் அரசர் தாழ்ந்த வகுப்பினர் சிலரை நாயர்களாக்கியுள்ளார் கள். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் மகமதிய பிரயாணி ஒருவன் எழுதியிருப் பது வருமாறு: அரசன் பட்டத்துக்கு வருமுன் ஒருவகைக் கிரியை செய் யப்படுகின்றது. அரசனுக்கு எதிரில் ஓர் அளவு சோறு படைக்கப்படுகின் றது. நானூறு அல்லது ஐந்நூறு பேர் வந்து அரசனுடைய கையிலிருந்து சிறிது சோறு வாங்கி உண்கிறார்கள். தான் முதலிற் சோற்றை உண்டபின் மற்றவர்களுக்குக் கொடுக்கிறான். அரசன் இறக்கும் போது அல்லது கொல்லப்பட்ட போது தாம் உடன்கட்டை ஏறுவதாக அவர்கள் சத்தியஞ் செய்கிறார்கள். பூர்ச்சாஸ் (Purchas) என்பவன் எழுதியிருப்பது வருமாறு: கொச்சி யரசனிடம் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அமொச்சி எனப் படுவர். சிலர் நாயர் எனப்படுவர். இவர்கள் தமது அரசனுக்காக உயிரை விட ஆயத்தமாகவிருக்கிறார்கள். மலையாள மொழியில் இவர்கள் சாவார் எனப்படுவார்கள். குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் (கி.பி. 1083) அவன் குடநாட்டை வென்றபோது நாயரின் முன்னோராகிய வீரர் இறுதி வரையில் போர் செய்து மடிந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டில் பார்போசா (Barbosa) என்பவர் எழுதியிருப்பது வருமாறு: இவர்களுக்குப் போர் செய்வதையன்றி வேறு வேலையில்லை. இவர்கள் எப்பொழுதும் வாள், வில், அம்பு, கேடயம், ஈட்டி முதலியவை களைக் கொண்டு செல்வர். இவர்களில் சிலர் அரசருடனும் சிலர் அரசனின் உறவினராகிய பிரபுக்களோடு மிருப்பார்கள். இவர்கள் ஏழு வயதிலேயே ஆயுதப் பயிற்சி பெறுவர். 18ஆம் நூற்றாண்டில் ஹமில்டன் எழுதியிருப்பது வருமாறு: சமரின் என்னும் மலையாள அரசன் 12 ஆண்டுகள் மாத்திரம் ஆட்சி புரிவது பழங்கால முறை. 12வது ஆண்டின் இறுதியில் அரசன் பொது வெளியில் கூடாரமடித்துக் விழாக் கொண் டாடுவான். அப்பொழுது அவனைத் காத்து நிற்கும் நாற்பதாயிரம் அல்லது ஐம்ப தாயிரம் வீரரைக் கடந்து வந்து அவனைக் கொல்பவன் பட்டத்துக்கு வருவான். 1645இல் இவ் வகை விழா ஒன்று நடைபெற்றது.

சொனரத் (Sonnerat) என்பவர் எழுதியிருப்பது வருமாறு: நாயர் போர் வீரர் சாதியினர். இவர்களுக்குத் தமது சாதிப்பெண்களை அனுப விக்கும் உரிமையுண்டு. அவர்கள் வீதியிற் செல்லும்போது பறையர் விலகிச் செல்லும்படி சத்தமிட்டுக் கொண்டு செல்கின்றனர். பறையன் ஒருவன் அவர்களைத் தீண்டினால் அவர்கள் அவனைக் கொன்றுவிட லாம். ஆனால் அவர்களைத் தீண்டுவதற்குப் பறையருக்கு ஆண்டிலொரு முறை உரிமையுண்டு. அந் நாளில் அவர்கள் நாயரில் எவனையாவது தொட்டால் அவன் பறையனுக்கு அடிமையாக வேண்டும். ஆகவே அந் நாளில் நாயர்கள் முன்னெச்சரிக்கையாக விருப்பார்கள். நாயர் என்பது நாயன் என்பதிலிருந்து பிறந்த தென்று கருதப்படுகின்றது. அரசனுக்குப் பொருள் கொடுத்து கணக்கு, பிள்ளை முதலிய பட்டங்களும் பெறப்பட் டன. பட்டமளிக்கும் சடங்கு ‘திருமுக மளிக்குக’ எனப்படும். திருவிதாங் கூரில் தம்பி என்னும் ஒரு பட்டமும் உண்டு. இது திருவிதாங்கூர் அரசனின் நாயர்ப் புதல்வனுக்கு வழங்கப்படுவது. தம்பிமார் தலைப் பாகையின்றிப் பல்லக்கில் அரசன் முன் செல்லலாம். இக் குடும்பங்களி லிருந்து அரசனின் மனைவி தெரியப்படு வர். நாயருக்குக் காத்த என்னும் பட்டமும் உண்டு. மத்திய காலத்தில் செம்படகராமன் என்பது பட்டத் துக்கு அடையாளமான பெயராக வழங்கப்பட்டது. கி.பி. 1500இல் பார்போசா (Barbosa) எழுதியிருப்பது வருமாறு: அரசனுக்கு 1000 பரிவாரங்கள் இருக்கின்றனர். அவர்களுக்குச் சம்பளம் உண்டு. அவர்கள் அரண்மனையைப் பெருக்குதல் முதல் எல்லாப் பணிவிடைகளையும் செய்கின்றார்கள். அவர்களின் மனைவி பணப் பிள்ளை அம்மா எனப் படுவாள். கைமால் என்னும் பட்டம் சிலருக்கு வழங்கும். இப் பட்டம் அதிகாரத்தைக் குறிப்பது. உன்னிதன், வலியதன் என்னும் பட்டங்கள் திருவிதாங்கூரிலுள்ள சில குடும்பங்களுக்கு வழங்குகின்றன. மேனன் என்னும் பட்டப்பெயர் மேல் என்னும் அடி யாகப் பிறந்தது. (மேலவன் - மேனவன் - மேனன்) சிலர் பணம் கொடுத்து இப் பட்டத்தைப் பெறுகி றார்கள். மேனன் பட்டம் அளிக்கப்படும் போது பனை யோலைச் சட்டமும் எழுத்தாணியும் அளித்தல் வழக்கம். இன்றும் பிரிட்டிஷ் மலையாளத்தில் ஒவ்வொரு அம்சத்திலும் அல்லது கிராமத்திலும் கணக் கெழுதும் மேனன் உண்டு. மேனோக்கி என்னும் பட்டம் கண்காணிப் பவன் என்னும் பொருள் தருவது. இவர்கள் பெரும்பாலும் கோயிற் கணக்குகளை மேற்பார்த்தார்கள். நாயர்ப் பெண் பூப்படைந்தால் மூன்று நாள் தீட்டுக் காப்பாள்.

நாயர்ப் பெண்களுக்கு பூப்படையுமுன் தாலிகட்டுக் கலியாணம் நடைபெறும். தாலிக்கட்டுக் கலியாணமென்பது தேவதாசிகளுக்குத் தாலிகட்டுவது போன்றது. அரச குடும்பப் பெண்களுக்கு நெடுங்காடி என்பவன் நல்ல வேளையில் தாலி கட்டுவான். அவனுக்கு அதற்காகக் கிடைக்கும் கூலி உண்டு. மற்ற வகுப்பினருக்கு இருவரின் சாதகப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. பொருத்தமுள்ள பையன் மணவாளன் எனப்படுவான். மணவாளன் தனது பரிவாரங்களுடன் தனது வீட்டி னின்றும் புறப்படுவான். பெண் வீட்டினின்றும் துவக்கப் புறப்பாடு நடக்கும். இரு பகுதியினரும் வழியில் சந்தித்து பெண் வீட்டுக்குச் செல்வர். பெண்ணின் சகோதரர் மணவாளனின் கால்களைக் கழுவு வான். பின்னர் அவன் பெண்ணை அழைத்துவந்து மணவாளனின் இடப்புறத்தில் இருத்துவான். மணவாளன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவான். மூன்று நாட்களுக்கு ஒருவகைத் தீட்டுக் காக்கப்படும். நாலாவது நாள் இருவரும் ஆற்றில் முழுகுவார்கள். வீட்டுக்குத் திரும்பி வரும் போது கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். மணவாளன் கதவைத் தட்டி அதனைத் திறக்கும்படி செய்வான். பின் பெண்ணின் தாயும் மற்றைய பெண்களும் இருவருக்குமிடையிலிருந்து உண்பார்கள். பின் இருவரும் பந்தலுக்குச் செல்வார்கள். பின் ஆடையை இரண்டாகக் கிழித்து ஆளுக்கு ஒரு துண்டு கொடுக்கப்படும். ஆடையைக் கிழிப்பது கலியாணம் தள்ளுவதைக் குறிக்கும். ஒரு மணவாளன் எத்தனை பெண் களுக்கும் தாலி கட்டலாம். பெரும்பாலும் மணவாளன் பிராமணனாக இருப்பான். இவன் தான் செய்யும் கடமைகளுக்குக் கூலி பெற்றுச் செல்வான். பெண் விரும்பினால் நாலாவது நாள் தாலியைக் கழற்றி விடலாம். சில இடங்களில் தாலி கட்டியவனே சம்பந்தத்துக்கு உரிமை யுடையவன் என்று கருதப்படுகின்றது. தாலி கட்டும்போது அம்மாச் சாம் பாட்டு என்னும் ஒருவகைப் பாட்டு பாடப்படும். தாலி மின்னு எனப்படும். தென் மேற்கு மூலையில் கன்னிக்கால் நடப்படும். கலியாணப் பந்தல் நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதற்குக் கதிர் மண்டபமென்பது பெயர். அது முல்லைப்பந்தல் எனப்படுவதுண்டு. மணநாளுக்கு முதல் நாள் நடத்தப்படும் விருந்து அயணி ஊன் எனப்படும். பிராமணத்தி பெண்ணின் இடது கையில் காப்புக் கட்டி சுபத்திரை வேலி என்னும் பாட்டுப் பாடுவாள். கலியாணக் காலத்தில் கதைகளி, ஓட்டம் துள்ளல் முதலியன நடைபெறும். பிராயமான பெண்ணைக் கன்னி அழிப்பது தீட்டான செயல் எனக் கருதப்பட்டது. ஆகவே பூப்படைந்த பெண்களைக் கன்னி யழிக்கும்படி பெண்ணின் தாய்மார் இளைஞரை இரந்து வேண்டுவர்.

கிடக்கிறதென்பது சம்பந்தத்துக்கு மற்றொரு பெயர். பெண்கள் பூப்படைவது திரண்டுகுளி எனப்படும். நாயர்ப் பெண்கள் கருவடைந்து ஏழாவது மாதத்தில் புளிக்குடி என்னும் சடங்கு புரிவர். வீட்டின் வடக்குச் சிறகு வடக்கிணி என்றும் தென்குச் சிறகு தெற்கிணி எனவும் படும். நடுவே உள்ள முற்றம் நடுமுற்றம் எனப்படும். நாட்டுக்கத்தி பீசான் கத்தி எனவும் தூக்கும் விளக்கு தூக்குவிளக்கெனவும் படும். ஆண் குழந்தை பிறந்தால் நிலத்தில் தென்னோலையால் அடிப்பார்கள். இருபத் தேழாவது நாள் குழந்தைக்குப் பால் பருக்கிப் பெயரிடப்படும். சோறூட் டும் சடங்கு சோறூண் எனப்படும். நாழியில் அரிசி நிரப்பி வைத்தல் நிறைச்சுவைப்பு எனப்படும். புரோகிதன் சாந்திக்காரன் எனவும் உபாத்தி யாயன் எனவும் எழுத்தச்சன் எனவும் படுவான். பால் குடிக்குப் பின் தட்டானை அழைத்து வந்து பொன் கம்பியினால் காது குத்தப்படும். அப்பொழுது நில விளக்குக் கொளுத்தி வைக்கப்படும். மலையாள வீடு நாற்புறம் எனப்படும். மத்திய காலத்தில் வாசலில் பதிபுரம் என்னும் காவற் கொட்டில் இருந்தது. இப்பொழுது அவ் விடத்தில் வேயப்பட்ட கொட்டிலுண்டு. நாயர்ப் பெண்கள் மார்பை மறைப்பதில்லை. மார்பை மறைப்பது தாழ்ந்த சாதிக்கு அறிகுறி, 1740இல் மலையாளத்துக்கு வந்த எட்வர்ட் ஈவ்ஸ் என்பவர், “சாதாரண வயல் வேலை செய்பவர்களின் பெண்கள் முதல் அரச குடும்பப் பெண்கள் வரையும் அரைக்குமேல் உடையில்லாதவர்களாக விருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். நாயர்ப் பெண்கள் நாக படம் என்னும் ஒரு வகை மாலையையணிவர். மூக்கில் மூக்குத்தி இடுவர். அதில் தூக்கப்படுவது நத்து எனப்படும். அரை யில் பொன் வெள்ளி ஆபரணங்களணிவர். ஒட்டியாணம் கச்சாபுரம் எனப்படும். மணமாகாது இறந்த பெண்களின் மரணம் கழிச்சாவு, கன்னிச் சாவு எனப்படும். பெண்கள் கண்ணுக்கு மை தீட்டுவர். ஊஞ்சல் உழிஞ்சால் எனப்படும்.

நாயாடி: மலையாளத்தில் மிகத் தாழ்ந்த சாதியினர் நாயாடிக ளாவர். நீர்நாயின் இறைச்சியை உண்பதால் அவர்களுக்கு இப் பெயர் உண்டாயிற்று. முந்நூறு யாருக்குள் நாயாடி வந்தால் பிராமணன் குளித்துப் பூணூல் மாற்றிக் கொள்ளவேண்டும். பெண்கள் நாயடிச்சிகள் எனப்படுவார்கள். சிறுவர் மொலாயர் என்றும் சிறுமியர் மனிச்சியர் எனவும் படுவர். இவர்களுக்கு மக்கள் தாயம் உண்டு. இவர்கள் தேன், மட்டிப்பால் முதலியன எடுப்பர். ஒவ்வொரு நாயாடியும் ஓணப் பெரு நாளுக்கு நம்பூதிரி இல்லத்துக்கு எட்டு யாருள்ள (கெசம்) நாலுகயிறும் நாயர் வீட்டுக்கு இரண்டு கயிறும் கொடுக்க வேண்டும். அவற்றுக்குக் கூலியாக நாயாடி நெல் பெறுவான். கயிறுகள் ஆடு மாடுகள் கட்டவும் தண்ணீர் இறைக்கவும் உதவும். ஆண் குழந்தைக்குத் தந்தையின் தகப்பன் பெயர் இடப்படும். மணப்பெண் தனியாக இடப்பட்ட ஒரு குடிசையுள் இருப்பாள். பருவமடைந்த இளைஞர் குடிசையைச் சுற்றி நின்று கூத் தாடுவர். அவர்கள் எல்லோரும் கையில் வைத்திருக்கும் தடியைக் கூரை வழியாகக் குடிசைக்குள் போடுவர். பெண் எந்தத் தடியை எடுக்கிறாளோ அத் தடிக்குரியவனே அவள் கணவனானவன். இவர்களின் கடவுளர் மல்லர், மலைவன், பறக்குட்டி முதலியோராவர். இவர்களின் சோதிடர் பறைய வகுப்பினராவர். ஒருவனுக்குக் கண் திட்டி அல்லது பேய்க் குறைபாடு இருந்தால் உப்பு, மிளகாய், புளி, எண்ணெய், கடுகு, தேங்காய், காசு என்பவைகளை ஒரு ஏனத்திலிட்டு அவனுடைய தலையை மூன்று முறை சுற்றிய பின் அவை நாயாடிக்குக் கொடுக்கப்படும். சோனகராக மாறிய நாயாடிகள் தொப்பியிட்ட நாயாடி எனப்படுவர்.

நாலில்லக்காரர்: முக்குவர்.

நால்கி(Nalke): இவர்கள் கன்னடத்தில் வாழும் கூடைமுடையும் குடை செய்யும் மக்கள். இவர்கள் ஹோலியர் அல்லது பறையர் எனப்படுவர். பேய்க் கூத்தாடுவர். பெண்கள் பூப்படைந்தபின் மண முடிப்பர். இவர்களின் நாட்டாண்மைக்காரன் குறிக்காரன் எனப்படுவன். அவன் புரோகிதனாக விருந்து மணங்களை நடத்துவான். இறந்தவர் களைச் சுட்ட அல்லது புதைத்த இடத்தில் மண்மேடு செய்யப்படு கின்றது.

பஞ்சமர்: ஐந்தாவது குலத்தவரும் பறையரும் அவர்கள் போன்ற சாதியினரும் பஞ்சமரெனப்படுவர்.

படகர் அல்லது வடுகர்: இவர்கள் மைசூரிலிருந்து சென்று நீலகிரியிற் குடியேறியவர்கள். இவர்கள் கன்னடச் சிதைவான மொழி பேசுவர்.

பட்டணவன்: கிழக்குக் கடற்கரையில் கிருட்டிணா முதல் தஞ்சாவூர் வரையிலுள்ள மீன் பிடிகாரர் இப்பெயர் பெறுவர். கரையார் என்னும் பெயரும் இவர்களுக்கு வழங்கும். சில செம்படவர் ஆரியர், ஐயாயிரத் தலைவர், ஆரிய நாட்டுச் செட்டி, அச்சு வெள்ளாளன், கரைத்துறை வெள்ளாளன், வருணகுல வெள்ளாளன், குருகுலவமிசம் முதலியவற்றைத் தமது குலப் பெயர்களாக வழங்குவர். இவர்கள் பெரும்பாலும் தம்மைப் பிள்ளை என வழங்குகின்றனர். பட்டணவர் செம்படவருக்குக் கீழ்ப் பட்டவரெனக் கருதப்படுவர். இவர்களின் சிறந்த தெய்வங்கள் குட்டி ஆண்டவன், குட்டி ஆண்டவனின் பரிவாரம், செம்பு வீரப்பன், மீனோடும் பிள்ளை என்பன. தஞ்சாவூரில் இவர்கள் கடவுள் பாவாடைராயன். இவர்கள் இக் கடவுளையும் வலையையும் வணங்குவர். மணற்கும்பங்கள் அவர்கள் கடவுளரைக் குறிப்பனவாகும். தலைமைக் காரன் எசமானன் எனப்படுவான். இவனுக்குத் தண்டக்காரன் என்னும் துணைவன் உண்டு. இவர்களின் இழவு சொல்லிச் செல்பவன் சலவாதி எனப்படுவன்.

பட்டுநூற்காரன்: இவர்கள் பிறநாடுகளிலிருந்து வந்து தமிழ் நாட்டில் தங்கிய நெசவாளர். இவர்களின் ஆதி இடம் குசராத்து. குமராகுப்தாவின் பட்டையத்தில் (கி.பி. 473) இவர்கள் ‘பட்டவாயாக’ எனக் கூறப்பட்டுள்ளார்கள். இது பட்டுநூற்காரர் என்பதன் சமக்கிருத மொழி பெயர்ப்பு. இராணி மங்கம்மாளின் பட்டையத்திலும் இவர்கள் பட்டு நூற்காரர் எனக் குறிக்கப்பட்டுள்ளார்கள். பிற்காலத்தில் இவர்கள் தம்மைச் சௌராட்டிரர் எனக் கூறிக்கொண்டனர். இவர்கள் தம்மைப் பிராமணர் எனவும் கூறிக்கொள்வர். குமாரகுப்தனின் சாசனத்தில் இவர்கள் போர் வீரரும் நெசவாளருமெனக் கூறப்பட்டுள்ளார்கள். பட்டுநூற்காரர் தெலுங்கு மொழியும் பேசுவர். இதனால் இவர்கள் நீண்ட காலம் தெலுங்கு நாட்டிலும் வாழ்ந்தார்கள் எனத் தெரிகிறது. இவர்கள் பிராமணரைப் போல நூலணிவர். பெண்கள் பூப்படையுமுன் மண முடிப்பர். இவர்களின் மணக் கிரியை பெரிதும் பிராமணருடையது போன்றது. பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் தாலி பொட்டு எனப் படும். நாலாவது நாள் நாகவல்லி என்னும் சடங்கு நடைபெறும். பிறந்து பதினோராவது நாள் பிள்ளைக்குப் பெயரிடப்படும். எட்டாவது பிள்ளை ஆணாக விருந்தால் கிருஷ்ணா என்னும் பெயரிடப்படும். இது கிருஷ்ணன் வசுதேவருக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்தாரென்னும் ஐதீகத்தைப் பற்றியது. இவர்களுக்கு மரணத்தீட்டு பத்துநாள். விதவைகள் தலை மொட்டை யடிப்பதில்லை; பொட்டைக் கழற்றிவிடுவார்கள். பட்டுநூற்காரரிடையே மற்றவர்கள் விளங்கமாட்டாத வியாபார மொழி உண்டு.

பணிக்கர்: பணிக்கன் என்னும் பெயர் அம்பட்டன், கம்மாளன், மாறன், நாயர், பாணன், பறையன் முதலியவர்களுக்கிடையில் வழங்கும். மதுரை, திருநெல்வேலிப் பகுதிகளில் பணிக்கர் சிலர் காணப்படுகின் றனர். அவர்களிற் சிலர் அம்பட்டரும் சாணாருமாவர். சிலர் நெசவுத் தொழில் புரிவர். இப்பொழுது பணிக்கர் தம்மை இல்லம் வேளாளர் என்பர். அவர்கள் தமது பெயரைப் பிள்ளை எனத் திருத்தி வழங்கு கின்றனர்.

பணிசவன்: பணிசவன் என்பது பணி செய்கின்றவன் என்பதன் திரிபு. இவர்கள் இழவு அறிவிப்பவர்களாவர். சாரை அல்லது எக்காளம் ஊதுவர். இவர்களில் வலங்கை, இடங்கை என இருவகைப் பிரிவுக ளுண்டு. பணிசவன் சங்கு ஊதிக்கொண்டு பிணத்துக்குப் பின்னால் செல்வான். இறந்தவர் கண்ணியமுடையவரானால் கொம்பு ஊதுவான். மறவர்களுக்குள் அம்பட்டன் இழவு அறிவிக்கச் செல்வான். தஞ்சாவூரி லும் தென் ஆர்க்காட்டிலும் பணிசவர்களின் வேலையைச் செய்வோர் நோக்கான் எனப்படுவர். திருநெல்வேலிப் பாசவரின் கோயில்களில் நாகசுரம் வாசித்தல், தேவடியாட்களுக்கு நாட்டியம் பழக்குதல் முதலிய வேலைகளையும் இவர்கள் செய்வர். சிலர் அச்சு வேலையும் செய்வர். அச்சு வேலையென்பது நெசவாளர் பாவோடும் அச்சுச் செய்வது.

பணியன்: இவர்கள் மலையாளத்திலும் நீலகிரிப் பகுதியிலும் காணப்படுவர். இவர்கள் காணியாளரின் அடிமைகளாவர். இவர்கள் உயர்ந்த இடங்களில் கூளி என்னும் தெய்வத்தை வைத்து வழிபடுவர். அவ் வகைத் திடர் குளித்தரை எனப்படும். இவர்களின் சிறந்த பொழுது போக்கு ஊஞ்சலாடுதல். பணியரிற் சிலர் தமது மணிக்கட்டுகளிலும் கழுத்திலும் மந்திர மோதிய நூலைக் கட்டியிருப்பர்.

பண்டாரம்: இவர்கள் பிராமணரல்லாத குருமார். திருத்தணி கையில் பண்டாரங்கள் பெரிதுங் காணப்படுவர். சைவ மடங்களின் தலைவரும் பண்டாரங்கள் எனப்படுவர். பண்டாரங்கள் இலிங்கந்தரிப் பர். இவர்களிற் சிலர் கோயில்களில் மாலை கட்டுதல், பண் ஓதுதல், முதலிய பணிகள் செய்வர். அவர்கள் ஓதுவார், மெய்காவல் என்னும் பெயர்களும் பெறுவர். இவர்களில் இல்லறத்தார், துறவிகள் என இரு பிரிவினருண்டு. மடங்களுக்குத் தலைவராயிருக்கும் சன்னதிகள் துறவி வகுப்பினராவர். மலைகளிலும் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழும் ஒருவகைக் காட்டுச் சாதியினரும் பண்டாரங்கள் எனப்படுவர். அவர்கள் மலையாளத்தை அடுத்த மலைகளிற் காணப்படுகின்றனர்.

பண்டிதன்: மேற்கோட்டு நியாயாதிபதிக்குத் துணையாகப் பண்டித னிருப்பான். 1862இல் இப் பதவி ஒழிக்கப்பட்டது. பண்டிதன் அம்பட்டனின் பட்டப் பெயருமாகும். தமிழ்நாட்டில் மத்துவப் பிராமணரும் பண்டித ரெனப்படுவர். இவர்களிற் பலர் கோடுகளிற் பண்டிதராக விருந்தனர். ஓரிய சாதியினரின் சோதிடரும் பண்டித ரெனப்படுவர்.

பதினெட்டான்: இது மலையாளத்தில் தச்சருக்கு வழங்கும் பெயர்.

பத்திராளு: இவர்கள் தெலுங்கு பேசும் வாத்தியகாரர். இவர்கள் ஆடுவோர் பாடுவோராவர்.

பரவன்: பரவர் தமது ஆதியிடம் அயோத்தி எனக் கருதுகிறார்கள். இவர்கள் தென்னிந்தியக் கடலோரங்களிலும் இலங்கையிலும் காணப் படுகின்றனர். இவர்களின் முக்கிய இடம் தூத்துக்குடி. தென்கிழக்குக் கரைகளில் வாழும் பரவர் பெரும்பாலும் கிறித்துவ கத்தோலிக்க மதத் தினராவர். இவர்களுக்குப் போர்ச்சுக்கேயரின் பெயர்கள் வழங்கும். இவர்கள் பிரான்சிஸ் சேவியரால் கிறித்துவ மதத்துக்குத் திருப்பப்பட்ட வர்களாவர். இவர்களின் உரிமைவழி மக்கள் தாயம். மத்திய திருவிதாங் கூரில் இவர்கள் மரமேறுவர்; மீன் பிடிப்பர்; கிறித்துவருக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும் துணி வெளுப்பர். பெண்கள் சிப்பியைச் சுட்டு சுண்ணாம்பு செய்வர்.

பரிவாரம்: மறவர் அகம்படியாருள் ஒரு பிரிவினர். இவர்களில் சின்ன ஊழியம், பெரிய ஊழியம் என இரு பிரிவுகள் உண்டு. இவர்களுள் கணவனின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலிகட்டுவாள். சொந்தச் சாதியாருடன் அல்லது சமீன்தாருடன் பெண்கள் சேர்க்கை வைத் திருப்பது குற்றமாகக் கருதப்படுவதில்லை. சமீன்தார்களுக்கு அவ்வாறு பிறக்கும் பிள்ளைகளைக் கணவர் ஏற்றுக்கொள்வர். அவ் வகைப் பிள்ளைகள் பெரிய கம்களத்தார் எனப்படுவர்.

பரதேசி: இவர்கள் ஒருவகைப் பிச்சைக்காரர். இப் பெயர் கொச்சி வெள்ளையூதருக்கும் பெயராக வழங்கும்.

பலிசக்கொல்லன்: மலையாளத்தில கேடகம் செய்யும் கொல்லர் இப் பெயர் பெறுவர்.

பலியன் அல்லது பொலியன்: இவர்கள் பழநிமலையில் வாழும் குடிகள். இவர்கள் ஒருவகைத் தமிழ் பேசுவர். பெரிதும் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவர். பலர் மூலிகைகளைக் கொண்டு நோய்களை மாற்றுவர். பாம்புவிடத்தைப் போக்குதற்கு நறுவல்லி வேரை வைத்திருப்பர். விலங்குகளைப் பொறிக் கிடங்குகளிலும் அடார்களிலும் அகப்படுத்துவர். கங்கக் கொடி இலையைக் கசக்கித் தண்ணீரில் எறிவார்கள். உடனே மீன்கள் தண்ணீரில் மிதக்கும். இவர்களின் கடவுள் மாயாண்டி.

பல்லவராயன்: இது பல்லவர் தலைவனுக்கு வழங்கும் பெயர். ஓச்சரில் ஒரு பிரிவினருக்கும் பல்லவராயன் என்னும் பெயர் வழங்கும்.

பள்ளன்: இவர்கள் உழவுத் தொழில் புரியும் வேலையாட்கள். இவர்கள் முற்காலத்தில் வெள்ளாளருக்கு அடிமைகளாக இருந்தார்கள். மதுரைப் பள்ளரின் அதிகாரி குடும்பன் எனப்படுவான். கோயமுத்தூரில் பள்ளரின் அதிகாரி பட்டக்காரன் எனப்படுவான். அவனுக்குத் துணை யாக வுள்ளவன் ஓடும் பிள்ளை எனப்படுவான். திருச்சிராப்பள்ளியில் பள்ளரின் அதிகாரி நாட்டுமூப்பன் எனப்படுவன். இவர்களுக்கு வண்ணார் அம்பட்டர்களுண்டு.

பள்ளி: தெலுங்கு நாட்டில் மீன் பிடிப்போர், உழுதொழில் செய்வோர் எனப் பள்ளிகளில் இரு பிரிவுகள் உண்டு. மீன் பிடிப்போர் மீன் பள்ளிகள் எனப்படுவர். பள்ளிகள் சில இடங்களில் தம்மை இரெட் டிகள் எனக் கூறுவர். மீன் பிடிப்போர் அக்கா, தேவராலு என்னும் தெய்வங்களை வழிபடுவர்.

பள்ளி அல்லது வன்னியன்: பள்ளிகள் தாம் வன்னிய குல அரச குலத்தினர் எனக் கூறுவர். திருவிதாங்கூர் அரசருள் ஒருவராகிய குலசேகர ஆழ்வார் தங்கள் சாதியரசன் எனக் கூறுவர். சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயிற் பட்டையத்தின்படி அது பள்ளரால் கட்டப்பட்டது. அங்கு பள்ளிகள் குலசேகர ஆழ்வாருக்குக் குருபூசை நடத்துவார்கள். மைலாப்பூர்ச் சிவன் கோயிலில் பள்ளிகள் கற்பூரம் கொளுத்திக் காட்டும் உரிமை பெற்றிருந்தார்கள். அவர்கள் கோயில் தமக்கு உரியதாக விருந்ததென்றும் பிற்காலத்தில் தாம் சிறிது சிறிதாக உரிமையை இழந்து விட்டார்கள் என்றும் கூறுகின்றனர். கற்பூரம் கொளுத்தும் உரிமையைப்பற்றி சமீபத்தில் விவாதம் நடந்து விசாரணை மேற்கோட்டுக்கு வந்தது. பள்ளிகள் சார்பாகத் தீர்ப்பளிக்கப் பட்டது. காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயிற் கோபுரமொன்று பள்ளி கோபுரமெனப்படும். அங்குள்ள பள்ளிகள் அது தமக்குரிய தென்று கூறி அதனை ஆண்டுதோறும் பழுது பார்ப்பர். சிதம்பர ஆலயத்தைக் கட்டியவன் இரணியவன்மன் (கி. பி. 6ஆம் நூற்றாண்டு). அவனுடைய வழித்தோன்றல்கள்தாம் என்று சிதம்பரத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்திலுள்ள ஒரு பள்ளிக் குடும்பத்தினர் உரிமை கொண்டாடுவர். பள்ளிப் பொலிகரிற் சிலர் “அக்கினி குதிரையேறிய ராயராவுத்த மிண்ட நயினார்” (இராசராவுத்தரை வென்று அக்கினிக் குதிரை ஏறிய) என்று பெயர் பெறுவர். தென்னார்க்காட்டில் குமாலம் என்னும் இடத்தில் பள்ளிக்குச் சிறீனிவாச ஆலயமுண்டு. அங்கு பள்ளிகள் கோயிலைச் சுற்றி வாழ்கின்றனர். இவர்கள் கோயிற் பட்டரைப் போல உடுப்பர். பள்ளிப் பெண்களைப் பட்டர்மார் மணப்பர். ஆனால் தமது பெண்களைப் பள்ளிக்குக் கொடுக்கமாட்டார்கள். சேலம் பகுதியில் ஓலைப் பள்ளி, நாகவடம்பள்ளி என இரு பிரிவினருண்டு. இவை அவர்கள் அணியும் ஓலை, நாகவடம் முதலியன பற்றி வந்த பெயர்கள். பள்ளிகளும் பேரிச் செட்டிகளும் மன்னார் சாமியை வணங்குவர். கிராமத் தெய்வங்கள் ஏழுகும்பம் அல்லது கரகங்களாற் குறிக்கப்படும். இவர்களுள் பிச்சைக் காரர் நோக்கான் எனப்படுவர். இவர்களின் தலைமைக்காரன் பெரிய தனக்காரன் அல்லது நாட்டாண்மைக்கார னெனப்படுவான். விதவை களின் மறுமணம் நடுவீட்டுத்தாலி எனப்படும். தலைப்பூப்பு அடைந்த பெண் முழுகிய பின் அவளைப் பலகைமேல் இருத்தி அவள் முன்னால் பிட்டுவைத்து ஆராத்தி காட்டப்படும்.

பறையன்: 18ஆம் நூற்றாண்டில் சொனரத் (Sonnerat) என்பவர் பறையரைப் பற்றி எழுதியிருப்பது வருமாறு: மற்றவர்களோடு பேசும் போது பறையன் தனது வாயைக் கையினால் பொத்திக்கொள்ள வேண்டும். அவன் வீதியிற் போய்க் கொண்டிருந்தால் அவன் ஒருபக்கம் ஒதுங்கி நின்று மற்றவர்களைச் செல்ல வழிவிட வேண்டும். அவனை எவராவது தீண்டினால் அவர் உடனே குளித்துத் தோய்ந்து தீட்டைப் போக்கிக்கொள்ள வேண்டும். பிராமணர் இவர்களைப் பார்த்தல் கூடாது. இவர்களுள் பல பிரிவுகளுண்டு. கோலியர் நெசவு செய்வர். வள்ளுவர் மந்திர வித்தைக்காரராகவும், குருமாராகவும் வேலை செய்வர், நூலுமணிவர். பறையர் அடிக்கும் பறை உறுமி எனப்படும். இவர்களின் வண்ணான் போதராயன் எனப்படுவான். பேலூரில் (Belur) உள்ள கோயிலுள் மூன்று நாட்களுக்கு உள்ளே செல்ல இவர்களுக்கு உரிமை யுண்டு. மேல் கோட்டையில் மூன்று நாட்களுக்குப் பிராமணருடன் ஆதிமூலத்துக்கு (கருப்பக் கிரகத்துக்குச்) செல்ல இராமானுசரால் இவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதென்று சொல்லப்படுகின்றது 1799 முதல் இவர்கள் கொடிமரத்துக்கு அப்பால் செல்லாதபடி தடுக்கப் பட்டார்கள். செங்கற்பட்டிலுள்ள சிறிபெரும்புத்தூரில் திருவாரூரிற் போன்ற உரிமை பறையருக்கு ண்டு. வெட்டியான், தலையாரி, தண்டாசி, தோட்டி முதலிய கிராம உத்தியோகங்கள் பறைச் சாதியினருக்கு உரிய தாகும். காஞ்சீபுரம், கும்பகோணம், சிறீவில்லிபுத்தூர் முதலிய இடங் களில் பறையர் மற்றவர்களோடு வடம் பிடித்துத் தேர் இழுப்பர். கிராம தேவதைகளுக்கு மடை போடும்போது பூசாரி பறையனின் மணிக்கட் டில் மஞ்சள் நூல்கட்டி அவனை எல்லோருக்கும் முன்னால் ஊர்வலத் தில் வரவிடுவது வழக்கம். மழையில்லாத காலத்தில் பறையர் கொடும் பாவி கட்டியிழுப்பர். பிராமணர் வருமுன் வள்ளுவர் அரசர்களுக்குக் குருக்களாக விருந்தார் என்று ஸ்டூவாட் (Stuwart) கூறியுள்ளார். அவர் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட பட்டயமொன்றை இதற்கு ஆதாரமாகக் காட்டுவர். அதில் “சிறீ வள்ளுவன் புவனவனாகிய உவச்சன் தினமும் அறுவரைக் கொண்டு வேலை செய்வித்து ஆலயக் கடமை களைப் பார்க்க வேண்டும” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. 11ஆம் நூற்றாண்டிற் பொறிக்கப்பட்ட இராசராசனின் கல்வெட்டில் பறையர் உழவு, நெசவு என இரு பிரிவினராகவிருந்தனர் எனக் குறிக்கப்பட்டுள் ளது. திருவாரூரில் நடக்கும் பெரிய விழாவில் பறையன் யானை மீது ஏறி யிருந்து சுவாமிக்குச் சாமரை வீசுவான். சென்னையில் ஜாட்ஸ் டவுனில் நடக்கும் ஏகாட்ட விழாவில் விக்கிரக த்தின் கழுத்தில் பறையன் தாலிகட்டு வது வழக்கம். நிலங்களின் எல்லையைப் பறையன் நன்கு அறிவான். எல்லையைப் பற்றிப் பிணக்கு உண்டானால் தலையில் நீர்க் குடம் வைத்து அவனை எல்லையைச் சுற்றிவரும்படி செய்தல் இன்றும் சில இடங்களில் வழக்காகவுள்ளது. இதனால் மற்றச் சாதியினரிலும் பார்க்கப் பறையன் நெடுங்காலம் நாட்டில் வாழ்ந்து வருகின்றானென்று அறியப்படுகின்றது. பறையரிருக்குமிடம் சேரி எனப்படும். பிராமணன் தொடுவதால் தமக்குத் தீட்டு உண்டாகிறதெனப் பறையர் கருதுவர். பிராமணன் சேரிக்கும் நுழைந்தால் அவனைத் தலையில் சாணித் தண்ணீர் ஊற்றித் துரத்துவர். மைசூர்ப் பிராமணர் ஹோலியரின் சேரிக் கூட்டாகச் சென்றால் தமக்கு அதிட்டம் உண்டாகும் எனக் கருதுவர். பிராமணன் அவ்வாறு சென்றால் ஹோலியர் திரண்டு அவனைச் செருப்பாலடித்து துரத்துவர். முற்காலத்தில் சாகும்படி அடிப்பர். பத்துத் தலைமுறைக்கு முன் பறையர் நெசவுக்காரராகவும், மரியாதைக்குரியவர் களாகவுமிருந்தார்கள். இவர்களிற் கண்ணியமுடையவன் பணக்காரன் எனப்படுவன். தென்னார்க்காட்டுப் பறையருள் பெரிய நாட்டான், சின்ன நாட்டான் என்னும் தலைமைக்காரர் உண்டு. விதவை தாலி தரிப்ப தில்லை. பறையர் பெரும்பாலும் ஏழு கன்னியம்மாவை வணங்குவர். தமிழ் தெலுங்குப் பறையர் எல்லம்மா என்னும் தெய்வத்தை வணங்குவர். இவர்கள் தெய்வத்தைக் குறிக்கும் சிலைமீது எண்ணெய் ஊற்றி மஞ்சள் பூசி குங்குமம் தூவி மாலைகளால் அலங்கரித்து வணங்குவர். பெரிய பாளையத்தில் (சென்னையிலிருந்து பதினாறு மைல்) பவானி அம்மன் கோயிலுண்டு. இங்கு பறையர், பள்ளிகள், சக்கிலியர் முதலானோர் பெரும்பாலும் வழிபடுவோராவர். அங்கு அவர்கள் ஆடுகளைப் பலி யிடுவதோடு நிர்வாணமாக வேப்பிலை உடை உடுத்துக் கொண்டு கோயிலைச் சுற்றி வருவர். வள்ளுவர் மற்றப் பறைய ரோடு திருமணம் செய்து கொள்வதில்லை. திருவிதாங்கூர், கொச்சி முதலிய இடங்களில் திருமணத்துக்குப் பந்தற்கால் நிறுத்துதல் பறைய ரால் செய்யப்படும். பறையன் பிராமணனுக்கு 128 அடி தூரத்தில் நிற்றல் வேண்டும். புலையன் இதற்கு இரட்டித் தூரத்தில் நிற்றல் வேண்டும். பறையன் மனைவியின் பிள்ளைப் பேற்றுக்குப் பின் ஏழு நாட்களுக்குச் சோறு உண்ணாது பழங்களையும், கிழங்குகளையும் உண்பான். நாஞ்சில் நாட்டுப் பறையருக்குச் சொத்து உண்டு. இவர்கள் அரசருக்குப் பணங் கொடுத்துப் பட்டங்கள் பெற்றுள்ளார்கள். பாண்டிப்பறையன் சாம்பு வன் எனப்படுவன்.

பாணன்: மதுரையிலும் திருநெல்வேலியிலும் இவர்கள் தையல் வேலை செய்வர். அம்பட்டரும் வண்ணாரும் இவர் வீடுகளில் உண் ணார்கள். இவர்கள் கோயில்களுள் நுழையலாம். மலையாளப் பாணர் பேய்க் கூத்தாடுவோராவர்.

பாணோ: இவர்கள் கஞ்சம் மாகாணத்தில் காணப்படும் நெச வாளர். சூடிய நாகபுரியிலும். ஒரிசாவிலும் நெசவு கூடைமுடைதல் முதலிய வேலைகள் செய்யும் பாண என்னும் ஒரு சாதியினரும் காணப் படுகின்றனர். இவர்கள் மண வீடுகளிலும், பிண வீடுகளிலும் , கோயில் களிலும் வாத்தியம் சேவிப்பர். பாணோ ஒருவன் கொண்டர் வகுப்புப் பெண்ணோடு வியபிசாரம் செய்தால் அவன் பெண்ணின் கணவனுக்கு எருமை, ஆடு, பன்றி, ஒரு கூடை நெல், ஒரு ரூபாய், ஒரு சுமை பானை முதலியவற்றைக் கொடுக்கவேண்டும். கொண்டர்ப் பெண்களைப் போலவே பாணோப் பெண்களும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனியிடத்தில் இராக்காலத்தில் நித்திரை கொள்வர்.

பாண்டியன்: அம்பட்டன், கம்மாளன், ஒச்சன், பள்ளன், வண்ணான், வேளாளன் முதலியவர்களிடையே இது பெயராக வழங்கும். மலையாளத்தில் ஈழவர் பாண்டி எனப்படுவர்.

பாரத்துவாசர்: இது ஒரு பிராமண கோத்திரத்தின் பெயர்.

பிசாராடி: இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர். இவர்கள் கோயில்களில் பூமாலை கட்டிப் பணிவிடை புரிவர். பெண்களுக்குப் பூப்பு அடையுமுன் தாலி கட்டுக் கலியாணம் நடக்கும். மணமகன், மணமகள் என்பவர்களின் கைளை இணைப்பது மணத்தில் முக்கிய சடங்காகும்.

பிடாரன்: இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர். பத்திர காளியை வணங்குவர். பாம்பு பிடிப்போரும் பிடாரர் எனப்படுவர்.

பிரமசாக்தா: இவர்கள் பிராமணருள் மத்தியானப் பறையர் எனப்படுவர். இவர்கள் மத்தியானம் முதல் ஒரு மணி வரை வீட்டுக்கு வெளியே நின்று பின் குளித்துத் தீட்டுப் போக்கிக் கொள்வர்.

பிராமணன்: தென்னிந்தியப் பிராமணரிற் பல பிரிவுகளுண்டு. அவர்களின் மொழிகளும் பழக்கவழக்கங்களும் வேறுபட்டுள்ளன. இவர்கள் தாம் பிரமாவின் முகத்தினின்றும் பிறந்தவர்களென நம்புகின்ற னர். இருக்கு வேதிகள், சாமவேதிகள், யசுர் வேதிகள் என மூன்று பிரிவில் இவர்கள் அடங்குவர். இவை சமயக்கிரியை தொடர்பான பிரிவுகள். தாம் வாழும் இடங்களில் வழங்கும் மொழிகளையே இவர்களும் வழங்கு வர். அத்திரி, பிருகு, வதிஷ்டர், கௌதமர், காசியபர் முதலாயி னோரைத் தமது கோத்திர முதல்வராகக் கொள்வர். சிலர் அகத்தியர், அங்கீரர், அத்திரி, பிருகு, காசியபர், வதிஷ்டர், கௌதமர் எனவும் தமது கோத்திர முதல்வரைக் கொள்வர். பிராமணர் பஞ்சத் திராவிடர், கௌடர் என இரு பெரும் பிரிவினராகப் பிரிக்கப்படுவர். கௌடர் மாமிசமுண்பர். ஒரியா, கொங்கணி மொழிகளைப் பேசுவோரல்லாத தென்னிந்தியப் பிராமணரெல்லோரும் பஞ்சத் திராவிடர்களாவர். இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குசராத்திப் பிராமணர்க ளெனப் பிரிக்கப் பட்டுள்ளார்கள். தெலுங்கு பேசும் சிவாலிப் பிராமணர் கருநாடகப் பிராமணரில் அடங்குவர். பட்டர், நம்பூதிரிகள், திராவிடப் பிராமணரைச் சேர்ந்தோராவர். சமயத் தொடர்பாகப் பிராமணர் வைணவருமல்லர், சைவருமல்லர். ஸ்மார்த்தர் பிரமமே உயிர்கள் என நம்புவோர். பிராமணச் சிறுவர் எட்டு வயதுக்கு முன் பூணூல் தரித்துக் கொள்ள வேண்டும். பூணூல் தரிக்கும்போது சிறிய மான்தோல் துண்டு ஒன்று நூலிற் கட்டப்படும். ஐம்பது ஆண்டுகளின் முன் வியபிசாரிகள் கழுதை யில் வாற் பக்கத்தைப் பார்க்கும்படி இருத்தி கிராம வீதிகளில் கொண்டு செல்லப்பட்டார்கள். பொது மக்கள் எருக்கம்பூ மாலையை அவள் கழுத்தி லிட்டார்கள். வியபிசாரிகளான உப்பிலியப் பெண்களைத் தலையில் ஒரு கூடை மண்ணைச் சுமந்துகொண்டு மரத்தைச் சுற்றிவரச் செய்வது வழக்கு. இவர்களின் பிணக் கிரியை கருட புராணத்தைத் தழுவியது.

பில்லவர்: இவர்கள் துளுப் பேசும், கள்ளிறக்கும் தென் கன்னடர். தமிழர் இலங்கை மீது படைஎடுத்த போது இலங்கை மக்கள் பலர் திருவிதாங்கூரிலும், மேற்குக் கரைப் பகுதிகளிலும் குடியேறினார்கள். அவர்கள் திருவிதாங்கூருக்குச் சென்றபோது தெற்கிலுள்ளது என்னும் பொருள் தரும் தென்னையையும் கொண்டு சென்றார்கள். இவர்கள் தீயர் அல்லது ஈழவர் எனப்பட்டனர். தீவார் என்பது தீயர் எனத் திரிந்து வழங்கிற்று. இவ் வகுப்பினரே பின்பு பில்லவர் எனப்பட்டார்களாக லாம். தெங்கு இலங்கையிலிருந்து வந்ததென்பதற்கு எடுத்துக்காட்டாக பெரிப்புளூஸ், மலையாளத்திலிருந்து மேல் நாடுகளுக்குச் சென்ற பொருள்களுள் தேங்காயைக் குறிப்பிடாதிருப்பதாகும். சீரிய கிறித்த வரின் செப்புப் பட்டையத்தால் தீயர் பயிரிடுவோராயிருந்தனரெனத் தெரிகிறது. பில்லவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களாகலாம். இவர் களுக்கு அம்பட்டன் புரோகிதனாகவிருந்து மணக்கிரியைகள் செய் வான். இவர்களுக்குப் பெண் வழி உரிமையுண்டு.

பிள்ளை: இது வேளாளரின் பட்டப்பெயர். இது இப்பொழுது அகம்படியான், அம்பலக்காரன். கோவலன், இடையன், நாயர், நோக் கான், பணிசவன், பணிக்கன், பறையன், சாயக்காரன், தேவதாசி வகுப்பின் ஆண்களுக்கும் வழங்கும். ஐரோப்பியரின் சமையற்காரரான ‘பட்லர்’ களும் பிள்ளை என்னும் பெயரை வழங்குவர். வேளாளர் எனச் சொல்லிக் கொள்ளும் குறவரும் இதனை வழங்குகின்றனர்.

பூலான்: இவர்கள் திருவிதாங்கூரில் குடியேறிய தமிழ் அம்பட்டர்.

பூழிஆசாரி: பூழி(மண்)யில் வேலை செய்யும் மலையாளக் கம்மாளரில் ஒரு பிரிவினர் இப் பெயர் பெறுவர்.

புள்ளுவன்: மலையாளத்தில் சோதிடர், மந்திர வித்தைக்காரன், பூசாரி, பாம்புக்காக்களில்(பாம்புக் கோயிலிருக்கும் சோலை) பாடுவோர் இப் பெயர் பெறுவர். இவர்கள் சட்டியின் அடியை உடைத்து வெளிப் பக்கத்தில் தோல் போர்த்த ஒரு வகைப் பறையைத் தட்டுவர். இவர்க ளுக்குத் தாலிகட்டு சம்பந்தம் முதலியன உண்டு. நாகத்தான் காக் கடவுளைச் சேவிக்கும்போது இவர்கள் பாம்பன் துள்ளு என்னும் ஆடல் புரிவார்கள்.

பைராகி: இவர்கள் வட இந்தியாவினின்றும் வந்த பிச்சை எடுக்கும் மக்கள். பைராகிகள் மதத்தில் வைணவர்; தென்கலை நாமம் இடுவர்; துளசி மாலை அணிவர்.

பொண்டாரி: இவர்கள் கஞ்சம் பகுதியில் வாழும் ஓரியரின் அம்பட்டர். இவர்கள் தாய் மாமன் பிள்ளையை அல்லது தந்தையின் சகோதரியின் பிள்ளையை மணத்தல் கூடாது. கலியாணத்துக்கு முன் இவர்களுக்கு வில், அம்பு அல்லது சகடை மரத்தோடு போலிமணம் நடத்தப்படும்.

பொண்டான்: இவர்கள் வட மலையாள அரசனின் பல்லக்குக் காவுவோர். இவர்களிற் சிலர் மாத்திரம் கள்ளிக் கோட்டையிற் காணப்படுகின்றனர். இவர்களின் நடை, உடை, பேச்சு முதலியன தமிழரைப் போன்றவை. சாதாரண தமிழனைத் தொடுவதால் அரசனுக் குத் தீட்டு உண்டாகும். அப்பொழுது இவர்கள் அவனை அரண்மனையி லிருந்து ஆலயத்துக்கும் ஆலயத்திலிருந்து அரண்மனைக்கும் சுமந்து செல்வர்.

பொதுவான்: கோயிற் காவல் புரியும் அம்பலவாசிகள் இப் பெயர் பெறுவர். திருவிதாங்கூரில் பொதுவர் என்பது மறவரில் ஒரு பிரிவின ருக்குப் பெயர். பெண்கள் தமது சாதியிலுள்ள ஆடவரோடும் பிராமண ரோடும் சம்பந்தம் வைத்துக்கொள்வர். ஆடவர் தமது சாதியிலும் நாயர்ச் சாதியிலும் சம்பந்தம் வைக்கலாம். பெண்கள் பொது விச்சியர் அல்லது பொதுவத்திகள் எனப்படுவர்.

பொலிகர் : இது பாளயக்காரன் என்பதற்கு இன்னொரு பெயர். பாளயக்காரரின் கீழுள்ளவர்களும் பொலிகர் எனப்படுவர்.

பொறோசா: இவர்கள் கஞ்சம், விசாகப்பட்டினங்களில் வாழும் உழவர்.

மங்கலவர்: அம்பட்டர் மங்கலவர் எனப்படுவர். இவர்கள் துளுவர், தமிழர் என இரு பிரிவினராவர். இவர்களுக்குள் திருமணக் கலப்பு இல்லை. திருமணக் காலத்தில் நாகசுரம் ஊதுதலால் இவர்கள் மங்கலவர் எனப்படுவர். கலியாண குலம் என்பதுவும் இவர்களுக்கு மற்றொரு பெயர்.

மணவாளன்: இவர்கள் நாயரின் ஒரு பிரிவினர்.

மணியகாரன்: இதற்குக் கண்காணிப்பவன் என்பது பொருள். இது செம்படவன், பரிவாரங்கள் என்போருக்கும் பட்டப்பெயர். இடையரில் ஒரு வகுப்பினரையும் இது குறிக்கும். இப் பெயர் (மாட்டுக் குக் கட்டும்) மணி என்பதிலிருந்து உண்டாயிற்று. இச் சொல் மணிகர் எனத் திரிந்து தமிழ்நாட்டில் கிராமத் தலைமைக்காரனைக் குறிக்கும்.

மண்டாதான்செட்டி: இவர்கள் சிதைந்த கன்னட மொழி பேசுவர். மக்கள் தாயம் கொள்வர். இவர்கள் வேநாட்டில் வாழ்ந்தார்கள். மந்தாதனன் என்பது மகாவலி நாடு என்பதன் திரிபு. நெல்லக் கோட்டைக் கும் தீப்பக்காட்டுக்குமிடையிலுள்ள பகுதிக்கு இப் பெயர் இன்றும் வழங்கும். பூப்பு அடைந்தபின் பெண்களுக்கு மணமாகும். சில சமயங் களில் மணமகன் பெண்ணைப் பெறுவதற்குப் பெண்ணின் தந்தை வீட்டி லிருந்து ஒரு ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை வேலை செய்வான். மணமான பெண்கள் கணவனின் சகோதரரோடு கூடி வாழ்தல் குற்ற மாகாது. இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்குச் சோறும் பொன்னும் இட்ட ஏனத்திலிருந்து சிறிது நீரைக் குடிக்கக் கொடுப் பார்கள்.

மண்டை: மண்டைக் கறுப்பனை வழிபடும் கள்ளர் சாதியினர் இப் பெயர் பெறுவர்.

மண்டுவர்: தெலுங்கு நாட்டில் அலைந்து திரியும் மருத்துவர் இப் பெயர் பெறுவர். இவர்களின் மனைவியர் மருத்துவச்சிகளாகத் தொழில் புரிவர்.

மண்ணாடி: பழநி மலையில் வாழும் குறவருக்கு இப் பெயர் வழங்கும்.

மண்ணான்: இது திருவிதாங்கூர் மலைச் சாதியினருக்கும் வழங்கும் பெயர். குழந்தை பிறந்து ஒரு ஆண்டுக்குப் பின் குடும்பத்தில் மூத்தவர் மணி கோத்த மாலையைக் குழந்தையின் கழுத்திற்கட்டி அதற்குப் பெயரிடுவார். இறந்தவர் புதைக்கப்படுவர். பிணங்களைப் புதைக்கு முன் அவற்றின் வாயில் அரிசியிடப்படும். ஒரு ஆண்டின் பின் இறந்தவருக்கு உணவு கொடுக்கப்படும். மண்ணார் தமிழ் பேசுவர். இவர்களுக்கு அம்பட்டனும் வண்ணானும் இல்லை. உரிமை தாய் வழி. மண்ணானென்பது வண்ணானுக்கும் பெயராக வழங்கும்.

மதிகர்: இவர்கள் சக்கிலியருக்குச் சமமான தெலுங்கர். இவர் களின் தேவராட்டி மாதங்கி எனப்படுவாள். மாதங்கி என்றும் கன்னியாக விருப்பாள். ஆனால், அவளுக்குப் பல பிள்ளைகள் இருப்பர். இவ்வா றிருத்தல் குற்றமாகக் கருதப்படமாட்டாது. மாதங்கியின் ஆண்பால் ஆசாதி. இவர்கள் எல்லம்மாவைப் புகழ்ந்து பாடுவர். எல்லம்மா எல்லி எனப்படுவாள். அவள் தீச்சுடர் போல வெளிப்படுவாள். பிராமணர் எல்லம்மாவை இலக்குமி, கௌரம்மா, சரஸ்வதி என வழிபடுவர். கிருட்டிணா மாகாணத்தில் மாதங்கச் சிறுவர் நூல் போன்ற மெல்லிய வாரை இடத்தோள் மீது பூணூலாக அணிவர். மாதங்கர் ஊரம்மா என்னும் தெய்வத்தையும் வழிபடுவர். ஊர்வலத்தில் மாதங்கத் தேவடி யாட்கள் பாடி ஆடுவர். இவர்களின் சடங்குகள் பிரதானம் எனப்படும். பெண்கள் பொட்டுத் தாலி அணிவர். தலைப்பூப்புக் காலத்தில் பெண் ணுக்குப் பத்துநாள் தீட்டு உண்டு. இவர்கள் சாம்பவர் எனப்படுவார்கள்.

மரக்காயர்: மரக்காயர் பெரும்பாலும் பறங்கிப் பேட்டையிற் காணப்படுவர். இப் பெயர் மரக் கலத்தைக் குறிக்கும் மரக்காபி என்னும் அராபிச் சொல்லின் திரிபு. இவர்கள் இந்தியத் தாய்மாருக்கும் அராபியத் தந்தையருக்கும் உதித்தோர். சோனகம் என்பது அராபியாவுக்கு இன்னொரு பெயர். இந்துக்களாயிருந்து மரக்காயராக மாறியவர்கள் புளுக்கைகள் எனப்படுவர். மரக்காயர் அராபித் தமிழ் பேசுவர். தமிழை அராபி எழுத்துக்காளலெழுதுவர்.

மராட்டி அல்லது மராசாரி: மராத்தி மொழி பேசுவோர் மராட்டிகள் எனப்படுவர். உண்மையான மராத்திகள் கோவாவிலிருந்து வந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களின் சிறந்த தெய்வம் மகாதேவி. விதவைகள் மறுமணம் புரிவர். தஞ்சாவூரில் இருந்த கடைசி மராட்டிய அரசன் சிவாசி. இவன் 1855இல் மரணமடைந்தான்.

மலசர்: இவர்கள் கோயமுத்தூர், கொச்சி முதலிய இடங்களிற் காணப்படுவர். காணியாளருக்கு அடிமைகள் போல வேலைகள் புரிவர். தமிழும் மலையாளமுங் கலந்த மொழி பேசுவர். இவர்களின் குடிசைகள் பதி எனப்படும். காளி, மணக்காடாத்தா, மாரியம்மா முதலியன இவர் களின் தெய்வங்களாகும். இவர்களின் வீதிகள், சாலைகள் எனப்படும். நிலமுடையவன் மண்ணாடி எனப்படுவான். திருமணங்கள் பெண் வீட்டில் நடைபெறும். மணமகன் பெண்ணுக்குத் தாலி கட்டுவான். மூப்பன் இருவரின் கைகளையும் சேர்த்து வைப்பான். இவர்கள் இறந்து போன முன்னோரை வழிபடுவர். அவர்களுக்கு உணவு ஏழு இலைகளில் படைக்கப்படும். தலைப்பூப்பு அடைந்த பெண் தனிக் குடிசையில் ஏழுநாள் தங்குவாள். குடிசையின் முன்னால் நாழியும் விளக்கும் வைக்கப் படும். அவள் அவற்றை வலக்காலை முன்னே வைத்துக் கடந்து செல் வாள். பிணங்கள் முகம் கீழே இருக்கும்படி புதைக்கப்படும்; சில சமயங் களில் இருக்கும் நிலையிலும் புதைக்கப்படும். பெண்கள் இடது கைகளில் மாத்திரம் வளையல்கள் அணிந்திருப் பார்கள். இரண்டு கைகளிலும் அணிந்தால் பறையன் அவற்றை உடைத்து மூப்பனுக்கு அறிவிக்க வேண்டும்.

மலைக்காரன் : மலையாளத்தில் மலைகளில் வாழும் உழவர் இப் பெயர் பெறுவர். இவர்களின் தலைமைக்காரன் மலைமூத்தான் எனப் படுவன்.

மலையாளி: மலையாளி என்பதற்கு மலையில் வாழ்பவன் என்பது பொருள். மகமதிய ஆட்சி தொடங்கிய காலத்தில் காஞ்சீபுரத்தி னின்றும் மலையாளத்திற் சென்று வாழ்ந்தோர் மலையாளிகள் எனப்படு கின்றனர் என்னும் கதையுண்டு. இவர்கள் செவரோய் (Sevaroy) மலை களில் வாழ்கின்றனர். செவரோய் மலையில் வாழும் மக்கள் தம்மைக் காஞ்சி மண்டலம் எனக் கூறிக் கொள்வர். இவர்கள் சிவன், விட்டுணு, மாரியம்மன், துரௌபதி முதலிய கடவுளரை வழிபடுவர். சில கோயில் களில் மிகப் பழங்காலக் கல்லாயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கோயில்களில் சத்தியஞ் செய்து வழக்குகளைத் தீர்த்துக் கொள்வார்கள். பொங்கல் விழாவுக்குப் பின் எருது ஆட்டம் என்னும் விழாவை இவர்கள் நடத்துவார்கள். மிக உயர்ந்த குலத்தவன் குரு என ப்படுவான். கிராமத்தி லுள்ள வழக்குகளைத் தீர்க்க வரும்போது இவன் குதிரை மீதேறி வரு வான். மேலே குடை பிடிக்கப்படும். பின்னால் வாத்தியங்கள் ஒலிக்கும். குரு தலைமுறையாக வருபவன். பத்துக் கிராமங் களுக்கு ஒரு தலைமைக் காரனிருப்பான். அவன் பட்டக்காரன் எனப்படுவான். திருமணக் காலத் தில் முதியவர் அறுகம்புல், வெற்றிலைகளில் பாலைத்தொட்டு மணமக்க ளின் தலையைச் சுற்றுவர். மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவான். கலியாண நாள் இலக்கினம் எனப்படும். கன்னியின் மணம் கலியாணம் எனப்படும். விதவையின் மணம் ‘கட்டிக் கிறது’ எனப்படும். வியபிசாரக் குற்றத்துக்கு குரு தீர்த்தங் கொடுத்துப் பெண்ணைச் சுத்தஞ் செய்வார். இவர்கள் இறந்தவரைப் புதைப்பர். குட்ட வியாதியாளரது ம், கருப்பிணி களதும் உடல் சுடப்படும். பெண்ணைப் பெறுவதற்கு மணமகன் பெண் ணின் தந்தை வீட்டிலிருந்து ஒரு ஆண்டாவது பணி செய்ய வேண்டும். கொல்லிமலை மலையாளிகள் திருவரங்கத்துக்கு (சீரங்கத்துக்கு) மாடு நேர்ந்து விடுவர். பிணத்தைப் புதைத்த இடத்தில் அலரிச் செடி நடப் படும். கோயில் மாடுகள் பொலி எருதுகள் எனப்படும். இறந்த கோயில் மாடுகளுக்கு மரியாதை செய்யப்படும். வீட்டில் கோட்டான் இருக்காத படி முகட்டில் புற்பிடிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மழை வேண்டு மாயின் ஒருவர் மற்றவர் மீது சாணி உண்டைகளை எறிவர். சாணியாற் செய்யப்பட்ட பிள்ளை யாரை எருக்கும்பத்துள் புதைப்பர். மழை வந்த வுடன் பிள்ளையாரை எடுப்பர். தலையிடி நோய் கண்டோர் தெய்வத் துக்குச் சிவப்புச் சேவல் நே ர்ந்துவிடுவர். பல் நெருடுகிறவர்கள் கோயிற் பிரசாதத்தை உண்பர். திருச்சினாப்பள்ளி மலையாளிகள் தாயின் சகோ தரியின் பிள்ளையை மணப்பர். இவ் வழக்கினால் சிறுவன் பிராயமடைந்த பெண்ணை மணக்க நேரும். கொல்லிமலைப் பெண்கள் பிற ஆடவரோடு வாழலாம். பெறும் பிள்ளைகள் கணவனுக்குரியனவாகக் கருதப்படும். இரு பாலாரும் பல மணங்கள் செய்வர். மலையாளி என்பது மலை நாட்ட வருக்கும் பெயராகும்.

மலையான்: இவர்கள் வடமலையாளத்திற் காணப்படும் ஒரு கூட்டத்தினர். இவர்களுக்கு நோய் வந்தால் எந்த மூர்த்தியால் (தெய்வத் தால்) நேர்ந்த நோய் எனச் சோதிடனால் அறிந்து தீர்த்து என்னும் ஒருவகைப் பேய்க் கூத்து ஆடப்படும். உச்ச வெளி என்னும் இன்னொரு கிரியையும் செய்வார்கள். இக் கிரியையில் நோயாளி போலியாக உயிருடன் புதைக்கப்படுவான். மலையாளிகள் பெரியண்ணனையும், பத்திரகாளியையும் வழிபடுவர். அப்பொழுது வெளிப்பாடு கூறப்படும். பேய்க் கூத்துக்களிலொன்று நிணவெளி எனப்படும். இலங்கைச் சிங்களவரும் நோயைப் போக்குவதற்குப் பேயாட்டம் ஆடுவர்.

மல்பரயன்: இவர்கள் மலைகளில் வாழும் மண்ணானிலும் மேலான சாதியினர். இவர்களுள் மக்கள் தாயமும் உண்டு. இவர்கள் மொழி மலையாளத்தின் சிதைவு. மணமகனும் மணமகளும் ஒரு இலையிலிருந்து உண்டபின் தாலி கட்டப்படும். பிறப்புத் தீட்டு தந்தைக்கு ஒரு மாதமும், தாய்க்கு ஏழு நாளும் உண்டு. இறந்தவர்களை அடக்கஞ் செய்த இடத்தில் இவர்கள் கல் வைப்பர்.

மளவராயன்: இது அம்பலக்காரரின் பட்டப்பெயர்.

மறவர்: இவர்கள் மதுரை, திருநெல்வேலி, வடஇராமநாதபுரம் முதலிய இடங்களில் வாழ்கின்றனர். இவர்களும் கள்ளர் வகுப்பினரைப் போலப் பிராமணரின் தொடர்பு சிறிதும் இல்லாதவர். மறவர் என்னும் சொல் மறம் என்னும் அடியாகப் பிறந்தது. கள்ளரின் உட்பிரிவில் மறவரும் காணப்படுகின்றனர். மறவரின் தலைவன் சேதுபதி எனப்படு பவன். மறவர் பெரும்பாலும் அரசரின் கீழ் போர்வீரராக விருந்தனர். இவர்களிற் பெரும்பாலோர் இப்பொழுது உழுதொழில் செய்கின்றனர். முன்பு இவர்களிற் பலர் மாடு திருடுவோராக விருந்தனர். திருமணத்தில் கணவனின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலி கட்டுவாள். அதன்பின் சங்கு ஊதப்படும். பெண்கள் குழவி இடல் என்னும் பாட்டுப் பாடு வார்கள். மணத்துக்கு முன்பு மணமகனின் இளைய சகோதரி பெண் வீட்டுக்கு ச் சென்று அவள் கழுத்தில் தாலி கட்டிப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். சில மாதங்களின் பின் மணக்கிரியை நடை பெறும். பல பிள்ளைகள் பிறந்தபின் மணக்கிரியை நடப்பதுமுண்டு. பெண்கள் மறுமணஞ் செய்வார்கள். பெண் பூப்படைந்த செய்தியை வண்ணான் உறவினருக்குக் கூறுவான். 16ஆம் நாள் அவர்களுக்கு முழுக் காட்டப்படும். இராமநாதபுரத்துச் செம்பு நாட்டு மறவர் அகம்படி யாரைத் தமது வேலைக்காரராகக் கருதுவர். இறந்தவனுக்கு அகம்படி யானே கொள்ளிக் குடத்தைச் சுடலைக்குக் கொண்டு செல்வான். பிணக் குழியை ஆண்டி தோண்டுவான். பிணம் சாமி வைக்கப்படும். மறவ ரிடையே பிணத்தைச் சுடும் வழக்கமும் உண்டு. பிணத்தைச் சுமந்து செல்பவர் நில பாவாடை மீது நடந்து போவர். மூன்றாவது நாள் மண்ணினால் இலிங்கம் பிடித்து வை த்து இலிங்கத்துக்கும், இறந்தவர் களுக்கும், காக்கைகளுக்கும் பலியிடப்படும். 16ஆம் நாள் பிணத்தைப் புதைத்த இடத்தில் நவதானியம் விதைக்கப்படும். சல்லி கட்டுதல் என் னும் விளையாட்டு மறவர்களுக்குள் நடைபெறும். அது இப்பொழுது அரசினரால் தடுக்கப்பட்டுள்ளது. குறிக்கப்பட்ட ஒரு தினத்தில் மூர்க்க முள்ள எருதுகள் களரிக்குக் கொண்டு வரப்படும். அவற்றிலொன்றை அவிழ்த்து விட்டால் அது நிற்கும் கூட்டத்திற் பாய்ந்து ஒருவனைத் துரத்திச் செல்லும். அப்பொழுது அவன் நிலத்தில் விழுந்து படுத்துக் கொள்வான். அப்பொழுது அது இன்னொருவனைத் துரத்திச் செல்லும். மக்கள் ஆரவாரஞ் செய்து கொண்டு ஓடுவார்கள். மறவர் வேட்டை யாடும்போது வளைதடியைப் பயன்படுத்துவர். அது இலக்கிற்பட்டு எறிந்தவனிடத்துக்கு த் திரும்பி வரும். காளி, கறுப்பன், மூத்த கறுப்பன், பெரிய கறுப்பன், மதுரை வீரன், ஐயனார், முனிசாமி முதலியோர் இவர் களின் தெய்வங்களாவர். மறவப் பெண்கள் காதைத் துளையிட்டும் துளையைப் பெரியதாக்குவர். மறவரின் பட்டப்பெயர் தேவன், தலைவன், சேர்வைக்காரன், கரையான், இராசவம்சம் என்பன.

மஸ்தான்: இது மகமதிய ஞானிகளுக்கு வழங்கும் பட்டப்பெயர்.

மாங்கல்யம்: இது மாரான்களின் உட்பிரிவு. இவர்கள் நாயரின் தாலி கட்டுக் கலியாணத்தில் அட்டமங்கலங்களைக் கொண்டு செல்வர். அரிசி, நெல், தென்னங்குறுத்து, அம்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வெண்துகில், செப்பு முதலியன அட்டமங்கலத்திலடங்கும்.

மாதங்கர்: இது மதிங்கருக்கு இன்னொரு பெயர். மதிங்கர் தம்மை மாதங்க மக்கள் எனவுங் கூறுவர். இவர்களின் தெய்வம் மாதங்கி. மாதங்க ரால் மரியாதை செய்யப்படும் தேவடியாட்களுக்கும் மாதங்கர் எனப் பெயருண்டு.

மாதவன்: இது நாயரின் உட்பிரிவினராகிய புவிக்காப்பணிக்க ரின் பட்டப்பெயர்.

மாப்பிள்ளைமார்: இவர்கள் மலையாளத்திலுள்ள கலப்பு மகமதியர். இவர்களின் தந்தையர் அராபியர். தாயர் திராவிடர். இவர்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மலையாளத்தில் பெருகத் தொடங்கி னார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா கள்ளிக்கோட் டைக்கு வந்தபோது மாப்பிள்ளைமார் அரசாங்கத்தில் அதிகாரம் பெற்றிருந்தார்கள். திப்புச்சுல்தான் மலையாளத்தை ஆண்ட காலத்தில் பலர் மகமதிய மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். இதனால் இவர்களின் எண் அதிகப்பட்டது. மதம் மாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் முக்கு வர் அல்லது கரையாராவர். மாப்பிள்ளை என்னும் சொல் மருமகன் அல்லது மணமகன் என்னும் பொருள் தரும். இப் பெயர் மலையாளத்திற் குடியேறி மலையாளிகளை மணந்த மகமதியர், கிறித்துவர், யூதர்களைக் குறித்தது. இது இப்பொழுது மகமதியரை மாத்திரம் குறிக்கின்றது. இவர்கள் பெரும்பாலும் மருமக்கள் தாயம் உடையவர்கள். இவர்கள் மகமதிய சட்டத்தின்படி நடப்பர். பெரும் பாலும் பல பெண்களை மணப்பர். இலக்கத் தீவுகளிலும் மாப்பிள்ளை மார் காணப்படுகின்றனர். இவர்கள் அங்கு கோயர், மாலுமி, உருக்காரன், தக்குரு, மிலிக்கன் எனப்படுவர்.

மாரான் அல்லது மாராயன்: இவர்கள் மலையாளத்தில் மேளமடிப்போர். வடமலையாளத்தில் இவர்கள் ஓச்சர் எனப்படுவர். இவர்கள் உயர்ந்த நாயர் குடும்பத்தினருக்கு அம்பட்டராகச் சேவிப்பர். கோட்டயம், குரும்பிர நாட்டுத் தாலுக்காக்களில் இவர்கள் நாவிதர், மேளகாரர் ஆவர். நாயர் இழவு வீடுகளில் புரோகிதராகச் சேவிப்பர். இவர்கள் பெண்களோடு பிராமணர் சம்பந்தம் வைத்துக்கொள்வர். வடதிருவிதாங்கூரில் இவர்கள் மாங்கலியம் எனவும் படுவர். இவர்களுக் குக் குருப்பு, பணிக்கர் முதலிய பட்டப்பெயர்களுண்டு. இவர்களில் ஒரு நூல், இருநூல் என்னும் இரு பிரிவினருண்டு. ஒரு நூலென்பது வாழ் நாளில் ஒரு கலியாணம் மாத்திரம் செய்துகொள்ளும் பிரிவு. இவர்கள் அசுப்பாணிகள் எனவும் படுவர். உயர்ந்த மறவருக்கு ஆறு உரிமைக ளுண்டு. அவை பாணோ(பண்) , சோணி(பாடை), திருமுற்றம்(கோயில் முற்றம் பெருக்கல்) வெளிச் சோறு(பேய்களுக்கு வெளியே வைக்கப்படும் பலிச்சோறு), புச்சோறு(தெய்வத்துக்கு வைக்கப்படுஞ் சோறு) என்பன. இழவு வீட்டில் எள்போடும் கிரியை அவனால் செய்யப்படுகிறது. மலையாளத்தில் வாத்தியங்கள் மரம் எனப்படும். திமிலை சங்கு, செண் குலம், சென்ட(டு) முதலியவற்றை ஒருங்கே ஒலித்தல் பாணி கொட்டுகு எனப்படும்.

மார்வாடி: மார்வாடா தேசத்தவர் மார்வாடி அல்லது மார்வாரி எனப்படும். இவர்கள் பெரும்பாலும் சைவமதத்தினர்.

மாலர்: இவர்கள் தெலுங்கு நாட்டுப் பறையர், மாதங்கர்களைக் குறிக்கும். இவர்களுக்கு அம்பட்டர், வாத்தியகாரர், தேவடியாட்கள் உண்டு. அங்கம்மா, பெத்தம்மா முதலியன இவர்கள் தெய்வங்கள். மாலரின் முக்கிய தொழில் நெசவு. திருமணம் மணமகள் வீட்டில் நிகழும்.

மாலுமி: இலக்கத் தீவுகளில் மரக்கலமோட்டும் முகமதியர் மாலுமிகளெனப்படுவர்.

மாலை(மாலி): இவர்கள் தாம் முன் காசியில் வாழ்ந்து பின் செயப்பூர் அரசரைச் சேவிப்பதற்கு வந்தார்கள் எனக் கூறுவர். பூப்படையுமுன் பெண்கள் மணமுடிப்பர். விதவைகள் மறுமணஞ் செய்வர். மாலை என்பதற்கு மாலை கட்டிகள் என்பது பொருள். இவர்கள் கோயில்களில் வேலை புரிவார்கள். ஒரியமொழி பேசுவார்கள்.

மானிகட்டாள்: இது தேவதாசிக்கு இன்னொரு பெயர்.

மீதாரக்காரன்: இவர் தெலுங்கு, கன்னட, ஒரிய தமிழ் நாடுகளில் மூங்கிற் கூடை, பாய் முதலியன முடைகின்றவர்களாவர். இவர்கள் வீருல்லு (மணமாகாது இறந்த வாலிபர்), பேராண்டாலு (மணமாகாது இறந்த பெண்கள் அல்லது கணவனுக்கு முன் இறந்தவர்கள்) என்போரை வழிபடுவர். இவர்களுள் சிவவழிபாட்டினர் இறந்தோரைச் சமாதி வைப்பர்; வைணவர் சுடுவர். இவர்கள் இயந்திரங்களை எழுதி வைத்து அடைத்த தாயத்துகளை அணிவர். விதவைகள் தாலியும் காப்பும் அணியமாட்டார்கள். காலின் இரண்டாவது விரலில் அணியும் மெட்டு என்னும் மோதிரமும் அணியார்கள்.

மீலதேவர்: இவர்கள் தென்கன்னடத்துத் தேவடியாட்களாவர்.

மீனோன்: இது சமரின் (வடமலையாள அரசன்) தனது எழுத் தாளனுக்குக் கொடுக்கும் பட்டப்பெயர். இப்பொழுது அது நாயரில் ஒரு பிரிவினருக்குப் பெயராக வழங்குகின்றது. மலையாளத்தில் கிராமக் கணக்கன் (கர்ணம்) மீனோன் எனப்படுவான். இப் பட்டம் கொச்சி அரசனால் பலருக்குக் கொடுக்கப்பட்டது. இது தெற்கே வழங்கும் பிள்ளைப்பட்டத்துக்குச் சமம். மீனோன் பட்டம் கொடுத்தபின் அவனுக்கு ஓலையும் எழுத்தாணியும் கொடுக்கப்படுகிறது. இப் பட்டம் பெற்றவர்களின் பெண்வழியார் மாத்திரம் இப் பட்டத்தைப் பயன் படுத்தலாம். மீனோன் என்பது போனஹீத இராவ். இராவ் என்பது மராட்டிப் பட்டப்பெயர்.

முகதோரர்: இவர்கள் கொண்டதோரரின் ஒரு பிரிவினர். இவர்களின் மொழி தெலுங்கு. அண்ணா, ஐயா, தோரா என்பன இவர் களின் பட்டப்பெயர். இவர்களில் சூரியவமிசம், நாகவமிசம் என இரு பிரிவுகளுண்டு. ஒருவன் தாய்மாமன் மகளை மணக்கலாம். மணமகன், மணமகள் என்னும் இருவரின் விரல்களையும் தாய்மாமன் சேர்த்து வைப்பான்.

முக்குவன்: முக்குவர் மலையாளக் கடல்களில் மீன் பிடிப்பவர்க ளாவர். தாழ்ந்த வகுப்பினருக்கு இவர்கள் பல்லக்குச் சுமப்பர். ஓடக்கார ராகவும் தொழில் செய்வர். பரம்பரையாக வரும் இவர்களின் தலைவன் அரையன் எனப்படுவன். இவர்களின் முக்கிய தெய்வம் பத்திரகாளி. இவர்கள் குலத்தில் ஒருவன் பூசாரியாக விருப்பான். பிராமணர் கோயில் களில் இவர்கள் நுழைதல் கூடாது. வடமலையாளத்தில் இவர்களுக்கு மருமக்கள் தாயமும், தெற்கில் மக்கள் தாயமும் உண்டு. இவர்களின் முக்கிய தொழில்கள் சுண்ணாம்புச் சூளைவைப்பது, மஞ்சள் சுமப்பது முதலியன. மஞ்சள் என்பது தடியில் கட்டப்பட்ட ஒரு வகை ஊஞ்சல் மீது ஆளை வைத்துச் சுமத்தல். இவர்கள் இலங்கையிலிருந்து சென்றவர்களெனக் கருதப்படுவர். முக்குவர் தீயரிலும் தாழ்ந்தோர். இவர் களிற் பலர் மேல்நிலைக்கு வந்துள்ளனர். இவர்களிற் பொன்னில்லம், செம்பில்லம், காரில்லம், காச்சில்லம் என நான்கு பிரிவுகளுண்டு. இவர் களுள் காவுத்தீயன் அல்லது மணிமகன் என்னும் பிரிவு முண்டு. இவர்கள் மற்றவர்களுக்கு மயிர்வினையும் செய்வர். இவர்களின் சங்கங்கள் இராச்சியம் எனப்படும். பெரியவர்கள் கடவன் எனப்படுவார்கள். தலைவன் அரயன் அல்லது கரணவன் எனப்படுவன். கரணவன் அரச னால் தெரியப்படுவான். இவர்களுக்கு மூட்டப்பட்ட ஓலைக்குடை, தடி, அரைக்குக் கட்டும் சிவப்புத்துணி முதலிய அடையாளங்களுண்டு. வெளிப்பாடு கூறுவோர் ஆயத்தன் அல்லது அத்தன் எனப்படுவர். ஆயத்தன் என்பது ஆயுதத்தன் என்பதன் மரூஉ ஆகலாம். உருக்கொள் பவன் அல்லது தெய்வமேறுபவன் வாளை வைத்திருப்பான். பெண்கள் பூப்படைந்தபின் மணம் முடிக்கப்படுவர். கருப்பவதிக்கு ஏழாவது மாதம் புளிக்குடி அல்லது நெய்க்குடி என்னும் சடங்கு நடத்தப்படும். குழந்தை பிறக்கும் வரையும் கணவன் தாடி வளர்ப்பான். பிள்ளை பிறந்தபின் மூன்றாவது நாள் மயிர்வினை செய்து கொள்வான். தீட்டு ஏழு நாட்களுக் குண்டு. இறந்தவனின் மூத்தமகன் ஆறு மாதங்களுக்கு மயிர்வினை செய்து கொள்ள மாட்டான்.

முசாத்து: இவர்கள் மலையாளத்திலுள்ள மூத்ததுகளாவர். இவர்கள் அம்பலவாசிகளிலும் உயர்ந்தோர். நம்பி, நம்பியார் என்னும் பட்டங்கள் இவர்களுக்கு உண்டு. இவர்களின் பெண்கள் மண அம்மா மார் எனப்படுவர். இளையதுகளும் மூத்ததுகளும் மலையாளத்தில் நயினாக்கள் எனப்படுவர். மூத்ததுகளின் வீடுகள் மடம், இல்லம் எனப் படும். நம்பூதிரிகளின் வீடுகளுக்கும் இப் பெயர்கள் உண்டு. திருமணத் துக்கு முன் பெண்கள் திருவளையமும், குழலுமணிவர். விழாக்காலங் களில் பலக்கா வளையமணிவர். திருமணத்துக்குப் பின் காதில் சூட்டும், கழுத்தில் தாலியுமணிவர். விதவைகள் சூட்டு மாத்திரமணிவர். மூத்ததுகள் உட்கோயில்களின் படிகளைக் கழுவுவர். விக்கிரகங்களைப் பாதுகாத்துக் கொள்வர். கோயிற் பிரசாதம் முதலியவற்றைக் கொண்டு வாழ்வர். இவர்களின் குடும்பத்தில் மூத்தவன் மாத்திரம் மணம் செய்து கொள்வன். மற்றவர்கள் அம்பலவாசிப் பெண்களைச் சம்பந்தம் வைப்பர். ஆண்கள் நான்கு பெண்கள் வரையில் மணக்கலாம். மூத்த மகனுக்குப் பாட்டனின் பெயரிடப்படும். இரண்டாவது மகனுக்குத் தாய்வழிப்பாட்டனின் பெயரிடப்படும். பூணூலணிதல் ஏழு வயது முதல் பதினொரு வயதுக்கிடையில் நடைபெறும். இவர்களுக்கு மரணத்தீட்டு பத்து நாள். கோயிலுள் இருந்து இவர்கள் உண்ணலாம். மூத்ததுகள் அம்பலவாசிகளிலும் உயர்ந்தோரும், இளையதுகள் பிராமணருக்குத் தாழ்ந்தோருமாவர். முசாத்து மூத்தது என்னும் பெயர்கள் அகப்பொது வல் என்னும் பெயரோடு ஒற்றுமையுடையன. தடம்பு மீது கடவுளின் திருவுருவம் வைத்து வீதிவலம் செய்யப்படும். தடம்பு என்பது கேடகம் போன்று கவிழ்ந்த தட்டு. அடிகள் என்போரும் பிடாரரும் ஒருவரெனத் தெரிகிறது. பிடாரர் பூணூலணியாது கோயிற் பூசை செய்வர்.

முடவாண்டி: இவர்கள் கொங்கண வேளாளரில் ஒரு பிரிவினர். ஆண்டி என்பதற்குப் பரம்பரைப் பிச்சைக்காரர் என்பது பொருள்.

முதுவர்: இவர்கள் கோயம்புத்தூர், மதுரை, மலையாளம் பகுதிகளில் காணப்படும் உழவராகிய மலைச்சாதியினர், இவர்கள் மற்றவர்களைத் தகப்பன்மார் என்பர். இவர்களுக்கிடையில் கஞ்சன், கறுப்புக் குஞ்சி, குஞ்சித, கார்மேகம் முதலிய பெயர்கள் பெரிதும் வழங்கும். கறுப்பாயி, கூப்பி, பேய்ச்சி முதலிய பெயர்கள் பெண்களுக்கு வழங்கும். கடைசியாகப் பெறும் ஆண் பிள்ளைகளுக்கு இராமன், இலக்குமணன் என்றும், இரட்டைப் பெண்களுக்கு இலட்சுமி, இராமி என்றும் பெயரிடப்படும். இவர்களின் தலைமைக்காரன் மேல்வாகன் எனவும், உதவி அதிகாரி மூப்பன் எனவும் படுவர். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. நிமித்தங்களில் இவர்களுக்கு நம்பிக்கையுண்டு. ஒருவன் மாமன் மகளை மணக்கலாம். மதம் சம்பந்தமான சடங்குகளுக்கு இவர்கள் குருமாரை அழைப்பதில்லை. இறந்தவர்களின் முகம் பார்க்கும் படியாகப் பிணத்தைப் புதைப்பர். தீத்தட்டிக் கற்களாலும், இரும்பாலும் தீ மூட்டுவர். கருங்குரங்கின் இறைச்சியை உண்பர். இருளரும் முதுவரும் மலைப்பக்கங்களில் தொங்கும் தேன் கூடுகளிலிருந்து தேனெடுப்பர்.

முத்திரையன்: பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும். இது தெலுங்கில் முத்திராசன் என வழங்கும். இத் தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர். இவர்களின் பட்டப் பெயர்கள் தோராவும், நாயுடுவும். இவர்கள் ஈசல் களைப் பிடித்து வற்றலிட்டு பானைகளில் சேமித்து வைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள்.

மூதான்: இவர்கள் மலையாளத்திலுள்ள வாணிகம் புரியும் வகுப்பினர். பெண்கள் செட்டிச்சிகள் எனப்படுவர். இவர்கள் நாயரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவர். பாலக்காடு, வள்ளுவநாடு முதலிய இடங்களில் இவர்கள் பெரும்பாலும் காணப்படுவர். இவர்களிற் சிலர் தமக்கு எழுத்தச்சன் என்னும் பட்டப்பெயரை வைத்து வழங்குவர். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. இவர்களின் தீட்டுக் கழிப்பு கொட்டுவன் என்னும் புரோகிதனாற் செய்யப்படும்.

மெய்காவல்: இது பண்டாரங்களுக்கு ஒரு பெயர். இவர்கள் கடவுளின் மெய்யைக் காப்பவர்கள்.

மேஸ்திரி: இது போர்ச்சுக்கேய (Meytro) என்னும் சொல். இது இந்திய நாட்டு மொழிகளில் சென்று வழங்குகின்றது. மேஸ்திரி என்ப தற்குத் திறமையான வேலையாள் என்பது பொருள். இது தமிழ்நாட்டில் செம்மாருக்கும் வேறு சில தொழிலாளருக்கும் பெயராக வழங்கும்.

மேளக்காரன்: இவர்கள் வாத்தியக்காரர். தோரிய மேளக்காரன் பெரிய மேள சேவை மாத்திரம் சேவிப்பன். தமிழ் மேளக்காரர் தேவடி யாட்களோடு சம்பந்தப்பட்ட சின்ன மேள சேவனையும் செய்வர். தேவடியாளின் மகள் தாய் செய்து வந்த தொழிலையே செய்வாள். நட்டுவன் என்போர் தேவடியாட்களுக்கு நடனம் பழக்குவோர்.

மொண்டி: இலண்டா, கல்லடிச்சித்தன், கல்லடிமங்கன் என்பன ஒரே கூட்டத்தினரைக் குறிக்கும் பெயர்கள். இவர்கள் பிச்சை எடுக்கும் பரம்பரைப் பண்டாரங்கள். பிச்சையிடாவிட்டால் இவர்கள் தமது தொடையை வெட்டுவார்கள்; கல்லில் தலையை உடைப்பார்கள்; வாந்தி எடுப்பார்கள்.

மொயிலி: இவர்கள் தென்கன்னடத்தில் கோயில்களில் வேலை புரிவோர். பெண்கள் தமது கணவரோடு வாழ விரும்பாவிடிலும், விதவைகள் மறுமணம் செய்ய முடியாமலிருந்தாலும் அவர்கள் கோயிலுக்குச் சென்று கோயிற் பலிச் சோற்றில் சில உண்டைகள் பெற்று உண்பார்கள். பின்பு அவர்கள் அரசினர் உத்தியோகத்தரிடம் கொண்டு போகப்படுவர். அவர்கள் அவ்வாறு செய்யத் துணிந்தமைக்குக் காரணம் விசாரிக்கப்படும். பிராமணப் பெண்களாயின் கோயிலினுள் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்குத் தினம் உணவும் ஆண்டில் ஒரு துணியும் கிடைக்கும். அவர்கள் கோயிலைப் பெருக்கவும் சாமரை வீசவும் வேண்டும். அவர்கள் பெரும்பாலும் பிராமணரின் அல்லது உத்தியாகத்தரின் வைப்பாட்டிகளாக விருப்பார்கள். அவர்கள் பெறும் பிள்ளைகள் மொயிர் எனப்படுவர். அவர்கள் நூலணிந்து கோயிலைப் பெருக்கிக் கோயிற் பணிவிடை செய்வர். அவர்கள் தேவடிகர் எனவும் படுவர்.

மொராசு: இவர்கள் மைசூரில் காணப்படுவர். மணம் பேசும் பருவம் வந்ததும் பெண்கள் வலக்கையின் மூன்றாம் நாலாம் விரல்களை வெட்டிவிடுவர். இவ் வழக்கு ஆஸ்திரேலிய, பொலிநீசிய, அமெரிக்கப் பழங்குடிகளிடையும் காணப்படுகின்றது.

மோகெர்: இவர்கள் துளுப்பேசும் தென் கன்னட மீன்பிடிக்காரர். இவர்களின் குடியிருப்பு பட்டினமெனப்படும். சென்னையிலுள்ள மீன் பிடிக்காரர் பட்டணவர் எனப்படுவர். இவர்களின் தலைமைக்காரன் குறிக்காரன் எனப்படுவான். இப் பதவி தலைமுறையாக வருவது. இவர் களின் உரிமை பெண்வழி. கேவா என்னும் துளு அம்பட்டன் இவர்க ளுக்குச் சிரைக்க மாட்டான்; கொங்கணி அம்பட்டர் சிரைப்பர். குழந்தை பிறந்து ஏழாவது நாள் வண்ணாத்தி குழந்தையின் அரையில் நூல் கட்டிப் பெயரிடுவாள். இப் பெயர் சிலநாட்களின் பின் கைவிடப்படும். பின் வேறு பெயரிடப்படும். இவர்களின் பட்டப்பெயர் மரக்காவேரு.

யூதர்: கொச்சித்தீவில் கறுப்பு யூதர், வெள்ளை யூதர் என இரு வகை யூதர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் நெடுநாட்களுக்கு முன் பலஸ்தீன் நாட்டினின்றும் வந்தோராவர். பாஸ்கர இரவிவர்மன் என்னும் அரசன் முசிறிக் கோட்டில் வாழ்ந்த யூதனொருவனுக்கு அளித்த பட்டைய மொன்று காணப்படுகின்றது. அது அவ் வரசனின் ஆட்சியில் 36வது ஆண்டு யோசேப் இரப்பான் அஞ்சுவண்ணன் என்னும் யூதனுக்கு அளிக்கப்பட்டது. இவனுக்குக் கொடுக்கப்பட்ட உரிமைகள் வருமாறு: அவன் ஐந்து கொடிகளைப் பயன்படுத்தலாம். உலாவச் செல்லும்போது வேலையாட்கள் தீபம் பிடித்துச் செல்லலாம். யானை குதிரைகளில் ஏறிச் செல்லலாம். அரசரைப்போல பவனி வரலாம். பகற்காலத்தில் தீவர்த் தியைப் பயன்படுத்தலாம். பலவகை வாத்தியங்கள், பெரிய மேனம் முதலியவற்றை ஒலிப்பிக்க உரிமையுண்டு. நில பாவாடையிற் செல்ல லாம். அரசரைப்போல் மேற்கட்டியின் கீழ் இருக்கலாம். இரப்பானின் கீழ்உள்ள எழுபத்திரண்டு குடும்பங்களும் அவனுக்குக் கீழ் அடங்கி நடக்க வேண்டும். இச் சாசனம் கலியுகம் 3481இல் (கி.பி.370ல்) எழுதப் பட்டது. யூதர் சாலமன் அரசன் காலம் முதல் (கி.மு. 900) மலையாளக் கரைகளுக்கு வந்து வாணிகம் புரிந்தார்கள். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சைரசு (Cyrus) என்னும் பாரசீக அரசனின்கீழ் அடிமைகளாக வாழ விரும்பாத யூதமக்கள் இந்தியாவில் வந்து குடியேறினர்.

ஹன்டர் (E.W.Hunter) யூதர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவிற் குடியேறியிருந்தார்கள் எனக் கூறியுள்ளார். செங்கடலி லுள்ள மேஓஸ், ஹேமஸிலிருந்து அராபியர் இலங்கை, மலையாளம் முதலிய நாடுகளுக்குச் சென்ற ஓர் உரோமானியர் மலையாளத்தில் ஒரு யூதர் குடியிருப்பைக் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கண்டார் உவிஷ் (Wish) என்பார். தோமஸ் ஞானியார் கி.பி. 5இல் இந்தியாவை அடைந்தா ரென்றும் யூதர் கி.பி. 69இல் இந்தியாவுக்குச் சென்றனர் என்றும் கூறியுள்ளார்.

கறுப்பு யூதர், தாம் முன் வந்தவர்களென்றும் வெள்ளை யூதர் பின் வந்தவர்களென்றும் கூறுவர். கறுப்பு யூதர் யூதரல்லரென்றும் அவர்கள் யூத மதத்துக்குத் திருப்பப்பட்ட இந்தியரென்றும் வெள்ளை யூதர் கூறுவர். எருசலேம் அழிக்கப்படுவதற்குப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் அங்கு நின்று துரத்தப்பட்டவர்களே தாம் என்று கறுப்பு யூதர் கூறுவர். அவர் கள்ளிக்கோட்டைக்கு வந்து பின் கரங்கனூரை அடைந் தார்கள். கறுப்பு யூதர் இன்னும் செப்புப் பட்டையத்திற் சொல்லப்பட்ட உரிமைகளை அனுபவிக்கின்றனர். அவர்கள் தமது குழந்தைகளைப் பிறந்தபின் எட்டாம் நாள் கோயிலுக்குக் கொண்டு செல்லும் போது பட்டுக்குடை, தீபம் முதலியவற்றைக் கொண்டு செல்கின்றனர். மணமக்கள் வீதிவலம் வரும்போது நிலபாவாடை விரித்துத் தெருக்கள் தோரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. நாலு தடிகளில் வெள்ளாடை கட்டப்பட்ட மேற்கட்டி அவர்கள் மீது பிடிக்கப்படுகிறது. தீவர்த்தியும் கொண்டு செல்லப்படுகிறது. வெள்ளை யூதர் இவை யொன்றையும் கையாளுவதில்லை. முன் வந்து குடியேறிய யூதர் அடிமைகளை வாங்கினார்கள். அவர்கள் அவர்களுக்கு விருத்த சேதனஞ் செய்து அவர்களை இஸ்ரவேலரைப் போல் நடத்தினார்கள். அவர்களின் சமயக் கிரியைகளால் யூதராக்கப்பட்ட பெண் அல்லது ஆண் அடிமைகள் ஒரு போதும் விற்கப்படவில்லை. யூதர் அவ்வடிமைகளுடன் கலப்பதால் கறுப்பு யூதர் தோன்றினார்களென சிலர் கருதினார்கள். இதனால் கறுப்பு யூதர் முற்றாகக் கலப்பு யூதர் எனக் கூற முடியாது. வெள்ளை யூதர் பரதேசிகள் எனப்படுவர். யூத மணமக்கள் கலியாணம் முடிக்கக் கோயிலுக்குச் செல்வதன் முன் மணமகளின் உடன் பிறந்தாள் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவாள்.

யூரேசியர்: இவர்கள் ஐரோப்பியத் தந்தைக்கும் இந்தியத் தாய்மாருக்கும் பிறந்தோர். சட்டைக்காரர் என்பதும் இவர்களுக்கு மற்றொரு பெயர். பறங்கி என்பதும் இவர்களைக் குறிக்க வழங்கும் பெயர். பறங்கி என்பது பிறாங்க் (Frank) என்பதன் திரிபு. பிறாங்க் என்பதற்கு ஐரோப்பியன் என்பது பொருள். இவர்கள் வலண்டிஸ் (Walladez) அல்லது உல்லாண்டி (Oollandy) எனவும் படுவர். இவை ஒல்லாந்திஸ் (Hollandis) என்பதன் திரிபு. இப் பெயர் 17ஆம் , 18ஆம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தர் வழியாக வந்தது.

யோகி: தெலுங்குப் பிச்சை யெடுக்கும் பண்டாரங்கள் யோகிகள் எனப்படுவர். தமிழ்நாட்டில் இவர் தோட்டியான் எனப்படுவர்.

வடுகன்: தெலுங்கு நாட்டவர் வடுகர் எனப்படுவர். தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுகின்றவர்களும் வடுகர் எனப்படுவர்.

வட்டக்காரன்: இவர்கள் வன்னியர், செக்காருள் ஒரு பிரிவினர். இவர்கள் வட்டக்காட்டார்களாவர்.

வண்ணத்தான்: இவர்கள் நாயருக்கு வெள்ளை வெளுக்கும் வெளுத்தெடாதாராவர்.

வண்ணான்: இவர்கள் தாம் வீரபத்திர வமிசத்தவர் எனக் கூறுவர். வண்ணார் அம்பட்டரிலும் தாழ்ந்த வகுப்பினர். பெண்கள் பூப்படைந்த பின் மண முடிப்பர். திருமணத்தில் மணமகனின் உடன்பிறந்தாள் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவள். இவர்களின் சாதித் தெய்வம் குருநாதன், மலையாள வண்ணான், மண்ணான் எனப்படுவர். மலையாள மலைச்சாதியினருள் ஒரு கூட்டத்தினரும் மண்ணா ரெனப்படுவர். இவர்களை மண்ணான் அல்லது வண்ணான் எனக்கொண்டு மயங்குத லாகாது. மண்ணாருள் பெண்கள் பல கணவரை மணப்பர். மலையாளத் தில் பகவதி கோயில்களில் வண்ணான் பூசாரியாக விருப்பான்.

வலையர்: இவர்கள் வலையால் மீன்களையும், பறவைகளையும் பிடிப்பர். அம்பலக்காரன். சேர்வைக்காரன், வேடன், சிவியான், குருவிக் காரன் முதலியனவும் இவர்களின் பெயர்களாக வழங்கும். அம்பலக்காரர் தாம் கண்ணப்ப நாயனாரின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவர். மணமகளின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலி கட்டுவள். மணத் துக்கு முன் பெண்கள் பிள்ளைப் பெறுவது குற்றமாகக் கருதப்பட மாட்டாது. அவ்வாறு பிறக்கும் பிள்ளைகள் வேறுபாடின்றிச் சாதியிற் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வியபிசாரிப் பெண்கள் எருக்கமாலை சூட்டி சேற்றுக்கூடையைச் சுமந்து கிராமத்தைச் சுற்றிவரச் செய்வார்கள். வலையர் தெய்வங்கள் சிங்கப்பிடாரி(ஐயனார்), பதினெட்டாம்படிக் கறுப்பன் முதலியன.

வல்லம்பன்: இவர்கள் தஞ்சாவூர், திருச்சி, மதுரை மாவட்டங் களில் வாழும் உழவரின் ஒரு பிரிவினர். இவர்கள் வேளாளத் தந்தையருக் கும் வலையத் தாய்மாருக்கும் தோன்றியவர்கள் எனக் கருதப்படுவர். இவர்களின் சாதித் தலைவன் சேர்வை எனப்படுவன். இவர்களில் ஆடவர் தாய்மாமன் மகளை அல்லது தந்தையின் உடன்பிறந்தாள் மகளை மணப்பர். சில சமயங்களில் பத்து வயதுப் பையனுக்கு இருபது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள பெண் கலியாணம் செய்யப்படுவாள். அப் பொழுது அவள் கணவனின் தமையன் அல்லது வளர்ந்த உறவினனைச் சேர்ந்து பிள்ளைகளைப் பெறுவாள்.

வள்ளுவன்: இவர்கள் பறையர், பள்ளிகளின் புரோகிதராவர். பிராமணருக்கு முன் வள்ளுவர் பல்லவரின் புரோகிதராக விருந்தனர். பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நூலணிவர். இவர்களின் ஆண்களும் பெண்களும் சோசியம் சொல்வர். சாதித்தலைவன் கோற் காரன் எனப்படுவன். திருமணக் காலத்தில் மணமகன் பரியம், உறவு முறைக்கட்டு (பெண்ணின் சுற்றத்தாருக்குக் கொடுக்கும் பணம்) பந்தல் வரிசை முதலியவற்றைப் பெண் வீட்டாருக்குக் கொடுப்பான். மணவறை, குடவிளக்கு, அலங்கார விளக்கு, பாலிகை விளக்கு முதலியவைகளால் அலங்கரிக்கப்படும். அதைச் சுற்றிக் குடங்கள் வைக்கப்படும். இவை குடும்பத் தெய்வங்களைக் குறிப்பன. வள்ளுவர் வள்ளுவப் பண்டா ரங்கள் எனப்படுவர்.

வன்னியன்: இவர்கள் வலையன், அம்பலவர், பள்ளிகளில் ஒரு பிரிவினர்.

வாலன்: இவர்கள் கொச்சிப் பக்கங்களில் வாழும் மீன் பிடிக்கும் குலத்தினர். இப் பெயர் வலையன் என்பதன் திரிபு. பூப்படையமுன் பெண்களுக்குத் தாலிகட்டுக் கலியாணம் நடத்தப்படும். ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம். விதவைகள் மறுமணம் புரியலாம். தலைப்பூப்பெய்திய பெண் நாலுநாள் தனியறை யில் விடப்படுவாள்; ஐந்தாவதுநாள் அவள் தோய்ந்தபின் விருந்து நடைபெறும். இவர்களின் சாதித்தலைவன் அரயன் எனப்படுவன். அவன் அரசனின் “தீட்டுறத்தினாலை”த் தெரிவிப்பான் (தீட்டு - எழுத்து) இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. இறந்தவனின் மகன் ஒரு மாதம் மயிர்வினை செய்துகொள்ள மாட்டான்.

வன்னியன்: மலையாளச் செக்கான் போன்று எண்ணெயூற்று வோர் வன்னியர் எனப்படுவர். இவர் வீடுகளில் வண்ணார் உண்ப தில்லை. இவர்களின் சாதிப் பட்டப்பெயர் செட்டி. மணமாகாதவர்கள் இறந்தால் எருக்கஞ் செடிக்குப் போலி மணச் சடங்கு நடத்தப்படும்.

வாரியர்: இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர். இவர்கள் பெரும்பாலும் நல்ல வைத்தியரும் சோதிடருமாவர். மணமான பெண்கள் நாயர்ப் பெண்களைப் போலத் தலையின் இடப்பக்கத்தே குடுமி முடிந்திருப்பர். இவர்களின் தாலி மாத்திரா எனப்படும். அது மத்தளம் போன்ற வடிவு உடையது. மற்ற அணிகள் எந்திரமும் குழலும். இவர்கள் நாயர்ப் பெண்களணியும் தோடணிவர்; நெற்றியில் சந்தனத் தால் குறி யிடுவர். இவர்கள் கோயிலிற் செய்யும் வேலை கழகம் எனப்படும். இது ஒருபோது கழுவு என்னும் அடியாகப் பிறந்திருக்கலாம். கோயிலில் வறியதுகள் சொல்லும் வேலையை இவர்கள் செய்தல் வேண்டும். இவர் களுக்கு மருமக்கள் தாயமுண்டு. திருவிதாங்கூரில் ஓணத்துக்காரர் என்னும் வறியதுகளின் சொத்து ஆண், பெண் என்னும் இரு பாலாருக்கும் சம மாகப் பிரிக்கப்படும். பெண்கள் பிராயமடையு முன் தாலிகட்டுச் சடங்கு நடக்கிறது. குடிவைப்பு முறையில் இது செய்யப்படுமாயின் சம்பந்த முறையில் கலியாணம் மறுபடியும் செய்யப் பட வேண்டியதில்லை. பருவ மடைந்த பெண்கள் மணமாகும் வரை கோயிலுள் நுழைதல் கூடாது. இவர்களுக்கு மரணத் தீட்டுப் பன்னிரண்டு நாள்.

வாலி சுக்கிரீவர்: இலம்பாடிகள் இப் பெயர் பெறுவர். இவர்கள் தாம் வாலி சுக்கிரீவர் வழித்தோன்றல்கள் என்பர்.

வில்குருப்பு: இவர்கள் மலையாளக் கம்மாளருக்கும் அம்பட்ட ருக்கும் குருக்கள். நாயரின் தாலிகட்டுக் கலியாணத்துக்கு இவர்கள் ஒரு வில்லும் சில அம்புகளும் கொடுக்க வேண்டும்.

வீரபத்திரர்: இவர்கள் தமிழ்நாட்டு வண்ணார். இவர்கள் தம்மை வீரபத்திரர் வமிசத்தவர் எனக் கூறிக்கொள்வர்.

வெட்டியான்: இவன் பறைச்சேரியிலுள்ள ஒரு தொட்டியான் அல்லது தோட்டி என்னும் உத்தியோகத்தன். இவன் வயல்களுக்கு நீர் பாயும்படி கால்வாய்களைத் திறந்து விடுவன். பிரசித்தப்படுத்தும் (செய்தி களை அறிவிக்கும்) மேளமடிப்பான். இவன் சுடலைக்குத் தலைவன். பறையரின் மணங்களில் பானைகள் வணங்கப்படும். வெட்டி யான் வகுப்பினர் வலங்கையினர்.

வேடன்: இவர்கள் வேட்டையாடும் சாதியினர். இவர்களிற் சிலர் போர் வீரர்களாக விருந்தனர். வேட்டுவர் என்னும் சாதியினர் தாம் வேடருக்கும் உயர்ந்தோர் எனக் கூறுகின்றனர். விதவைகள் கணவனின் சகோதரனை மணப்பர். இவர்கள் தமது பரம்பரை கண்ணப்ப நாயனாரி லிருந்து வருகின்ற தெனக் கூறுவர். வேடரின் பட்டப்பெயர் நாயக்கன். சேலம் பகுதியில் வேடன் திருவளர் எனப்படுவன். இவர்கள் கலியாணம் பொருத்துகின்றமையால் கட்டுக்கொடுக்கிற சாதி எனப் படுவர். இவர்கள் மேல் வாயிற் பல்லை அராவிக் கூராக்கி விடுவார்கள். காடரும் இவ்வாறு செய்வர். இவர்களின் கடவுள் சாத்தன். இவர்களும் குரங்கின் இறைச்சியை உண்பர். பூப்புக்காலத்தில் பெண்கள் தனிக் குடிசையில் ஐந்து நாட்களுக்குத் தங்கியிருப்பர்.

வேட்டுவன்: இவர்கள் சேலம், கோயம்புத்தூர், மதுரைப் பகுதிகளிற் காணப்படும் உழுதொழில் செய்யும் வேட்டையாடும் மக்கள். வேடர் இலங்கை வேடருக்கு இனமுடையவர். இவர்களுக்கு அம்பட்டர் உண்டு. இவர்கள் வேட்டுவ அம்பட்டர் எனப்படுவர். வேட்டுவரிலிரு பிரிவின ருண்டு. ஒரு பிரிவினர் ஆடை உடுப்பர்; மற்றவர் இலைகளை உடுப்பர்.

வேலக்காட்டாள்வான்: இவர்கள் திருவிதாங்கூர் அம்பட்டரின் தலைமைக்காரர். இவர்கள் அரசனுக்கு மயிர்வினை செய்வர். வடமலை யாளத்தில் இவர்கள் வலிஞ்சியான், நாவிதன், நாசுவன் எனப்படுவர். வடமலையாளத்தில் இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு.

வேல்: இவர்கள் மலையாளப் பறையரில் ஒரு பிரிவினர். மலை யாள மலைச்சாதியினரில் ஒரு பிரிவினரும் வேலன்மார் எனப்படுவர்.

வேளன்: (வேளன் - குயவன்) திருவிதாங்கூரில் பறையரும் வேளான் எனப்படுவர். மலையாளத்தில் பேய்க் கூத்தாடும் பாணர் போன்ற ஒரு சாதியினர் வேளன் (வேலன்) எனப்படுவர். பெண்கள் வெளுத்தெடாத்தி எனப்படுவர். இவர்கள் பிராமணர் கோயில்களில் நுழைதல் கூடாது. இவர்கள் தளக்கல்லுக்கு வெளியே நிற்றல் வேண்டும். இவர்களுக்குத் தாலிக் கட்டுக் கலியாணமும் சம்பந்தமும் தனித்தனியே நடத்தப்படும். வறிய குடும்பப் பெண் பன்னிரண்டு வயதாகியிருக்கும் போது தாலிகட்டிக் கொள்வாள். இது பகவன் தாலி எனப்படும். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு.

வேளம்பர்: இவர்கள் கயிற்றில் ஏறிக் கூத்தாடும் கூத்தாடிகள்; கழைக் கூத்தர்.

வைராவி: வைராவிகள் பண்டாரத்தில் ஒரு பிரிவினர். மதுரைப் பகுதியிற் வைராவிகள் மேளகாரரில் ஒரு பிரிவினர்.